உண்மையான கல்வி வாழ்க்கைக்கு இளைஞர்களை தயாரிப்பதுதான்!
நேர்காணல்!
“இளைஞர்களை வாழ்வதற்கு தயார் செய்வதுதான் உண்மையான கல்வி”ரேணு கடோர்,
தமிழில்: ச.அன்பரசு
உ.பியின் ஃபருகாபாத்தில் பிறந்தவரான
ரேணு கடோர், தன் 19 வயதிலேயே அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். பர்டியூ பல்கலையில்
முதுகலை பட்டம் வென்றவர் இன்று ஹூஸ்டன் பல்கலையின் தலைவராக உயர்ந்திருக்கிறார்.
ஃபரூக்காபாத் டு ஹூஸ்டன் வரையிலான
பயணத்தில் முக்கியமான திருப்பங்களாக கருதுபவற்றை கூறுங்கள்.
பர்டியூ பல்கலையில் அட்மிஷன் கிடைத்தது
முக்கியமான திருப்பம். இன்று நான் பெற்றுள்ள விஷயங்களுக்கு அதுவே ஆதாரம். பேராசிரியராக
பணியாற்றியபோது, ஆராய்ச்சி செய்ய என் நண்பர் வற்புறுத்திய நிகழ்ச்சி என் வாழ்வை மாற்றிய
இரண்டாவது நிகழ்வு. பல்கலைக்கழக தலைவருக்கு உதவியாளராக இருந்தபோது சமூகத்திற்கும் பல்கலைக்க்கழகத்திற்குமான
உறவை புரிந்துகொண்டேன். தலைமைத்துவ வழிகளை எனது தந்தை வழியாக கண்டறிந்தேன்.
அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாமல்
எப்படி சமாளித்தீர்கள்?
அமெரிக்காவுக்கு வந்து ஆறுமாதங்கள்
கழித்து கீழே லாண்ட்ரிக்கு துணிகளை சலவை செய்ய சென்றேன். திடீரென மூடிக்கொண்ட கதவை
எப்படி திறப்பது, யாரிடம் உதவி கேட்பது பதறிவிட்டேன். இன்று பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன்
என்றாலும் அன்றைய நாளின் பதற்றத்தை ஆயுளுக்கும் மறக்கமுடியாது. பின்னர் சீரியல்களை
பார்த்து ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன்.
அமெரிக்காவில் பெற்ற பல்கலைக்கழக
தலைவர் என்ற தகுதியை இந்தியாவில் உங்களால் பெற்றிருக்கமுடியுமா?
நிச்சயம் முடியாது. அமெரிக்காவில்
மட்டுமல்ல உலகமெங்கும் பழைமைவாதிகள் உண்டு. விமர்சனங்கள், ஏளனங்கள் என அனைத்தையும்
கடந்துதான் வந்தேன். பெண்களுக்கென வரையறைகளைக் கொண்ட எங்களுடைய மார்வாடி குடும்பத்தில்
இந்தியாவில் இருந்திருந்தால் எனக்கு பல்கலைக்கழகத் தலைவர் என்ற உயர்வு சாத்தியமில்லை.
தரமான கல்வி என்பதற்கு அர்த்தம்
என்ன?
வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்துவதே
கல்வி. கணித பார்முலாக்களை படித்து தேர்வில் வென்று அதனை மறந்துபோவதால் என்ன பிரயோஜனம்?
சக மனிதர்களுக்கு இரங்கி அவர்களுக்கு உதவி வாழ கல்வி உதவுவதே அதன் லட்சியாக இருக்கவேண்டும்.
மேல்நிலைக்கல்வியை லாபநோக்கிற்காக சிலர் சிதைத்துவிட்டனர்.
பல்கலைக்கழகம் மக்களோடு இணைந்திருப்பது
அவசியமா?
பல்கலைக்கழகம் என்பது நீர்க்குமிழியாக
தனி உலகில் இருக்கமுடியாது. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மக்களுக்காக செயல்படுவதுதான்
கல்வி நிலையங்களின் நோக்கமாக இருப்பது அவசியம்.
ஆசிரியராக, பல்கலைக்கழக நிர்வாகியாக
கல்லூரியில் உருவாகும் விவாதங்களுக்கான எல்லைகள் என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
பிறருக்கு பிடிக்கவில்லையென்றாலும்
உங்களது மனதிலிருக்கும் கருத்துக்களை முன்வைக்கும் தைரியத்தை கல்லூரி வளாகம் உங்களுக்கு
தரவேண்டும். சைபர் உலகில் மக்களோடு கலந்து பழகியவர்களுக்கு புதிய கலாசாரங்களைக் கொண்டவர்களோடு
பிரச்னை இருக்காது. ஆனால் நிஜ உலகில் மனிதர்களோடு பழகுவது புரிந்துகொள்வது தனி அனுபவம்
என்பதை மாணவர்கள் விரைவில் உணர்ந்துகொள்ள நாங்கள் உதவுகிறோம்.
எங்களது பல்கலையில் வராண்டாவில்
நடக்கும்போது ஏழுக்கும் மேற்பட்ட மொழியோசைகளை கேட்கலாம். 2+2 என்ற எண்களின் கூட்டுத்தொகை
4. இதனை தீர்மானிப்பது எண்களுக்கிடையேயான உள்ள அடையாளம்தான். அது இல்லாதபோது விடை
22 என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்.
-நன்றி: Pranay Sharma, outlookindia.com