இனிக்கும் வாழ்க்கை - சியர்ஸ் ஹோன்ஜாக் சொல்லுங்க!
சியர்ஸ் ஹோன்ஜாக்
தனிமையில் தவிப்பது எல்லாம் இனி
பழங்கதை. தனியாக சமைத்து வேலைக்கு போய் விடுமுறையையும் ஜாலியாக திட்டமிட்டு வாழும்
பழக்கம் உலகெங்கும் வைரலாக பரவிவருகிறது. தென்கொரியாவில் இப்படி வாழ்பவர்களுக்கு கடந்தாண்டு
ஹோன்ஜோக்(Honjok) என பெயரே சூட்டிவிட்டார்கள்.
தனியாக வாழ்வதற்கு என்ன காரணம்?
குடும்பம் கொடுக்கும் எக்கச்சக்க பொறுப்புகளும், சுமைகளும் அதனை சமாளிக்கும் விதத்தில்
அதிகரிக்காத சம்பளம்தான் முக்கியக்காரணம். கூடவே சாதிக்கும் லட்சியங்களையும் கண்முன்
நிறுத்தினால் பார்ட்னர் தேடுவதும், குழந்தைகளை பெறுவதும் முதலிடத்திலிருந்து இரண்டாவது
இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. குடும்பம், கலாசாரம் என்பதற்கு முதலிடம் தரும் தென்கொரியா,
இந்தியா ஆகிய நாடுகளில் திருமணம் மறுத்து தனியாக வாழும் மக்கள் அதிகரித்து வருவது புதுமைதான்
அல்லவா? ”சரியான ஆண் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது பொய். தனியாக இருப்பது எனக்கு
பிடித்திருக்கிறது. இப்போது எனக்கு நானே பெஸ்ட் கம்பெனி என புரிந்துகொண்டேன்” என்கிறார்
டெல்லி பத்திரிகையாளரான அயன்திராலி தத்தா. நவ.11 என்பதை சீன மக்கள் தனியாக வாழ்பவர்களுக்கான
தினமாகவே கொண்டாட தொடங்கிவிட்டனர். 1993 ஆம் ஆண்டு நான்ஜியாங் பல்கலையில் தொடங்கிய
கொண்டாட்டம் இது.
இந்தியாவுக்கு தனியொருவர் கான்செப்ட்
புதுசு என்றாலும் அமெரிக்கா(32 மில்லியன்), ஜப்பான், ஐரோப்பாவில் சிங்கிள் சிங்கமாக
வாழ்வது சாதாரணம். தனியாக வாழ்பவர்கள் சோகத்தில் மூழ்கியெல்லாம் கிடக்கவில்லை. அவர்கள்
குடும்பஸ்தர்களை விட நண்பர், சமூகம் என நெருக்கமாக இணைந்து சுதந்திரமாக செயல்பட்டு
வருவதே உண்மை என்கிறது கார்னெல் பல்கலைக்கழக ஆய்வு(2000-2008). “உலகெங்கும் கடந்த
50 ஆண்டுகளில் நடந்துள்ள மாபெரும் மாற்றம் இது’ என்கிறார் சமூகவியலாளர் எரிக் கிலினென்பெர்க்.
குடும்ப அழுத்தங்கள், லட்சியங்கள்,
சுதந்திரம், தேர்ந்தெடுக்கும் உரிமை, சமூகவலைதளங்கள், விருப்பமான வேலைவாய்ப்பு, பெருகும்
டேட்டிங் வசதிகள் ஆகியவை தனியாக வாழ்வதற்கான தைரியத்தை இளைஞர்களுக்கு தந்துள்ளன. திருமணம்
போன்ற நீண்டகால உறவுக்கான நம்பிக்கை உலகளவில் குறைந்துவருவது சிங்கிள் கலாசாரத்தின்
மறைமுகமான காரணம் கூட. “நவீன இளைஞர்கள் காம்ரமைஸ் செய்ய மறுக்கிறார்கள். தான் நினைத்ததை
உடனே சாதிக்கவேண்டும் என்பதே அவர்களது எண்ணம். நாளை பற்றியல்ல இன்று வாழவேண்டும் என்று
வேட்கையுடன் உள்ளனர்.” என்கிறார் உளவியலாளர் ஏக்தா சோனி. சியர்ஸ் ஹோன்ஜாக்!
- ச.அன்பரசு