வண்ணத்துப்பூச்சியை எப்படி பார்ப்பது? - இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் நூலிலிருந்து....
வண்ணத்துப்பூச்சி நடை!
வீட்டுத்தோட்டம், பூங்காக்கள், சாலையோரங்கள், குளக்கரை ஆகிய இடங்களில் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்ப்பது, வண்ணத்துப்பூச்சி நடை (Butterfly walk) ஆகும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர் பரவுவதற்கு முன்னர், வண்ணத்துப்பூச்சிகளை தாவர இலைகள், பூக்களில் பார்க்கலாம்.
வெயில் அதிகரிக்கும் நேரத்தில், வண்ணத்துப்பூச்சி உயரமான இடங்களில் உள்ள இலைகள், பூக்களில் இளைப்பாறும். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியானவை. இக்காலங்களில் இரைத்தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. பிறகு, முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையை உண்டபடியும், வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுவாகவும் மாறியிருப்பதையும் காணலாம்.
ஆண்டின் இறுதிக்குப் பிறகு இரண்டாவது பருவ காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் உள்ளது. இக்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகளை அதிகம் காணலாம்.
பூக்கள், அழுகிய பழங்கள், பறவைகளின் எச்சம், கால்நடைகளின் சிறுநீர், சாணம், தாவரங்களின் சாறு, இறந்த நண்டுகள் போன்றவையும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்கின்றன. மேற்சொன்ன பொருட்களின் வாசனை மற்றும் கால்சியம், பாஸ்பேட் ஆகிய வேதிப்பொருட்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்குத் தேவைப்படுகின்றன. பீகாக் பான்ஸி (Peacock pansy), காமன் லியோபர்ட் (Common leopard), டாவ்னி கோஸ்டர்ஸ் (Tawny coasters), காஸ்டர்ஸ் (Castors), காமன் நவாப் (Common Nawab), டாவ்னி ராஜா (Tawny rajah), கிராஸ் யெல்லோ (Grass yellow), லைம் பட்டர்ஃபிளை (Lime butterfly) ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் திறந்தவெளியில் சூரிய ஒளியில் ஓய்வெடுப்பதைக் காணலாம்.
ஏ.சண்முகானந்தம் எழுதிய இந்திய வண்ணத்துப்பூச்சியலாளர்கள் நூலிலிருந்து....
கருத்துகள்
கருத்துரையிடுக