கடித நூலை பதிவேற்ற செய்யமுடியாமல் தடுத்த அமேஸானின் அல்காரிதம்! - அமேஸான் அக்கப்போர் -1

 









அமேஸானுடன் ஒரு அக்கப்போர்!


அமேஸானில் இதுவரை பத்து மின்னூல்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இதுவரை பெரிய பிரச்னை ஏதும் வந்தது கிடையாது. நூலில் பயன்படுத்துவது அனைத்தும் யுனிகோட் எழுத்துரு என்பதால் பிழைகளும் இருக்காது. அதாவது படிக்கும்போது பெட்டிபெட்டியாக வரும் பிரச்னையைச் சொல்லுகிறேன்.

 இதுவரை அப்படி புகார் வந்ததில்லை. ஆனால் இப்போது அமேஸான் அப்படிப்பட்ட பிரச்னைகள் வருவதாக பயனர்கள் புகார் கொடுத்துள்ளனர். என பல பக்கங்களுக்கு ஒரு கோப்பைக் காட்டி அதிலுள்ள தவறுகளை திருத்துங்கள். பிறகு நூலை பதிவேற்றம் செய்யலாம் என நிபந்தனை விதிக்கிறது. இந்த சவாலைத் தாண்டுவதே கடினம். அப்படித் தாண்டினால் அடுத்துதான் அட்டைப்பட அக்கப்போர்கள் வரும்.

இதற்கு அடுத்ததாக உள்ளது, நூலின் அட்டைப்படம். பொதுவாக அட்டைப்படத்தை நான் ஜிம்பில் அல்லது போட்டோஷாப்பில் எல்லாம் செய்வது கிடையாது. அதற்கென கன்வா வலைத்தளம் உள்ளதே என ஒரு அசட்டு துணிச்சல். அதே துணிச்சல் தான் இதற்கு முன்னர் பயன்பட்டது. ஆனால் இந்த முறை டோல்கேட்டில் பணத்தை கேட்டு மிரட்டுவது போலாகி விட்டது நிலைமை. பத்தாயிரம் பிக்சல்களுக்குள் அட்டைப்படம் அடங்கவில்லை என அமேஸானின் அல்காரிதம் பிராது கொடுக்க அதிலும் எரர் மெசேஜ் வந்துவிட்டது.
உடனே என்ன செய்வோம், அடேய் கன்வா, இப்படி பண்ணிட்டியேடா என மனதிற்குள் புலம்பியபடி சென்று கீகளை அடித்து தேடினால் ரீசைஸ் தானே தாராளமாக செய்து கொடுக்கிறேன். ஆனால் அந்த வசதிக்கு நீ பணம் கட்டுவாயா என கேட்கிறது கன்வா. முடியுமா? உடனே வண்டியை ரிவர்ஸ் எடுத்து மீண்டும் புதிய ஃபைலை 1000 க்கு 625 என உருவாக்கி எழுத்தை தாறுமாறாக வைத்து சோறு வேகவில்லை. மன்னிக்கவும் நினைத்து வெகுகாலமாகிவிட்டது என அரிய டைட்டிலை டைப் செய்து ஜேபெக்காக தரவிறக்கி பதிவேற்றினோம். மீண்டும் தவறு செய்துவிட்டாயே பாவி என செய்தி சிவப்பு நிறத்தில் வந்தது. மேற்சொன்ன செயல்பாடுகளை இரண்டு முறை செய்துவிட்டு, ஓய்ந்தேபோனேன். கடித நூலை தயாரிக்க ஒரு நாளை செலவிட்டு நூலை பதிவேற்றிவிட்டுத்தான் அடுத்த வேலை என்றிருந்தேன். ஆனால் அமேஸான் அப்படியெல்லாம் எதுக்கு சபதம் செஞ்சுகிட்டு இன்னிக்கு வேலை ஆகாது முதலாளி என சொல்லிவிட்டது.
அப்புறம் வேறு என்ன வழி, அடுத்த வரிசையில் இருந்த இன்னொரு டெக் லெஜண்டான கூகுள் பிளே புக்ஸிடம் சென்றேன். இதற்கு முன்னர் அந்த கம்பெனியில் நூல்களை பதிப்பித்திருக்கிறேன். ஆனால் இலவச மின்னூல்களைத்தான். அவனது அல்காரிதம் வேறு லெவலில் இருக்கும். அதாவது நூலை அதில் பதிவிட்டு, ஆசிரியர் குறிப்பு. விலை எல்லாம் முடிந்தபிறகுதான் ஆச்சா, எல்லாம் முடிஞ்சாச்சா என அல்காரித வேலையைத் தொடங்குவான். இணையம் முழுக்க ஏதேனும் வேறு வலைத்தளங்களில் இதே நூல் பதிவிடப்பட்டுள்ளதா என தேடிக் கண்டுபிடிப்பான். அப்படி இருந்தால், நூலை பிரசுரிக்க முடியாது என காரணத்தை சி ++ நூல் நீளத்திற்கு சொல்லுவான். இல்லையென்றால் ஓகே என்பான்.

நினைத்து வெகுகாலமாகிவிட்டது நூலை கூகுளுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதில் பதிவிட நூல் டாக்ஸ் வடிவில் இருக்க வேண்டியதில்லை. பிடிஎஃப், இபப் வடிவில் இருந்தால் போதுமானது. கோப்புகள், அட்டைப்படத்தை ஒன்றாகவே பதிவேற்றலாம். அவர்களின் அல்காரிதமே அவற்றை தனியாக பிரித்துவிடுகிறது. பிறகு விலை வைப்பது மட்டுமே நமது வேலை.

கிண்டில் மூலம் கூகுள் பிளே புக்ஸை படிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதில் டிஆர்எம் அப்ளை செய்வது வேண்டாம் என பரிந்துரைக்கிறார்கள். 20 சதவீத பகுதியை வாசகர்கள் இலவசமாக படிக்க நாமே அனுமதிக்கும் ஆப்சன்கள் உண்டு. பார்ப்போம் கூகுளோடு நாம் இணைந்து பயணிக்க முடியுமா என்று... 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்