இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு
இந்திராகாந்தி
இயற்கையோடு இயைந்த வாழ்வு
முடவன் குட்டி முகமது
காலச்சுவடு
மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ்
நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு சூழலியலாளர்கள் பிரதமருக்கு சூழல் ஆபத்துகளை கடிதம் எழுதினால் அதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் விழிப்புணர்வு இந்திராவுக்கு இருந்தது ஆச்சரியமாக உள்ளது. 1970களிலேயே காற்று மாசுபாடு பற்றியும் எதிர்காலத்தில் அதன் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசியிருப்பது அவரின் வாசிப்பு, உலக நாடுகளை கவனிப்பது ஆகியவற்றின் மூலமாக கைவரப்பெற்ற அறிவு என கூறலாம்.
சூழலியல் அக்கறை மட்டுமல்லாது ஒரு தாவரத்தை, செடியைப் பார்த்தால் அதன் பெயரைக் கூறுவது, மலரின் பெயரைக் கூறுவது, விலங்குகளைக் கவனித்து அறிவது என தாவரவியல் ஆசிரியர் போன்ற தன்மையில் இருந்தார் இந்திரா. இதை நரசிம்மராவ் தாவரவியல் ஆசிரியராக இருக்கவேண்டியவர் அரசியல்வாதி ஆகிவிட்டார் என ஒருமுறை நகைச்சுவையாக ஜெய்ராம் ரமேஷிடம் கூறியிருக்கிறார். அது உண்மைதான் என்பதை சூழலியல் பொறுத்தவரை உறுதியாக கூறலாம்.
இடதுசாரி அரசுகளுக்கும் சூழலியல் தொடர்பாக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கடிதங்களை எழுதியிருக்கிறார். அவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அமைதிப்பள்ளத்தாக்கு பிரச்னையில் கூட இந்திராவின் சூழல் அறிவுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு இதுபோல, பிரதமரான இந்திராவின் கருத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
தமிழநாட்டில் முதுமலையில் கூட நீர்மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோடு செயல்படுத்த முனைந்தனர். அதையும் தவறு என இந்திரா கூறி தடுத்திருக்கிறார்.
இந்திரா ஆட்சியில் இருந்தபோது பல்வேறு உலக அளவிலான சூழல் அமைப்புகளின் பங்கேற்பாளராள, உரையாற்ற அழைக்கப்படுபவராக இருந்தார். இதற்கு காரணம், சூழல் பற்றிய அறிவுதான். இல்லையென்றால் ஏழை நாடாக இருக்கும் இந்தியாவின் பிரதமரை எதற்கு அழைக்க வேண்டும்? இன்று காடுகளின் அறிக்கை என்ற பெயரில் தனியாரின் தோப்புகள், சாலையின் நடுவிலுள்ள பூச்செடிகளைக் கூட காடுகள் என மத்திய அரசு சேர்த்து வருகிறது. அந்தளவு காடுகளின் பசுமைப்பரப்பு தொழில்வளர்ச்சிக்காக பலி கொடுக்கப்பட்டது. அப்படி இழக்கவும் இந்திரா தொழில்வளர்ச்சிக் காலத்தில் சூழலியலை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால் காடுகள் தப்பி பிழைத்தன என்பதே உண்மை.
இதற்கு முன்னும் பிறகும் கூட பிரதமர்கள் இயற்கை, சூழலியல் பற்றி பேசுபவர்களாக இல்லை. இந்திரா மட்டுமே வெளிநாடுகளில் மதிக்கப்படும் சூழலியல் கவனம் கொண்ட ஆளுமையாக தலைவராக உள்ளார். இதற்கு காரணம், அவரின் மாமா தாவரவியல் வல்லுநராக இருந்தார். மேலும் நேரு பல்லாண்டுகளாக சிறையில் இருந்ததால், இந்திராவுக்கு துணையாக இருந்தது இயற்கைதான். தாவரங்களும், செடிகளும், மரங்களும், பறவைகளும்தான் அவரது பால்ய வானத்தில் இடம்பெற்றன. இதனால் தான் பிற்காலத்தில் புலிகள் காப்பகம், பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கினார். தேசியபூங்காக்களை உருவாக்கினார். பெரும்பாலானவற்றை மத்திய அரசு பராமரிக்கும் வகையில் சட்டங்களை உருவாக்கினார். இல்லையெனில் விலங்குகளை அந்தந்த மாநிலத்தவர்களே வேட்டையாடி அழித்துவிட்டிருப்பார்கள்.
நூலைப்பற்றி பேசும்போது நண்பர் இரா.முருகானந்தம் இன்னொரு தகவலையும் பகிர்ந்தார். பிரியங்கா காந்தி பாம்பு பிடாரன்களிடம் பேசும்போது பாம்புக்குட்டிகளிடம் விளையாடிக்கொண்டே பேசுவார் என்பதைச் சொன்னார். இதெல்லாம் எப்படி சாத்தியம்? அவரது அவரது பாட்டியிடமிருந்து பேத்திக்கு வந்த பழக்கங்களாகவே இருக்கும் என்றார். பிறகு அந்த வீடியோவைக் காட்டினார். உண்மைதான். எந்த பதற்றமும் இல்லாமல் கைகளால் பாம்புக்குட்டிகளை எடுத்து கூடையில் போட்டு பாம்பு பிடாரன்களிடம் பேசுகிறார் பிரியங்கா. இனி வரும் காலங்களில் சூழலியல் பற்றிய அறிவு கொண்டவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தால். இயற்கை வளம் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படாமல் தடுக்க முடியும் என்று தோன்றியது. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
பசுமையான நூல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக