காமிக்ஸ் பிதாமகன்!
காமிக்ஸ் பிதாமகன்!
ராணிகாமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்களுக்கு ஸ்பைடர்மேன், அயர்ன்மேன் படங்கள் பிடிக்காமலிருக்காது. நிஜ உலகின் அத்தனை கவலைகளையும் மறக்கவைக்கும் மாயாஜால மெய்நிகர் உலகத்தை காமிக்ஸ் இன்று அனிமேஷன், திரைப்படங்கள் வழியாக உருவாக்கிவிட்டது. அன்று ராணி காமிக்ஸின் முகமூடி வீரர் மாயாவி, இரும்புக்கை மாயாவி, லேடி மாடஸ்தி, கரும்புலி ஆகிய கேரக்டர்களை மறக்க முடியுமா?
அப்படி காமிக்ஸாக இருந்த புத்தக நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் முன்னோடியாக இருக்கிறது என்றால் அது டிஸ்னியின் மார்வெல் மட்டுமே.
மார்வெல் காமிக்ஸை யுனிவர்ஸாக
மாற்றிய உழைப்புக்கு சொந்தக்காரர், ஸ்டான்லீ. 1922 ஆம் ஆண்டு டிச.28 அன்று அமெரிக்காவின்
மன்ஹாட்டனில் பிறந்த ஸ்டான்லீ, பத்து வயதிலேயே ஷேக்ஸ்பியர், ஆர்தர் கானன் டாயில், மார்க்
ட்வைன் ஆகியோரின் நூல்களை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
ரோமானியாவை பூர்விகமாக கொண்ட ஸ்டான்லீ,
டெவிட் பள்ளியில் படித்தார்.
தீவிர இலக்கியவாதி வேட்கையில் பல்வேறு வேலைகளை பார்த்தவர்,
டைம்லி பப்ளிகேஷன் என்ற தனது உறவினரின் கம்பெனியில் வாரத்திற்கு 8 டாலர்கள் சம்பளத்தில்
வேலைக்கு சேர்ந்தார். காமிக்ஸில் ஸ்டான்லீ மீது ஆர்வம் வந்தது இங்குதான். இங்குதான்
ஓவியர் ஜேக் கிர்பி, எழுத்தாளர் ஜோ சைமன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. சூப்பர்ஹீரோ
கதைகளை எழுதுவது, எடிட் செய்வது என ஆபீசின் அத்தனை வேலைகளையும் செய்தார் ஸ்டான்லீ.
“நான் எழுதிய கதைகளை ஒரே சிட்டிங்கில் எழுதி முடிப்பேன். பெஸ்டாக எழுதினேனா என்று தெரியாது.
ஆனால் வேகமாக எழுதிமுடிப்பேன்” என்பது ஸ்டான்லீ வாக்கு.
ஜோன் பூகாக் என்ற மாடல் அழகியை
மணந்த ஸ்டான்லீக்கு இருமகள்கள் பிறந்தனர். அதில் ஒருவர் சில நாட்களிலேயே இறந்துபோனார்.
1940 ஆம் ஆண்டில் காமிக்ஸ் நூல்கள் அபரிமிதமாக விற்றது. அதேசமயம் அமரத்துவம உள்ளிட்ட
தத்துவங்களை கலந்துகட்டி அடித்த EC,DC காமிக்ஸ்கள் செனட் சபை கண்டனத்திற்குள்ளானது.
காதல், பேய்க்கதை என சோர்ந்துபோன ஸ்டான்லீ, 1961 ஆம் ஆண்டு கிர்பியுடன் இணைந்து ஃபென்டாஸ்டிக்
ஃபோர் காமிக்ஸை படைக்க மாஸ் வெற்றி. இன்கிரடிபிள் ஹல்க் கதாபாத்திரத்தை மேற்சொன்ன ஜோடியும்,
1962 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேனை ஸ்டீவ் டிட்கோவுடன் இணைந்து உருவாக்கினார் ஸ்டான்லீ. ஓவியர்களுக்கு
கதை குறித்த குறிப்பை கொடுத்து அவர்கள் வரைய சிறுசிறு வசனங்கள், ஒலிகளைச் சேர்ந்த அதனை
நிறைவாக்குவது ஸ்டான்லீ ஸ்டைல்.
