சமகால அறிவுஜீவிகள் யார்?
இந்தியாவில் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்றில்லாமல் கருத்தை உறுதியாக பேசுவர்களுக்கு தட்டுப்பாடு உண்டு. அனைத்து விஷயங்களிலும் நிபுணத்துவம் அல்லது எழுதும் ஆர்வமேனும் இருந்தால் அவர்களை இதில் கருத்தில் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள்தான் கீழேயுள்ள ஆளுமைகள்.
ராமச்சந்திரகுஹா(1958)
அரசியல், வரலாறு, சூழலியல், கிரிக்கெட் என அத்தனை திசைகளிலும் எழுதி தள்ளும் பெங்களூரைச் சேர்ந்த ஆளுமை. இந்த ஆண்டு காந்தி பற்றி ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ள நூலை வெளியிட்டுள்ளார். கலிஃபோர்னியா, ஸ்டான்ஃபோர்டு ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். குடிமைத்தேர்வுகளுக்கு படிப்பவர்களை மிஞ்சுமளவு நூல்களை வாசிப்பதில் ராமச்சந்திர குஹா சமர்த்தான ஆள். இந்திய வரலாற்றை எழுதும்போது இடது, வலது சாராமல் அவர்களின் குறைகளை கூறி வாசகர்களின் மனப்போக்கிற்கு முடிவை விட்டுவிடும் தாராளவாத எழுத்தாளர். டெலிகிராப் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பத்தி எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி, பத்மபூஷன்(2009) ஆகிய விருதுகளை வென்றுள்ளார் குஹா.
பிரதாப்பானு மேத்தா
மத்திய கொள்கை ஆராய்ச்சி அமைப்பில் பணிபுரிந்தவர் தற்போது அசோகா பல்கலையில் பணிபுரிகிறார். தி இந்தியன் எக்ஸ்பிரஸில் தொடர்ச்சியாக பத்தி எழுதி வருகிறார் மேத்தா. இடது, வலது என கருத்துகள் மாறுபட்டாலும் பொது உறவுத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ள ஆளுமை.
சசிதரூர்(1956)
இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் லிஸ்ட் எடுத்தால் சசி தரூர் இல்லாமல் எப்படி? இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் புத்தகவெளியீடு, பேச்சு என பரபரப்பாக அலைந்து திரியும் காங்கிரஸ் கட்சியின் அறிவுஜீவி. பாஜகவில் எதிர்க்குரலே எழும்ப முடியாதபடி தாறுமாறாக கருத்துக்களை சொல்லி படுநக்கலாக அதனை வைரலாக்குவது சசி தரூரின் ஸ்டைல். புழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தையை ட்விட்டரில் சொல்லி ஆர்வத்தை தூண்டி பின்னர் அதற்கு விளக்கம் சொல்லும் அழகிற்கு, குருவியார் பதில்களையும் மிஞ்சிய ரசிகர் கூட்டம் உண்டு. ஒரு புத்தகத்தை படித்து முடிப்பதற்குள் அடுத்த புத்தகத்தை எழுதிவிடும் சாமர்த்தியசாலி. இங்கிலாந்து இந்தியாவிடம் திருடிய பணத்தை திருப்பி தரவேண்டும் என்று சொல்வது முதல் சமூகவலைதளங்களை ஒதுக்காமல் பாஜகவை தாக்குவது என தொடர்ச்சியாக ட்ரெண்டிலேயே இருக்கும் துணிச்சல் கொண்ட காங்கிரஸ் ஆளுமை இந்தியாவில் இவர் ஒருவர்தான். கைக்கட்சி என்ற சார்பு தாண்டி இவரது எழுத்தை வாசிக்கவென தனி ரசிகர் கூட்டம் இந்தியாவில் உண்டு.
அசோக் மாலிக்(1969)
குடியரசுத்தலைவரின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட அசோக் மாலிக், அரசியல், வணிகம், ஆன்மிகம் என அத்தனை துறைகளிலும் கட்டுரை, பத்தி எழுத்து எழுதிய சாதனை அறிவுஜீவி. பத்மஸ்ரீ விருதும் வென்றுள்ளார். பூர்விக கல்கத்தாவாசியான மாலிக், 1991 ஆம் ஆண்டு டெலிகிராப் பத்திரிகையில் தன் பணியை தொடங்கினார். பயனீர், தெஹல்கா ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியவர் 2017 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார்.
நன்றி: ஸக்ரோல்.இன்