குழந்தை கடத்தப்பட அவளை மீட்கப் போராடும் தாயின் கதை! - 400 டேஸ் - சேட்டன் பகத்

 







400 டேஸ் 
சேட்டன் பகத்

வெஸ்ட்லேண்ட் பதிப்பகம்



சியா அரோரா என்ற பதிமூன்று வயது சிறுமி கடத்தப்படுகிறாள். அவள் காணாமல் போய்விட அவளது குடும்பம் படும் துயரமும் அதை தீர்க்க சியாவின் அம்மா ஆலியா அரோரா எடுக்கும் முயற்சிகளும் தான்  கதை. 

பெடோபில்லே என சொல்லுவார்கள். குழந்தைகளை கடத்தி அவர்களை வல்லுறவு செய்யும் மனிதர்கள்... அவர்களைப் பற்றியதுதான் கதை. இதனால் 400 டேஸ் என்ற ஆங்கில நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த நாவலிலும் சேட்டன் பகத்தின் யூஷூவலான அத்தனை அம்சங்களும் உண்டு. காதல், மோதல், செக்ஸ், நட்பு, (கணவன், மனைவிக்கு இடையிலான மோதல், குடும்ப பிரச்னை, உணவு ஆகியவை எல்லாம் புதியது). 

கதையில் முக்கியப் பாத்திரங்கள் கேஷவ் ராஜ் புரோகித் , சௌரப் மகேஷ்வரி, ஆலியா அரோரா, மணிஷ் அரோரா, புரோகிதர் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சௌதாலா, சப் இன்ஸ்பெக்டர் வீரென், சியா அரோரா, குட்டி பாப்பா சுகானா அரோரா. 


கேஷவ் ராஜ்புரோகித்தின் வாழ்க்கையைத் தான் சேட்டன் தொடக்கத்தில் மெதுவாகச் சொல்லுகிறார். குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் வாலிபர். கூடவே வயது 30 என்பதால் கேஷவின் பெற்றோர், அவருக்கு கல்யாணம் பார்த்து வைக்க அலைபாய்கிறார்கள்.

 மகன் சீக்கிரம் வேலையில் அமர்ந்தால் தானே செட்டிலாக முடியும். அப்போதுதான் கேஷவின் வாழ்க்கையில் ஆலியா அரோரா வருகிறார். அவரைப் பார்த்ததுமே கேஷவுக்கு லைட் எரிந்து மணி அடிக்கிறது. ஆனால் அவர் மணிஷின் மனைவி என்றதும் விரக்தி ஆகிறார். ஆலியா, கேஷவின் பெற்றோரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது, வழக்கு தொடர்பாக டிடெக்டிவ்வான அவர்களது மகன் உதவியை நாடவே... பெற்றோர் இதை முதலில் புரிந்துகொள்வதில்லை. இந்த பகுதிகள், ஆலியாவைப் பார்த்து கேஷவ் தன்னை மறப்பது ஆகிய கதைப்பகுதி சுவாரசியமானது. 

கேஷவின் நண்பன், சௌரப். இவன் டெக் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளன். கேஷவ், சௌரப் என இருவரும் சேர்ந்துதான், டிடெக்டிவ் நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்கள். அதுவும் பொருட்கள் காணாமல் போனது என்பது வரையிலான வழக்கு தான். இருவருக்கும் வரும் ஆள் காணாமல் போகும் வழக்கு என்பது ஆலியா அரோராவின் மகள் சியாவுடையதுதான். இருவருக்கும் செய்ய முடியுமா என்ற தோன்றினாலும் கேஷவிற்கு செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

கதை சொல்லும் முறை என்பது தொடக்கத்தில் கேஷவ்வின் வாழ்க்கையை சொல்லும் ஆசிரியர் கூற்றாக இருந்து பிறகு ஆலியா வழக்கு பற்றி சொல்லுவதாக மாறுகிறது. பிறகு கதை இயல்பான நிலைக்கு மாறி மீண்டும் ஆலியா தனது காதல், மணமான வாழ்க்கையை சொல்வதாக சென்று பிறகு  மீண்டும் டிராக்கிற்கு வருகிறது. இறுதியில் சியா தான் கடத்தப்பட்டு அனுபவித்த சித்திரவதைகளை அவரது மொழியில் கூறுகிறார். 

கதை சற்று வேகம் குறைந்ததுதான். சேட்டன் பகத்தின் பாத்திரங்களுக்குள் நடக்கும் உணர்ச்சி கொந்தளிப்புகளை தனியாக கட்டுரையாகவே எழுதலாம்.  ஆலியா அரோரா பாத்திரம் அப்படியானது. 

வெறுப்பைக் கூட மறைத்து வைக்கலாம். அன்பை மறைப்பது கடினம். கொச்சியில், ஆலியாவுக்கும் கேஷவ்விற்கும் நடக்கும் உறவு அப்படியான இயல்பைக் கொண்டது. கணவனின் புறக்கணிப்பு, வளர்ந்தபிறகும் கூட அம்மாவின் தோள்பிடித்தே நடப்பது ஆலியாவை தனியாக உணரச்செய்கிறது. மணிஷ், ஆலியா இருவருக்குமான வயது வித்தியாசம் அதற்கான காரணமாக இருக்கலாம். 

பதினெட்டு வயதில் திருமணமாகி 30 வயதிற்குள் இரு மகள்கள் பிறந்துவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் அவள் தனக்கான சரியான ஆன்மத் துணையைத் தேர்ந்தெடுக்கிறாள். அது தான் கேஷவ். சமூகம், கட்டுப்பாடு, பெற்றோர் தயவு, எதிர்ப்பு இதையெல்லாம் கைவிடுங்கள். நாவலின் இறுதிப்பகுதி பிரமாதமாக இருக்கிறது. கேஷவ் தன் காதலை விட்டுக்கொடுத்து பேசும் உரையாடல் பகுதி அபாரமானது. ஏறத்தாழ கதைக்கான இயல்பாகவும் இருக்கிறது. வேறெப்படி கதை நிறைவுற முடியும்?


சேட்டன் பகத்தின் இரு நாவல்கள் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றுள்ளன. இதனால் அடுத்து அவர் எழுதிய பல்வேறு நாவல்களும் சினிமாவுக்கு ஏற்றவகையில்  மாறின. அதை எளிதாக புரிந்துகொள்ள முடியும்தான். காட்சி ரீதியாக நாவல் மாறினால் புத்தகமும் விற்கும், படமும் ஓடும். பொருளாதார ரீதியாக வலதுசாரி எழுத்தாளரான சேட்டன் பகத்திற்கு நல்ல பெயரும், காசும் கிடைக்கும்.











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்