கண்ணில் தென்படும் டிஷர்ட் அழகிகள்! - கடிதங்கள் - கதிரவன்

 












12.3.2022

மயிலாப்பூர்

அன்புள்ள தோழர் கதிரவனுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? எங்கள் மேன்ஷனில் கேரளத்து சேட்டா ஒருவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி எனக்கு நினைவில் உள்ள சித்திரம் மலமோ, சிறுநீரோ இதோ வந்துவிட்டது என்ற நிலையில்தான் அவருக்கு நினைவுக்கு வரும். உடனே 50 மீட்டர் தூரத்திலுள்ள பொதுகழிவறைக்கு உசேன் போல்ட் போல ஓடுவார். விஷ்க் என்ற காற்று உராயும் சத்தம் தான் கேட்கும். ஆள் கடந்திருப்பார். அண்மையில் தான் ஆளைக்காணோம். அறையைக் காலி செய்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. அறையை சுத்தம் செய்த கோபி அண்ணா, சேட்டன் நிறைய மதுப்புட்டிகளை குடித்துவிட்டு எறிந்திருக்கிறார் என்றார். அடுத்தவர்களை பிரச்னை செய்யாமல் அறையில் வைத்து குடித்திருக்கிறார் என மகிழ வேண்டியதுதான். 

புதிதாக ஏழு பேர் தங்கும் அறையில் தங்கியுள்ளவர்கள், சினிமா ஆட்கள் போல. சில பெண்கள்  நடிக்கும் வாய்ப்புக்காக வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். புதிதாக சந்தைக்கு வரும் டீஷர்டுகளை இந்த வகையில் அறிந்துகொள்ள ஆண்டவன் அருள் பாலித்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து. என்ன சொல்வது? இன்று இதழின் சீஃப் டிசைனர் எழுதிய சிறுகதை தேறாது என ஆசிரியர் சொல்லிவிட்டார். இதனால் பட்டுக்கோட்டை பண்ணையாருக்கு கோபம் வந்துவிட்டது. சீஃப் டிசைனர் பிறருக்கு வேலை சொல்லியே பழக்கப்பட்டவர். மற்றவர்கள் பேச்சு கேட்டு அதற்கு பணிந்த வரலாறு இல்லை. எனவே புண்பட்டு புலம்பித் தள்ளிவிட்டார். 

எழுத்து என்பதையும் தன்னையும் இணைத்துப் பார்த்து ஈகோ புண்பட்டுவிட்டார். முதலில் அப்படித்தான் இருக்கும். சரியாக எழுதுனீங்கன்னா பழகிடும் என்றேன். சீஃப் டிசைனர் சிரித்துக்கொண்டே போய்விட்டார். கடும் விஷம் கதிரவன் சார். உடல்நலம் நன்றாக இருக்கிறதா? சன் மோகன் ராஜ், ஷேர் மார்க்கெட்டில் நிறைய பணத்தை இழந்துவிட்டார். திடீரென ஒருநாள் போன் செய்து ரூ.10 ஆயிரம் பணம் கேட்டார். ஷேர் மார்க்கெட் முதலீட்டிற்காகத்தான். முடியாது என மறுத்துவிட்டேன். திரும்ப வராது என தெரிந்தும் எப்படி பணம் கொடுப்பது?

நன்றி!

அன்பரசு 


கருத்துகள்