தவறுகளை சகித்துக் கொள்ளாதீர்கள் - சேட்டன் பகத்
கோவிலுக்குள் அரசியல்வாதி ஒருவர் செருப்புடன் செல்கிறார். அங்குள்ள சிலைகளுக்கு பாக்கெட்டிலிருந்து எடுத்த சாராயத்தை அபிஷேகம் செய்கிறார். இந்தக்காட்சி உங்களுக்குள் அனல் கிளப்புகிறதா?
இப்படி ஒருவர் இன்று செய்தால் அவரின் அரசியல் எழுச்சி, எதிர்காலம் அதோடு முடிந்துவிடும். காரணம், வாக்காளர்களின் நம்பிக்கைதான். ஆனால் மற்ற விஷயங்களில் நமது கவனம் எங்கிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.
நம் கண்ணெதிரே தொழிலதிபர்கள் கடன்களை கட்ட மறுக்கிறார்கள், அவர்களுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்து வல்லரசு நாடுகளில் அடைக்கலம் தேடித்தருகிறார்கள். நிழலான பல வணிக காரியங்களை தொழில் என்ற பேரில் இவர்கள் செய்கிறார்கள். இவற்றை மக்கள் நாளிதழ்களில் படித்து தெரிந்துகொண்டாலும் அமைதியாகவே இருக்கின்றனர்.
ஆனால் இது நல்லதல்ல. ஊழல் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டவர்களாக மாறி வருகிறார்களோ என்று தோன்றுகிறது. இதே காலத்தில்தான் ஊழல் நமக்கு பகை என்று சொல்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். காரணம், இயல்பாகவே நமக்கு ஊழல் மீதான கோபம் உள்ளது. ஆனால், அது அரசியல்வாதிகள் மீதான கோபமாக மாற்றத்தை ஏற்படுத்துவதாக மாறவில்லை.
என்ன பிரச்னை? மக்கள் நமக்கு ஏன் ஊழலுக்கான கூக்குரலை மற்றவர்கள் எழுப்பட்டும் என நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நமக்கான பிரச்னைகளுக்கு வானிலிருந்து குதித்த அதி மானுடர்கள் உதவி செய்வார்கள் என மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்களா என அச்சமாக இருக்கிறது எனக்கு. கட்சிகளில் வேட்பாளர்களாக உள்ளவர்கள் அனைவரின் மீதும் குறைந்தபட்சம் ஐந்து வழக்குகள் உள்ளன. இதில் குற்றம், ஊழல் என பிரிவு வாரியாக உள்ளன. அப்படி நிற்பவர்களை மக்கள் ஏற்று வாக்களிப்பதே எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. அவரை மாற்றுங்கள் என மக்கள் ஏன் கூறவில்லை.
இந்த கும்பலான மௌன செயல்பாடு சர்வாதிகாரத்தை வலிய கொண்டுவரும் ஆபத்தைக் கொண்டது. இதனை நாம் நாளையே கூட சந்திக்க நேரிடலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல முன்னர் நான் கூறியது போல நாமும் கறைபடிந்தவர்களாக மாறி வருகிறோம். அதனால் இயல்பான அறக்குரல் நம் மனதிலிருந்து எழவில்லை என்பதே உண்மை.
இக்களங்கத்தை நாம் களையாதபோது, அரசியல் மட்டுமல்ல நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கூட தூய்மையை, பொதுநல நோக்கை எதிர்பார்க்க முடியாது. மக்கள் அதனை உணர்வதற்கான வாய்ப்பு விரைவிலேயே அவர்களுக்கு கிடைக்கும். எனது நம்பிக்கைக்கான ஊற்றும் அதில்தான் உள்ளது.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் எனும் நூலை தழுவியது.