உண்மையா? உடான்ஸா? - கெட்ச் அப்பை மருந்தாக பயன்படுத்தலாமா?














கெட்ச்அப்பை மருந்தாக பயன்படுத்தலாம்!


உண்மையல்ல. தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் இப்படி பயன்படுத்தினார்கள். 1830களில் உடலில் ஏற்பட்ட மஞ்சள் காமாலை, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தினர். தக்காளி கெட்ச்அப்பை இப்படி மருந்தாக நோயாளிகளுக்கு பரிந்துரைத்த மருத்துவரின் பெயர், ஜான் குக் பென்னட். இதை பலரும் காப்பியடித்து  சர்வரோக நிவாரணி தக்காளி கெட்ச்அப்தான்  என்று சொல்லி விற்றனர். பின்னாளில், கெட்ச்அப் நோய் தீர்ப்பது இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. இதன் விளைவாக,  1850இல் கெட்ச்அப் மருந்து விற்பனை என்பதே முற்றாக நின்றுபோனது. 

உலகின் பழமையான சக்கரத்தின் வயது 5 ஆயிரம் ஆண்டுகள்!


உண்மை. ஸ்லோவேனியாவில் உள்ள  லுப்லியானா (Ljubljana) நகர் அருகே பழமையான சக்கரம் கண்டறியப்பட்டது. தற்போது இச்சக்கரம், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் வயது 5,100 முதல் 5,350 வரை இருக்கலாம் என்று கார்பன் வயது கணிப்பு முறையில் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகளில் சூடானில் அதிகளவு பிரமிடுகள் உள்ளன! 


உண்மை. தற்போது வரை அங்கு 255 பிரமிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்தில் 138 பிரமிடுகள் ஆய்வாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தற்போது சூடானில்தான் அதிகளவு பிரமிடுகள் உள்ளன. 

கார்னியா மற்றும் குருத்தெலும்பில் ரத்த நாளங்கள் இல்லை!


உண்மை. கண்ணில் உள்ள கண்மணியை பாதுகாக்கும் பகுதியான கார்னியா மற்றும் மூச்சுக்குழலின் அருகே அமைந்துள்ள குருத்தெலும்பு ஆகிய இரண்டிலும் ரத்த நாளங்கள் இல்லை. இதனை ஹார்வர்டு விழியியல் ஆராய்ச்சித்துறையினர் ஆய்வு செய்து கூறியுள்ளனர். 

உலகின் முதல் அனிமேஷன் திரைப்படம் டிஸ்னி உருவாக்கியது!


உண்மையல்ல. டிஸ்னியின்  ஸ்னோவொயிட் அண்ட் தி செவன் ட்வர்ப்ஸ் (Snow White and the Seven Dwarfs), படத்தையே முதல் அனிமேஷன் படம் என பலரும் நினைப்பார்கள். ஆனால் இப்படத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அர்ஜென்டினாவில் அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டுவிட்டது. 58 ஆயிரம் ஓவியங்களை வைத்து எல் அபோஸ்டோல் (El Apóstol ) என்ற 70 நிமிட அனிமேஷன் படம் உருவாக்கப்பட்டது. 



நாம் பூமியிலுள்ள நீரை முழுமையாக பயன்படுத்தவில்லை! 


உண்மை. உலகில் உள்ள 2.5 சதவீத அளவு நீரை மனிதர்களால் பயன்படுத்த முடியும். நாம் தற்போது பயன்படுத்தி வரும் நீரின் அளவு 0.007 சதவீதம்தான் . மீதியுள்ள நீரை நம்மால் எளிதாக பயன்படுத்த முடியாது. அவை துருவப் பகுதியில் பனிப்பாறைகளாக உறைந்துள்ளன. எதிர்காலத்தில் இவற்றையும் நாம் பயன்படுத்தும் தேவை உருவாகலாம். 



https://www.ripleys.com/weird-news/ketchup-was-once-used-as-medicine/

https://www.rd.com/list/interesting-facts/

கருத்துகள்