நேருவுக்கும் சோவியத்திற்குமான உறவு! கடிதங்கள்- கதிரவன்
நட்பா, பணமா?
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலமா? நாளிதழ் வேலைகள் மெதுவாக செல்கின்றன. பாட நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்து கட்டுரைகளை எழுதுவது கடினமாக உள்ளது. அடிப்படையில் பொதுவான செய்திகளை எடுத்து எழுதுவது ஈஸி.
கடந்த ஞாயிறு குங்குமம் தலைமை உதவி ஆசிரியரான சக்திவேல் சாரின் அறைக்குப் போக நினைத்தேன். இதை செய்தியாக அவருக்கு போனில் அனுப்பியபோது, போனில் அழைத்து தான் இன்னொரு நண்பரைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டார். எனவே, வேறு வழியில்லை. அறையில்தான் ஜாகை.
மோகன் அண்ணா ஷேர் மார்க்கெட்டில் வெறியாக இருக்கிறார். அவர் கேட்டதற்காக நட்பிற்காக எனது கையிருப்பில் உள்ள தொகையை இழக்கவிரும்பவில்லை. அவரிடம் நான் இப்போது பேசுவதில்லை. ட்ரெய்ன் டூ பூஷன் தென்கொரியப் படம் பார்த்தேன். ஜோம்பி படம்தான். படத்தில் வைரஸ் பற்றி பேசாமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உணர்வுகள், கடமைகள், பொறுப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். நன்றாக எடுத்திருக்கிறார்கள்.
நேற்று இயர்போன் ஒன்றை புதிதாக வாங்கினேன். பிலிப்ஸ் இயர்போன் வலது பக்கம் கேட்கிறது. ஆனால் இடது பக்கம் கொர்..ர் என யாரோ குறட்டை விடும் சப்தம் கேட்கிறது. தற்போது நாகாக்களின் ரகசியம் என்ற நூலை படித்து வருகிறேன். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
அன்பரசு
17.5. 2022
மயிலாப்பூர்
-----------------------------------------------
நேருவுக்கும் சோவியத்திற்குமான உறவு!
அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமா?
தற்போது ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். அதில் முக்கியமான கட்டுரை ஒன்று உள்ளது. லியா என்ற குழந்தை ஹைட்ரோஎன்செபாலிஷ் என்ற வியாதியுடன் பிறக்கிறது. அக்குழந்தையைக் காப்பாற்ற பெற்றோர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதை கட்டுரையாக எழுதியிருந்தனர். உணர்ச்சி பெருக கட்டுரையை வாசித்தேன். பிரமாதமான எழுத்து.
எங்கள் நாளிதழில் ஜூன் மாத கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டேன். ஏப்ரல் மாத கட்டுரைகளை நாளை முதல் பதிவிட வேண்டும். உங்கள் நாளிதழ் வேலைகள் திருப்தியாக உள்ளதா? குங்குமம் டாக்டர் 2ஆவது இதழை பிடிஎஃபாக படித்தேன். ஓகே நன்றாகவே இருக்கிறது. மோசமில்லை.
நேருவுக்கு சோவியத் யூனியன் உடனான உறவு பற்றிய கட்டுரை ஒன்றை வலைப்பூவில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். சீன தொழில்நுட்ப சேவை நிறுவனமான ஹூவாவெய் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன். இதன் நிறுவனர் ரென் ஆச்சரியமான மனிதர். இவரது செயல்பாடுகளும், கடைபிடிக்கும் தத்துவங்களும் ஆச்சரியம் தருகின்றன.
அமிஷ் திரிபாதி எழுதிய வாயு புத்திரர் வாக்கு என்ற நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். புராண மறுபுனைவுதான். நன்றாக எழுதப்பட்டுள்ளது. நன்றி!
அன்பரசு
25.5.2022
மயிலாப்பூர்
கருத்துகள்
கருத்துரையிடுக