வெட்டிங் போட்டோகிராபி! - முந்தும் கேரளா


வைரல் கல்யாண ஜோடி! – 


கேரளாவில் பிச்சு பிரதாபன் - இந்து பிச்சுவின் கல்யாண ஆல்ப புகைப்படம்தான் இணையத்தில் ஹாட் வைரல். சும்மாயில்லை, கல்யாணம் முடிந்தபின் நடந்த ஆல்ப ஷூட்டிங்கில் செயற்கை மழையை பொழியவைத்து எட்டு மணிநேரம் இதனை எடுத்திருப்பதுதான் ஆச்சரியம்.

“கல்யாண ஆல்பத்தை அதற்கென சிச்சுவேஷன் உருவாக்கி செய்வதுதான் இன்றைய டிரெண்ட். எங்களுடைய போட்டோவை பார்த்துவிட்டு அழைக்கும் நண்பர்களின் அன்லிமிடெட் அழைப்புகளுக்கு அளவேயில்லை” என புன்னகை பூக்கிறார் புதுமாப்பிளை பிரதாபன். கேரளாவில் குளம், நதி, படகு, செடி, கொடி பசுமை கொண்டாட்டமாக இருப்பதால் சிம்பிளாக செல்போன் கேமிராவில் எடுத்தாலே படங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளும் பேரழகு.
கல்யாண ஆல்பத்தை பிரதாபன் வீட்டின் பின்புறமுள்ள குளத்தில் படகை மிதக்கவிட்டு லைட் செட் செய்து எடுத்துள்ளார் புகைப்படக்காரர் ஷைன் சித்தார்த். “பார்த்தால் சிம்பிளாக தோன்றும். செயற்கையான நீரை மழையாக பொழியவிட்டு படகை நகராமல் வைத்து ஒளியை கணித்து புகைப்படங்களை எங்கள் குழு பதிவு செய்தது” என்கிறார் ஷைன் சித்தார்த். எதற்கு இவ்வளவு மெனக்கெடல்? கல்யாணம் வாழ்க்கையில் ஒருமுறைதான் அதனை கிராண்டாக பதிவு செய்து வைப்பதோடு மற்றவர்கள் பேசும்படி செய்தால் பெருமைதானே? இதுதான் தாராளசெலவில் வெட்டிங் போட்டோகிராபியை வளர்த்து வருகிறது.

“பிராமணர்களின் கல்யாணம் சடங்குகளை செய்து நடைபெற ஆறுமணிநேரங்கள் பிடிக்கும். கேரளாவில் நடைபெறும் இந்து திருமணங்களுக்கு பத்து நிமிடங்கள்தான் தேவை. இதற்குள் புகைப்படக்காரர் கவனமாக படம் கல்யாண தம்பதியை படம்பிடிக்காவிட்டால் கஷ்டம். வெட்டிங் போட்டோகிராபிக்கு சினிமா காட்சிகளும் தூண்டுதலாக இருக்கின்றன” என்கிறார் சென்னையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் வஸீம் அகமது. அசோசெம் ஆய்வுப்படி இந்தியாவின் திருமண மார்க்கெட் மதிப்பு ஒரு லட்சம் கோடி. ஆண்டுதோறும் 30% வளர்ந்து வருகிறது. கேரளாவில் இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி. அதிலும் 200 கி முதல் ஒரு கிலோ வரையில் வாங்கப்படும் தங்கத்திற்கான செலவு கேரளாவில் அதிகம்.

வெட்டிங் போட்டோகிராபிக்கான(3 நாள்) செலவு ரூ.5 முதல்  10 லட்சம் வரை எகிறுகிறது. எடுக்கும் 20 ஆயிரம் புகைப்படங்களில் 2 ஆயிரம் படங்களை ஆல்பமாக்குகிறார்கள். 

புகைப்படக்காரருக்கு ஒருநாள் சம்பளம் ரூ.75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை. “ வட இந்திய திருமணங்களில் கல்யாண ஜோடி புகைப்படங்களோடு மாமா-அத்தை, சித்தப்பா, பெரியப்பா டான்ஸ் ஆடுவதையும் பதிவு செய்வார்கள். தென்னிந்தியாவில் உறவினர்களை பதிவு செய்தாலும் முழுக்கவனமும் கல்யாணஜோடி மீதுதான் இருக்கும்” என்கிறார் வஸீம் அகமது.
கேரள தம்பதிகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அவர்களின் நண்பர்களும் கேரளாவில் இயற்கை சூழலில் வெட்டிங் போட்டோகிராபியை படம் பிடிப்பது அதிகரித்து வருகிறது. எளிமையோ, பிரமாண்டமோ நினைவுகள் எப்போதும் அழகானவைதானே!



-ச.அன்பரசு

நன்றி: டெக்கன் கிரானிக்கள்





பிரபலமான இடுகைகள்