அன்றைய காலத்து அரசியல் நிலைமைகளை ஸ்டான்லீ அளவு யாரும் புரிந்துகொள்ளவில்லை. எக்ஸ்மேன் என்ற காமிக்ஸ் தொடரை அவர் வெள்ளையர் - கருப்பினத்தவர் முரண்பாட்டை முன்வைத்து உருவாக்கினார். டிசி காமிக்ஸ் வேற்று கிரகத்து சூப்பர்மேன், பணக்காரர் ப்ரூஸ் வேய்ன்(பேட் மேன்) என காமிக்ஸ்களை உருவாக்கியபோது ஏழையான பீட்ஸா விற்று படிக்கும் பீட்டர் பார்க்கர்(ஸ்பைடர்மேன்) அனைவருக்கும் பிடித்துப்போனதில் ஆச்சரியமென்ன? வேகமாக கதை எழுதும் தன்மை ஸ்டான்லீயின் பெரும் பலம் என்பதை மார்வெல்லின் க்யூ கட்டி நிற்கும் படங்கள் நிரூபிக்கின்றன.
கிர்பி, டிட்கோ ஆகியோர் ஸ்டான்லீயுடன்
சேர்ந்து உருவாக்கிய கேரக்டர்களுக்கு உரிமை, கிரடிட் தருவதில் பிரச்னை ஏற்பட இருவரும்
1966-1978 காலகட்டங்களில் விலகியும் இணைந்தும் வேலைசெய்யும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக
கிர்பியுடன் 2014 ஆம் ஆண்டு சட்டப்பூர்வ ஒப்பந்தமிடப்பட்டு அவரின் பெயருக்கு இன்றுவரையும்
படங்களில் அங்கீகாரமும், பணமும் அளிக்கப்பட்டு வருகிறது.
1980 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸூக்கு
நகர்ந்த ஸ்டான்லீ, அனிமேஷன் தொடர்களை தயாரிக்க முயற்சித்தார். இன்கிரடிபிள் ஹல்க்கை
சிபிஎஸ் சேனலில்(1978-82) ஒளிபரப்பி வென்றார். பின் ஃபாக்ஸ் சேனலில் எக்ஸ்மேன் தொடர்
மெகா வெற்றி நம்பிக்கை தந்தது. மார்வெல் எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்காக உழைத்தாலும்
ஸ்டான்லீக்கு தரவேண்டிய தொகை குறித்த பிரச்னை வெடித்தது. ஆட்டோகிராப்புக்கு 120 டாலர்கள்
காசு வாங்கி தன்னை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் கூட ஸ்டான்லீ இருந்தார். வால்ட் டிஸ்னி
2009 ஆம் ஆண்டு 4 பில்லியன் டாலர்களுக்கு மார்வெல்லை வாங்கியது. ஸ்டான்லீ நிறுவனத்தில்
2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய பிரச்னை முடிவுக்கு வந்தது.
“கொஞ்சம் அதிகநேரம்
கிடைத்தால் திரைப்படங்கள், சொற்பொழிவு, அனிமேஷன் தொடர்கள் செய்திருப்பேன்” என வித்
கிரேட் பவர் ஆவணப்படத்தில்(2010) கூறினார் ஸ்டான்லீ. காலம் யார் கேட்டு நிற்கப்போகிறது?
தான் விதைத்த கனவுகள் உலகெங்கும் முளைத்து வந்துகொண்டிருப்பதை ஸ்டான்லீ மகிழ்ச்சியுடன்
விண்ணிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பார்.
குறிப்பு: இறந்தவர்களை ஒருபக்கத்தை மட்டும் ஒளிபொருந்திய பக்கத்தை மட்டும் ஆராதனை செய்வது பத்திரிகைகளின் வழக்கமாக உள்ளது. ஆனால் கோமாளிமேடை அவர்களின் இருள்படிந்த பக்கங்களின் மீதும் கவனம் கொள்கிறது. ஆராதிக்கவேண்டிய, ஒதுக்கவேண்டிய குணங்களின் வழியே ஒருவரை புரிந்துகொள்வது மதிப்பிடுவது சரியானதாக இருக்கும்.