சமணர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அருகர்களின் பாதை! - கடிதங்கள் கதிரவன்

 









13.11.2021

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மயிலாப்பூரில் வெள்ளப்பிரச்னை குறைவு. ஆனால் முதல்வர் தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியான ராதாகிருஷ்ணன் சாலை மழைநீரால் மூழ்கிவிட்டது. வடிகால் அமைப்புகள் சரியாக இயங்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் வடிகால் அமைப்பில் அடைத்துக்கொண்டுவிட்டன. சாலையில் தூய்மை பணியாளர் குப்பைகளை மழைநீரில் அகற்றிக்கொண்டிருக்கும்போதே, ஒருவர் அலுவலகத்தில் இருந்து குப்பையை எடுத்து சாலையில் வீசி எறிந்தார். என்ன சொல்வது இவர்களை? ஒவ்வாமைக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஊருக்குப் போய் மருத்துவரைப் பார்க்க வேண்டும். 

நாளிதழ் தொடங்குமா என்றே தெரியவில்லை. வேலை என்ற பெயரில் ஏதோ சமாளிப்பது போலவே தெரிகிறது. சீன சிறுகதைகள் -வானதி, அருகர்களின்  பாதை - ஜெயமோகன் என இரு நூல்களைப் படித்தேன். ஜெயமோகனின் எழுத்து பயணத்தின்போதும்,  காடுகளை விவரிக்கும்போதும் புத்துயிர் கொள்கிறது. சில இடங்களை காவிக்கட்சிக்கு ஆதரவாக வரிந்துகட்டி எழுதியிருக்கிறார்.  அதை தவிர்த்துவிட்டுப் படித்தால் பிழை ஏதும் இல்லை. பிரச்னையும் இல்லை. 

நான் தங்கியுள்ள அறையில் மேல் விதானம், பக்கவாட்டு சுவர் என எங்குமே ஈரம் கசிகிறது. மழைபெய்தால் மழைநீர், வெயில் அடித்தால் வெக்கை என வாழ்க்கை நகர்கிறது. ஈரம் வந்தாலே அதில் பூஞ்சை பூத்துவிடுகிறது. எனது உடலிலும் பூஞ்சைத் தொற்று பாதிப்பு வேறு உள்ளது. எனவே, உங்கள் உடலை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 

அன்பரசு


கருத்துகள்