படிக்காம ஜெயிச்சோமடா! - இரண்டு வெற்றிக்கதைகள்
இந்தியாவில் சுயமாக ஏதாவது கற்று வென்றவர்கள் அதிகம். காரணம் நம்முடைய கல்விமுறை அப்படி. துறுதுறுவென ஓடுபவர்களை, யோசிப்பவர்களை பள்ளி விரைவில் வெளியேற்றிவிடும். இதனால் சமூகத்தில் உருப்படியான மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் இதோ. ..
மும்பையில் வாழும் அருண்குமார் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் அவரது கல்வித்தகுதி பத்தாவதுதான். எப்படி சாத்தியமாகிறது என அவரது குடும்பத்தினருக்கும் புரியவில்லை. அவர்கள் அதிகம் கல்வி கற்காதவர்கள். இவரது குடும்பம் உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள மன்பூரில் வசிக்கிறது.
ஆகாஷ், வீட்டு வேலைகளுக்கான உதவியாளராக வந்து இன்று கோடிங் கற்று ஐபோன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறார். இவரது தந்தை அசாம் போலீசில் ஓட்டுநராக பணிபுரிந்துகொண்டு டெல்லியில் வசித்தனர். டேராடூனில் உள்ள பள்ளியில் ஆகாஷ் சேர்க்கப்பட்டார்.
ஒருமுறை கல்விக்கட்டணத்தை அறை வாடகைக்காக செலவழித்துவிட்டார் ஆகாஷ். பள்ளி நிர்வாகம். அவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது. உடனே தன் கிடாரை எடுத்துக்கொண்டு மும்பைக்கு இசை தொடர்பான வேலை கிடைக்கும் என வந்துவிட்டார்.
அங்கு ஹவுசிங்.காம் வலைத்தள நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்போது தன் கிராமத்திலுள்ள என்ஜிஓவுக்கு வலைத்தளம் உருவாக்க முயன்றார் ஆகாஷ். அதைப் பார்த்த அங்குள்ளவர்கள், அதற்கு நீ கோடிங் படிக்கணும் பையா என்று சொல்ல, உடனே நூல்களைப் படித்து விரைவிலேயே ஜாவா, சி,சிபிளஸ் என பல்வேறு கணினி மொழிகளில் புரோகிராம்களை உருவாக்கத் தொடங்கிவிட்டார். இப்போது தன் கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு கோடிங் பற்றி வகுப்பு எடுத்து வருகிறார். அவர்களைக் கொண்டு தனி மென்பொருள்
நிறுவனம் அமைக்கும் லட்சியம் நோக்கி முன்னேறி வருகிறார்.
பத்தொன்பது வயதில் காஜல் அஹிர்வால் சம்பாதிக்கும் பணம் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வர வைக்கும். ஆண்டுக்கு மூன்றரை லட்ச ரூபாயை மைண்ட்ரீ நிறுவனத்தில் பெற்று வருகிறார்.
குருகிராமில் பத்தாவது முடித்தவரின் தந்தை ரிக்சா இழுப்பவர். தாய் சமையல் செய்து விற்பவர். இவரின் வருமானத்தில் ஒற்றை அறையில் தடுமாறிய குடும்பம், இன்று இரண்டு அறைகளைக் கொண்ட இடத்திற்கு மாறியிருக்கிறது.
அதிர்ஷ்டமல்ல. அத்தனை அணுக்களிலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி காஜலை வெற்றிப்படிக்கட்டு நோக்கி செலுத்தியிருக்கிறது. பத்தாவது முடித்தபின் ஏதாவது கணினி பற்றி படித்து குடும்பத்தின் வறுமையைப் போக்கலாமே என்றுதான் காஜல் நினைத்தார். அதற்கு ஏற்றாற்போல பெங்களூரைச் சேர்ந்த நவகுருகுல் என்ற தன்னார்வ நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு கணினி வகுப்புகளை நடத்தி வந்திருக்கிறது. அதில்தான் காஜல் படித்தார். ஐந்தே மாதங்களில் நுழைவுத்தேர்வு, நேர்காணலை முடித்து மைண்ட்ரீயில் சேர்ந்திருக்கிறார்.
“இங்குள்ள அனைவருக்கும் என்னுடைய படிப்பு, குடும்பம் பற்றித் தெரியும். இதில் மறைக்க என்ன இருக்கிறது? நான் எதையும் மறைப்பதில்லை. இங்குள்ள பலரும் நான் பத்தொன்பது வயது என்றதும் வியக்கிறார்கள். பலரும் இங்கு முதுகலை முடித்தவர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் காஜல். வயது, பட்டங்களை விட ஆர்வமும் திறமையும் உங்களை இன்னும் உயரங்களுக்கு உயர்த்தும்.
நன்றி: டைம்ஸ்
குறிப்பு - பள்ளிகளில் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியை அறிய மட்டுமே உதவுகிறது. நவீன வேலைவாய்ப்புகளில் கல்விமுறை பெரியளவு உதவுவதில்லை. எனவே, பள்ளிக்கல்வியைத் தாண்டிய விஷயங்களைக் கவனித்து மனதில் பதியவைத்துக்கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதை மனதில் கொள்ளுங்கள்.