நவீன இந்தியாவின் சிற்பிகள்! - ராமச்சந்திர குஹா
நவீன இந்தியாவின் சிற்பிகள்
தொகுப்பு: ராமச்சந்திர குஹா
தமிழில்: கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
நேரு,காந்தி, கோல்வால்கர், சுபாஷ் சந்திரபோஸ் , ஈ.வெ.ராமசாமி, உள்ளிட்ட அறிமுகமானவர்களோடு ராஜாஜி, சையது அகமது கான், கமலாதேவி சட்டோபாத்யாய, தாராபாய் ஷிண்டே, ஹமீத் தல்வாய் உள்ளிட்ட பலரும் அறியாத நவீன இந்திய சிற்பிகள் பதினெட்டு பேர்களின் அறிமுகத்தை நூல்வழியாக செய்திருக்கிறார் ராமச்சந்திர குஹா.
சாதாரணமாக ஒருவரைப் பற்றிய அறிமுகம் என்றால் நாம் என்ன செய்வோம்? எங்கே படித்தார், என்ன செய்தார் என்பதோடு முடித்துக்கொள்ளும் வகையிலான நூல்களை அதிகம் படித்துள்ளோம். இதில் கூடுதலாக அவர்கள் எழுதிய கட்டுரை, பேசிய பேச்சுகள் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேருவைப்பற்றி பதிவுகள் நேர்த்தியானவையாக எனக்கு தோன்றின. காரணம் சுதந்திரத்திற்கு முன்பே அவர் எழுதிய மூன்று நூல்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக அவர் ஆற்றிய பணிகள், மாநில முதல்வர்களோடு தொடர்ச்சியாக உரையாடிய செயல்பாடு இன்றைய வரையில் வேறு பிரதமர்கள் கடைபிடிக்காத ஜனநாயக முறை என்று தோன்றியது.
அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பின்னர் விலகிய சுதந்திரா கட்சி தலைவரான ராஜாஜியின் கருத்துகள். தாராளவாத கருத்தோட்டம், சாதி சார்ந்த முறையை ஆதரித்தவர் என்றவகையில் பெரிய தொண்டர்கள் படை கிடையாது. ஆனாலும் செல்வாக்கு மூலம் பதவியை எட்டிப்பிடித்த ராஜாஜி எழுதிய தேர்தல் குறித்து கருத்துகள் ஆழமானவை. அதன் அடிப்படையில்தான் இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பதை உணர்ந்தால் அன்றைய காலகட்டத்தில் இவரின் கருத்துகள் எவ்வளவு முற்போக்கானவை என உணரமுடியும்.
ஒரு கட்சி மட்டுமே நாட்டில் இருப்பதன் ஆபத்து பற்றி எழுதியிருப்பதை பாஜகவின் காங்கிரஸ் முக்தி பாரத் லட்சியத்தோடும் இணைத்து பார்க்கலாம். இன்று வரலாற்று சிறப்புமிக்க நகரங்களின் பெயர்கள், சோதனையாக சில மாநில பாடநூல்கள் பாஜக அரசினால் மூர்க்கமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை எதிர்கால மக்கள் பிரிவினைகளுக்கான முக்கிய காரணங்களாக மாறக்கூடும்.
நவீன இந்தியாவின் சிற்பிகளை வாசிப்பதன் வழியாக நாம் புரிந்துகொள்வது, எந்த மதம், சாதி சார்ந்து பிறந்து வளர்ந்தாலும் சமூகத்திற்கு உழைக்க நினைத்தால் அதனை சாதிக்கலாம். அதேசமயம் முதல் சிற்பியான ராம்மோகன்ராய் போல எதிர்ப்புகளும் சந்திக்காமல் இல்லை.
நூலிலுள்ளவர்களை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதற்கு குஹா கூறும் விளக்கம் முக்கியமானது. சுயமாக யோசித்து அதனை நடைமுறைப்படுத்திய ஆளுமைகள் பதினெட்டு பேர்களும் என்கிற தகுதி முக்கியமானது. பேசியும், எழுதியும், செயல்களில் ஈடுபட்டும் வந்தவர்கள் என்பது அசாதாரணமானது.
இந்திய வரலாற்றின் பக்கங்கள் அதிவேகமாக ஆரஞ்சு நிறமாகி வரும் நிலையில், அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. தற்போது ராமச்சந்திர குஹா போன்ற அரிதான எழுத்தாளர் மட்டுமே ஆளுமைகளின் செயல்பாடுகளை குறைந்தபட்சமேனும் சரி, தவறு என பிரித்து பார்க்காமல் முடிவை வாசிக்கும் வாசகர்களிடமே விட்டுவிடுகிறார்கள். தேசத்தை கட்டமைத்த சிற்பிகள் வெற்று சவடால்களை வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்கு அளித்தார்களா? அல்லது செயல்பட்டார்களா? என்பதை இந்நூலை வாசிக்கும்போதே நீங்கள் உணரலாம்.
-கோமாளிமேடை டீம்