கிராமத்தில் இளைஞர்கள்!- கோவா கிராம புதுமை!
கிராமத்தை நோக்கி நகரும் இளைஞர்களின் படை!
வைஃபை வனமாக எல்இடி ஒளியில் டாலடிக்கும் நகரங்களில்
வார இறுதி சினிமா, திரும்பிய இடங்களில் ஸ்நாக்ஸ்,
மீல்ஸ் என டெபிட் கார்டு தேய்த்தால் கிடைக்காததுதான் என்ன? ஆனால் இதையெல்லாம் லட்சியம் செய்யாமல் வங்கி கணக்கில் செழிப்பான இளைஞர்கள்
கூட்டம் கோவாவிலுள்ள கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
நகரங்களைப் போல எந்த வசதியும் இல்லை என தெரிந்தபிறகும்
கிராமங்களுக்கு எதற்கு குடும்பத்துடன் செல்கிறார்கள்? பிக்னிக்கோ, சுற்றுலாவோ கிடையாது. நிம்மதியுடன் வாழத்தான் என்ற அசல் பதிலை நம்மில் எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்களோ?
நிஜம் அதுதான்.
அங்கு தங்கியுள்ளவர்கள் அனைவரும்
பெருநகரங்களின் தொழில்களையும் முடிந்தவரை கிராமத்திற்கு எடுத்துச்சென்று வாடகை வீடு
பிடித்தாலும் வசந்தமான புன்னகையுடன் வாழ்கிறார்கள்.
4 ஆயிரம் மக்கள் வாழும் கிராமமான அசாகாவோ இளைஞர்கள்
டிக் அடிக்கும் ஒரே சாய்ஸ். காரணம், அருகிலுள்ள
ஜில் கடற்கரைதான். புகைப்படக்காரர்கள், உடை வடிவமைப்பாளர்கள், கிராபிக் டிசைனர்கள் என பலரும்
கிளம்பிவர வில்லா, அபார்ட்மென்ட் ரேட்டுகள் கூடினாலும் போர்ச்சுகீசியர்களின்
தொன்மையான வாடகை வீடுகள் பர்சைக் கடிக்காத விலையில் எளிதாக கிடைக்கின்றன. "நாங்கள் அசாகாவோவில் வாழக்காரணம், எங்கள் மகன் அவன் சாப்பிடும்
உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அவனாகவே அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே.
இளமையில் இயற்கையோடு இணைந்திருப்பது மிக அவசியம்" என்கின்றனர் கிரேசியஸ்-ஸிஸா தம்பதியினர். உடனே நீங்களும் ஆன்லைனில் பிளைட் டிக்கெட் போட்டு பேக் தூக்கிவிடாதீர்கள்.
அசாகாவோவில் அபார்ட்மெண்ட் அல்லது வீடு பிடித்து சொகுசாக தங்க ரூ.2-8
கோடி அவசியத்தேவை. அசாகாவோவைச் சுற்றியுள்ள பகுதிகளில்
குழந்தைகளுக்கு கற்பிக்க பரிசோதனை முயற்சி பள்ளிகள் தொடங்கி சிபிஎஸ்சி வழிமுறை வரை
பள்ளிகள் நிறைந்துள்ளன.
"முன்பு பெருநகரங்களில் வாழ்ந்தபோது அடுத்த
வீட்டிலிருப்பவர்கள் யாரென தெரியாமல் இருந்தேன். ஆனால் இங்கு
வந்த ஒரு வாரத்தில் தெருவிலுள்ளவர்களின் பெயர்களை தெரிந்துகொண்டுவிட்டேன். முன்முடிவுகளோடு வராவிட்டால் கிராம அனுபவம் இனிக்கும் " என லைஃப்ஸ்டல் சீக்ரெட்ஸ் சொல்லுகிறார் சலோனி பூரி. அசாகாவோ
கிராமம் தவிர அதனைச்சுற்றியுள்ள மொய்ரா, அல்டோனா ஆகிய கிராமங்களும்
ஆர்ட் கேலரி மையங்களாக சத்தமின்றி வளர்ந்து வருகின்றன. கிராமத்தில்
நலம் காக்க இளைஞர்கள் இணைந்து அசாகாவோ மலைப்பகுதியை சுத்தம் செய்வது போன்ற செயல்பாடுகளை
செய்துவருகின்றனர். ஆனால் பசுமை, இயற்கை
நேயம் என பசுமையான இடங்களில் மனிதர்கள் வாழத்தொடங்குவது அங்குள்ள பசுமை அழிந்துபோகவும்
அமையும் என சூழல் ஆர்வலர்கள் கருத்துதெரிவித்துள்ளனர். இயற்கை
நோக்கி இளைஞர்கள் திரும்பியுள்ளதை நிச்சயம் வரவேற்கலாம்.
என்ன செய்யலாம்?
கலை ஆர்வம் பிளஸ் பிரெஞ்சு உணவுக்கு தி ப்ராஜெக்ட் கஃபே உதவும்.
De Aluizio (அ) அஸ்டோரியா ஆகிய விடுதிகளில் மரபு
கோவா உணவுகளை ஒரு கை பார்ப்பதோடு, மலையில் உள்ள கஜேட்டன் சர்ச்சுக்கு
ஜாலி பைக் ரைடு சூப்பர் சாகச செயல். சோரோ எனும் பப், உற்சாகத்தின் உச்சகட்ட ஸ்பாட். நேரம் கிடைத்தால் பீப்புள்
ட்ரீ கடையில் ரீசைக்கிள் மற்றும் காந்தா எம்பிராய்டரி சேலைகளையும் வாங்குவதோடு இந்தியன்
ஸ்டோரியில் கைத்தறி உடைகளை பர்சேஸ் செய்து களைப்பு குறைக்க ஆர்கானிக் டீ குடித்து வாருங்கள்.
The Assagao effect/livemint 7.7.2018 Chennai
ஆக்கம் மற்றும் தொகுப்பு:
-ச.அன்பரசு