பெண்கள் ஆடையை ஆண்களும் அணியலாம்!
வேறுபாடுகளை உடைக்கும் ஃபேஷன்!
– -ச.அன்பரசு
இந்தி நடிகர் ரன்வீர்சிங், பாஜிராவ்
மஸ்தானி படவிழாவில் அணிந்த பெண்களின் ஸ்கர்ட் போன்ற உடை அவரை பிறரைக் காட்டிலும் பிரபலமாக்கியது.
பாலின பேதமற்று உடைகளை இரு பிரிவினரும் அணியலாம் என்ற ஃபேஷன் பாய்ச்சலை இளசுகளின் நரம்பில்
குளுக்கோஸாக ஏற்றும் உலகறிந்த ரோல்மாடல்களில் நடிகர் ரன்வீர்சிங்கும் ஒருவர்.
ஃபேஷன் உலகில் நிகழும் மாற்றங்களுக்கு
அடிப்படை நாம் வாழும் சமூகம்தான். உச்சநீதிமன்றம் 377 வது சட்டப்பிரிவுப்படி எல்ஜிபிடிக்யூ
இனக்குழுவை குற்றவாளிகள் அல்ல என்று கூறி உத்தரவிட்டது முக்கியக்காரணம். இதன்பின்னர்
இந்தியாவில் தம் பாலின அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்தியவர்களில் சாமானியர் முதல்
பிரபலங்கள் வரை அடக்கம். இங்கிலாந்தில் கிரடிட் சூசி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநரான
பிலிப் பன்ஸ், ஆண்,பெண் என இரண்டு பெயர்களை பயன்படுத்தி வாழ்ந்து வந்ததோடு பெண்களுக்கான
விருது விழாவில் பங்கேற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
“ஆண்-பெண் தன்மைற்ற கதாபாத்திரங்கள்
மகாபாரதத்திலேயே உண்டு. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் மற்றும் சிகண்டி என்ற கதாபாத்திரங்களில்
பாலின பேதமற்ற தன்மை இரண்டுமே உண்டு. இந்து கலாசாரத்தில் பன்மைத்துவத்திற்கு எப்போது
இடமுண்டு என்பதற்கு இதுவே சாட்சி” என்கிறார் கோத்ரேஜ் கலாசார ஆய்வகத்தை சேர்ந்த பர்மேஷ்
சஹானி. வீட்டுவேலைகள் பெண்களுக்கானவை என்ற கோணம் மாறும்போது உடைகளும் மாறினால் என்ன?
என உலகளவில் சிந்தனைகள் மாறிவருகின்றன. ஒருவகையில் இது எல்ஜிபிடிக்யூ குழுவினரை பாதுகாக்கிறது
என்று கூட கூறலாம். ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆண்கள் விக்
அணிவதும் மேக்அப் செய்துகொள்வதும் இயல்பான பழக்கமாகவே கருதப்பட்டது.
“சிந்து சமவெளி
நாகரிகத்தில் ஆண்களும், பெண்களும் சேலை வடிவில் உடை அணிந்து முகத்தில் வளையங்கள், கை,
தோள்பட்டை, இடுப்பில் ஆபரணங்களை அணிந்திருந்தனர். முகலாயர்கள் காலத்தில் ஆங்ரஹா எனும்
உடையை ஆண்,வேறுபாடின்றி உடுத்தினர்” என்கிறார் நடனக்கலைஞரான இஷான் ஹிலால். பாலின பேதமற்ற
குழுவினருக்கும் திருநங்கைகளுக்கும் அடையாள சிக்கல்கள் காரணமாக மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
அறுவைசிகிச்சை செய்து ஆண் பெண்ணாக
அல்லது பெண் ஆணாக மாறுபவர்களுக்கு திருநங்கை/திருநம்பி என்று பெயர். ஆனால் ஆண்-பெண்
பேதமற்ற தன்மையை கடைபிடிப்பவர்கள் உடை, மேக்அப் வழியாக மட்டுமே தங்களை பாலினமற்றவர்களாக
காட்டிக்கொள்கிறார்கள்.
அதேசமயம் இப்படி வாழ அரசின் சட்டரீதியான தடை ஏதுமில்லை. ஆனால்
இதே உடைகள், மேக்அப்பில் அவர்கள் அரசு அலுவலங்களில், தனியார் அலுவலகங்களில் பணி செய்வது
கேலி பேசும் வாய்களுக்கு பாப்கார்ன் கொடுத்தது போலாகும். மேற்குலகில் ஏற்றாலும் இந்தியாவிற்கு
பாலின பேதமற்ற உடை என்பது புத்தம் புது கலாசார அதிர்ச்சி. மக்களுக்கு செட்டானால் தானாகவே
ஹிட் ஆகும்!