தொழிலில் வென்று மக்களின் மனதை வென்றவர்கள் - எஸ்எல்வி மூர்த்தியின் நூல்!
தொழில்முன்னோடிகள்
எஸ்.எல்.வி மூர்த்தி
இந்து தமிழ் திசை
ரோத்சைல்ட் தொடங்கி அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் வரையில் நீள்கிற தொழில் முனைவோர்களின் கதை. இவர்களின் தேர்வு ஓரளவு தனித்துவமானது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அனைவருமே கடுமையான சவால்களைச் சந்தித்தவர்கள், மக்களின் தேவைகளுக்காக உழைத்து புதிய விஷயங்களை உருவாக்கி வென்றவர்கள், மனிதநேய பணிகளுக்காக உழைத்து வருகிறவர்கள். இதில் தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோரைத் தவிர்த்திருக்கலாம்.
காரணம் அவரைப்பற்றி நிறைய எழுதிவிட்டதுதான் காரணம். மேலும் நிறைய கண்டுபிடிப்புகளை அவர் திருடியதாக குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில் அவரை எதற்காக இந்த நூலில் பிரசுரித்தார்கள் என்று நண்பர் கேட்டார். பதிலை மூர்த்தி காருதான் கூறவேண்டும்.
எனக்கு பிடித்த இரு தொழிலதிபர்கள் ஆன்ட்ரூ கார்னகி, கிங் ஜில்லெட் என்ற இருவர்தான். இருவரின் வாழ்க்கையும் மிகவும் வேறுபட்டது. பஃபட், பில்கேட்ஸ் இருவரும் தங்களது சொத்துக்களை சமூகசேவைக்கு அளிக்கிறார்கள் என்றால் கார்னகி தன் ஒட்டுமொத்த தொழிலை விற்று அப்பணத்தில் கல்வி நிறுவனங்களை அமைத்தார். சமூக சேவைக்கு பணம் செலவிட்டார்.
இத்தனைக்கும் இவர் பெரியளவு கல்வி கற்றவர் அல்ல. டெக்ஸ்டைல் ஆலைகளில் எடுபிடியாக பணிபுரிந்து பின் மெல்ல பணம் சேர்த்து உருக்குத் தொழிலில் முன்னேறியவர். கார்னகி பல்கலைக்கழகம் இவர் உருவாக்கியதுதான்.
கிங் ஜில்லெட்டின் கதை, நம்பிக்கைக்கான விதை. 48 வயதில்தான் தனக்கான தொழிலை அவர் போராடி கண்டுபிடிக்கிறார். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இன்றைய ரேஷர்தான் அது. அதனை புதுமையாக தன்னுடைய புகைப்படம் கொண்டே விளம்பரம் செய்கிறார். வெற்றியும் பெறுகிறார். முதலில் சரியான ஐடியா இன்றி தோல்வியுற்றால் இன்று இம்முறை நிறுவன கூட்டாளிகளால் பொறாமையால் வீழ்த்தப்படுகிறார். போரும் அதன் பங்குக்கு அவரை ப் பாதிக்கிறது. இதன் விளைவாக, ஏழ்மை - வளர்ச்சி - வீழ்ச்சி என்று ஏறி இறங்கிய கிராபில் அவரது வாழ்க்கை முடிகிறது.
ஏராளமான நூல்களைப்படித்துவிட்டு இந்த நூலை எழுதியிருக்கிறேன் என்று மூர்த்தி சொல்வது உண்மை. அந்த விஷயங்கள் தொழிலதிபர்களின் வாழ்க்கையைச் சுருக்கமாக சொல்வதிலேயே தெரிகிறது. முற்கால, சமகால தொழிலதிபர்களின் வாழ்க்கை சாக்குபோக்கு சொல்லாமல் முன்னேற வழிகாட்டுகிறது என்பதை நேர்மையாக வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
கா.சி.வின்சென்ட்