சுதந்திரமான மணத்தேர்வு சாத்தியமில்லாத இந்தியா! - கடிதங்கள் - கதிரவன்
சுதந்திர மணத்தேர்வுக்கு தடை!
அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம்.
நலமா?
ஞாயிறு மட்டுமே அலுவலக விடுமுறை. நேற்று நான் எழுதிய கட்டுரை ஒன்றை அமேஸானில் பதிவிட்டேன். மயிலாப்பூர் டைம்ஸ் என்ற பெயரில் மயிலாப்பூரில் அறை எடுத்து வாழ்ந்த அனுபவங்களை கோமாளிமேடை வலைப்பூவில் எழுதி வந்தேன். உற்சாகம், துக்கம், துயரம், வியப்பு என அனைத்து அனுபவங்களும் இந்த கட்டுரைகளில் உண்டு. குங்குமம் டாக்டர் இதழைத் தொடங்கியது மகிழ்ச்சி என பொறுப்பாசிரியர் ஞானதேசிகனிடம் பேசினேன். நன்றி என்றார். மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு வந்து விட்டேன்.
ஹைதராபாத்தில் முஸ்லீம் பெண்ணை தலித் ஒருவர் மணந்தார் என்பதற்காக அவரை கொலை செய்த செய்தியைப் படித்தேன். கஷ்டம். ஒரு பெண் குடியரசு நாட்டில் தனக்கான துணையை சுதந்திரமாக தானே தேர்வு செய்யமுடியவில்லை. இப்போது மட்டுமல்ல. இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நேரும் இறுக்கமான காலம்தான். நாளிதழ் வேலைகள் தடுமாறுகின்றன. வேகமாக நடைபெறவில்லை. பக்கங்களுக்கு ஏற்ற எழுத்தாளர்கள் இன்னும் கிடைக்கவில்லை.
துருக்கி டிவி தொடரான ஹெகிமோக்ளுவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நோய்கள் பற்றி அறியும் ஆர்வம்தான் என்னைப் பார்க்க வைக்கிறது என நினைக்கிறேன்.
நன்றி!
அன்பரசு
8.5.2022
மயிலாப்பூர்
----------------------------------------
சுயநலமான கேள்வி!
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
சில நாட்களுக்கு முன்னர் குங்குமம் கல்வி வேலை வழிகாட்டி பொறுப்பாசிரியர் நாகமணி சாருக்கு போன் செய்து பேசினேன். டாக்டர் இதழ் வெளியாகிவிட்டது. வேலை வழிகாட்டி இதழ் வெளியாகுமா என்று கேட்டேன். தெரியலைப்பா என்று ஒரே பதிலாக சொல்லி விட்டார். கல்வி இதழ் தொடங்கினால், பாண்டிச்சேரியில் பணிபுரியும் நாகமணி சார் திரும்ப மயிலாப்பூருக்கு வேலைக்கு வந்துவிடுவார். அவரைப் பார்க்கவாவது முடியுமே? எனது சுயநலத்திற்காகவே அவரை போனில் அப்படிக் கேட்டேன்.
அலுவலக வேலைகள் நினைத்தபடி வேகமாக செல்லவில்லை. நிறைய அரசியல், புகைச்சல்கள் சுற்றி நடக்கின்றன. மடிக்கணினியில் லிப்ரே ஆபீஸ் சரியாக இயங்கவில்லை. இரவில் ஓய்வு நேரத்தில் முன்னர் சொன்ன மருத்துவத் தொடரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சற்றே ஆசுவாசமளிக்கிறது. சரியாக வேலை செய்தால் நேர்காணல் நூலை எளிதாக எழுதிவிட முடியும். லிப்ரே ஆபீசில் என்ன கோளாறு என்று தெரியவில்லை. கர்சர் பிளிங் ஆவதில்லை. வன்பொருள் அல்லது மென்பொருளில் ஏதோ பிரச்னை. சீக்கிரமே தூக்கிப் போட வேண்டியதுதான். சேட்டன் பகத் நாவலை இன்றும் படிக்க முடியவில்லை.
அன்பரசு
13.5.2022
மயிலாப்பூர்
Pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக