மனமும் அதன் உளவியலும் - பெரியசாமித்தூரனின் எளிய தமிழ் பிரமிப்பு!
நாணயம் விகடன் |
மனமும் அதன் உளவியலும்
பெரியசாமித் தூரன்
தமிழில் இன்று மொழிபெயர்ப்பாக அல்லது நேரடியாகவும் பல்வேறு உளவியல் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், முன்னர் இதுபோல நூல்கள் வருவது அரிது. அப்படி வந்த தமிழ் நூல்களில் ஒன்றுதான் இது.
இன்று உளவில் பற்றி பலரும் அறிய விரும்புகிறார்கள். காரணம், உளவியல் தெரிந்துவிட்டால் அவர்களை அணுகுவது எளிது. பேச்சையும் செயலையும் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் சந்திக்கும் பத்தில் ஐந்து பேர், குறைந்தபட்சம் சிக்மண்ட் பிராய்டின் கனவுகளின் விளக்கம் நூலையேனும் படித்திருக்க வாய்ப்பு உள்ளது.
காரணம், அனைவருக்குள்ளும் அடக்கப்பட்ட ஆசை, வருத்தம், கண்ணீர் உள்ளது. இவை பகலில் மனதில் அடைக்கப்பட்டாலும் இரவில் தூங்கும்போது சுதந்திரமாக வெளியே கனவாக வந்துவிடுகின்றன. இது கூட நாம் உளவியல் சிக்கல்களிலிருந்து வெளியேறுவதற்கான தீர்வுதான். அத்தனை பிரச்னைகளையும் மனதில் யோசித்துக்கொண்டிருந்தால் பிரஷர் குக்கராகி வெடித்து விடுவீர்கள். அதில் எங்கு நேருகிறது கனவு, அதில் குறியீடாக தோன்றும் பிரச்னை என்ன என்று தூரன் விளக்கியிருக்கும் பகுதிகள் நன்றாக உள்ளன.
பெரியசாமித்தூரன் இந்த பிரச்னைகளை சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யுங் ஆகியோரின் கருத்துகளைச் சொல்லி சிறிது எளிமைப்படுத்தி பேசியிருக்கிறார். இதன்வழியாக உளவியல் பற்றிய விளக்கங்களை நமக்கு அளிக்கிறார். மறைமனம், நனவிலி மனம், இடைமனம் தொடர்பான விளக்கங்கள் எளிமையாக உள்ளன.
இன்று இணையம் சார்ந்து நாம் நிறைய கற்கத் தொடங்கிவிட்டோம். அல்லது நிறைய நூல்கள் உள்ளன. உளவியல் தொடர்பான இந்த நூல் எழுதப்பட்ட காலத்தை நோக்கும்போது, நிறைய தகவல்களை அளிக்கிறது. நீங்கள் அப்படி நினைத்து படித்தால் மட்டுமே 205 பக்க நூலை படிக்க முடியும். இல்லையெனில் கஷ்டம்.
குறிப்பாக, பாலியல் விழைவுதான் கனவுக்கான மூலம் என்பது சிக்மண்டின் கருத்து. அதிலிருந்து யுங், ஆட்லர் வேறுபடும் இடம் பற்றி சிறிது அதிகம் எழுதியிருக்கலாம். ஏனெனில் கீழுள்ள இருவரும் பிராய்டின் மாணவர்களாக பணியாற்றி பின்னர் வெளியேறியவர்கள்.
ஹிப்னாடிச நிலையில் ஒருவர் எப்படி இருப்பார், நாம் எப்படி கேள்விகள் கேட்கவேண்டும் என்று கூறியிருப்பது அருமை. உளவியல் சிகிச்சையில் ஒருவர் கூறும் சொற்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதனை பிரச்னைகளை அறிய அதனைத் தூண்டிலாகப் பயன்படுத்தும் உத்தி பிரமிப்பு தருகிறது.
இவ்வகையில் இச்சிகிச்சை மூளைக்கொதிப்பு கொண்டவர்கள் பலரை ஆற்றுப்படுத்தியிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது.
நீங்கள் உளவியல் பற்றி அறிய நினைக்கிறீர்களா? ஆங்கிலப் புத்தகங்கள் அலர்ஜி என்றால் இந்த நூலை அறிமுக நூலாக எடுத்துப் படிக்கலாம். அதற்கு பெரியசாமித் தூரன் நமக்கு உதவுவார்.
கோமாளிமேடை டீம்