என் படங்களில் வெளிவந்த காந்தி! - இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி
ராஜ்குமார் ஹிரானி, சினிமா இயக்குநர்.
லகோ ரகோ முன்னாபாய் எனும் படத்தை எடுத்தார். அதில் பேசிய காந்திய வழிமுறைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படும் நட்சத்திர இயக்குநர். படம் முழுக்க சமூகம், மக்கள், கல்வி என பேசுபவர் காந்தியை படத்திற்கு கூட்டி வந்து உலக மக்களின் கவனம் ஈர்த்தார்.
காந்தி உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?
எனக்கு காந்தி பற்றிய அறிமுகம் பாட நூல்களில் அவரைப்பற்றி படித்ததுதான். வெளிப்படையாக சொன்னால் காந்தி பற்றிய அறிவு எனக்கு குறைவுதான். ரிச்சர்ட் அட்டன்பரோவின் படம் பார்த்துத்தான் காந்தி பற்றி தெளிவு வந்தது.
புனேவில் திரைப்படக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். காந்தி பற்றி நிறைய நூல்களைப் படித்தாலும் லூயிஸ் பிளெட்சரின் காந்தி பற்றிய சுயசரிதை எனக்கு திருப்தி தந்தது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று விவாதித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் அவற்றைக் கேட்டு காந்தி பற்றி நிறைய படிக்கத் தொடங்கினேன். காந்தி இயல்புக்கு மாறானவர்தான். ஆனால் அவரன்றி நமக்கு யார் அகிம்சை வழியைக் காட்டியிருக்க முடியும்?
உங்கள் படங்களில் காந்தியை எப்படி பயன்படுத்த முடிவு செய்தீர்கள்?
நான் காந்தியைப் பற்றிய சிந்தனையை என் படங்களில் வலுக்கட்டாயமாக வைக்கவில்லை. அது இயல்பாகவே வந்துவிட்டது என்பதுதான் உண்மை. எழுத்து எங்கிருந்து வருகிறது. உங்களின் நினைவுகள்தான். அவை நீங்கள் படித்த கேட்ட, ரசித்த விஷயங்களின் சேகரம்தானே? லகோ ரகோ முன்னாபாய் படம் எடுக்கும் முன்பே நான் காந்தியால் ஈர்க்கப்படும் எட்டு வயது சிறுவன் பற்றிய படத்திற்கான கதை எழுதி வைத்திருந்தேன். ஆனால் அதனை படமாக்க முடியவில்லை. அப்போது எனக்கு ஓர் யோசனை. வன்முறையான ரவுடி, காந்தியை சந்தித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் அது.
எப்படி சாதித்தீர்கள்?
காந்தியின் மொழி பற்றித்தான் முதலில் கவலை. பின்னர் அதையும் முன்னா பேசுவது போல மாற்றினோம். காந்தியின் கொள்கைகள் நிறைய இருக்கின்றன. அதில் நேர்மை மற்றும் அகிம்சை என்பதை எடுத்துக்கொண்டோம். இது அனைவருக்கும் பிடிக்குமா என்று யோசிக்கவில்லை. படத்தின் இறுதியில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் கவலையாக இருந்தது.
காந்தியின் காலம் வேறு. இன்று நவீன உலகம் நிறைய மாறிவிட்டது. நீங்கள் படத்தில் கூறியதை கடைபிடிப்பது சாத்தியமா?
காந்தியின் மதிப்பும் கொள்கைகளும் முக்கியமானவைதான். அதேசமயம் அவற்றை கடைபிடியுங்கள் என்று யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. சிக்னல்களை மதிக்காமல் செல்பவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் பூங்கொத்துகளைக் கொடுப்பது, அமெரிக்க தூதரகத்தில் க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அதிகாரிகளுக்கு பூங்கொத்துகளை வழங்குவது, சண்டையிடுபவர்கள் ஒருவருக்கொருவர் பூக்களைப் பரிசளிப்பது ஆகியவை கூட காந்தியின் வழிமுறைகள்தான்.
படம் உருவாக்கத்தில் நடந்த சுவாரசியங்களைச் சொல்லுங்கள்.
பின்னணி இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா காரில் வரும்போது சிக்னல் விளக்கை உடைத்துவிட்டார். உடனே அப்பகுதியில் இருந்த போக்குவரத்துக் காவலரை தேடிப்பிடித்து அபராதத்தொகையைக் கட்டிவிட்டு ஸ்டூடியோ வந்தார். அது எங்களுக்குத் தெரிந்தபோது சிரிப்பாக வந்தது. அடிப்படையில் காந்தியின் கொள்கைகள் என்பது கருணை, மனிதநேயம்தான்.
உங்களின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி ஒருவர் தானும் மனிதர்தான் என்பதை உணர்த்துவதுதான். செயலின் விளைவை தானாகவே உணர்ந்து திருந்துவதை காந்தி வலியுறுத்தினார். மகிழ்ச்சி என்பது நீங்கள் யோசிப்பது, செய்வது, பேசுவது அனைத்தையும் உள்ளடக்கியதுதான் என்றார். நான் இன்றும் மறக்காமல் இந்த வாசகங்களை நினைவுகூரக் காரணம், இதிலுள்ள எளிமையான உண்மைதான்.
காந்திய வழிமுறைகள் பயனளிக்கும் என்கிறீர்களா?
நம்பாமல் இருப்பதை விட நம்பி கடைப்பிடியுங்கள். காந்திய வழிமுறைகள் என்றுமே பயன் தருபவைதான்.
ஆங்கில மூலம் - மொஹூவா தாஸ்