ஆபீஸ் அரசியலை சமாளித்தால் உனக்கு வேலை! - இதழியல் பணி!
நீ எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யுடா தம்பி. ஆனா அங்கிருக்கிற அரசியலைச் சமாளிக்கத் தெரிஞ்சாத்தான் அங்க வேலை பார்க்க முடியும். பாத்துக்க என்றார் வடிவமைப்பாளரும் நண்பருமான மெய்யருள்.
விரைவிலேயே அலுவலகத்தில் அப்படியான சூழ்நிலை உருவானது. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நான் வேலை செய்த இதழ் முழுக்க நானே தயாரிப்பதுதான். இதில் மற்றவர்களுடன் கலந்து செய்யும் பிரச்னை ஏதுமில்லை. தி.முருகன் குழும ஆசிரியராக இருக்கும்போது, அவரும் முத்தாரத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார். நான் பொதுவான செய்திகளை இணையம், நாளிதழில் பார்த்து தேடி எழுதுவேன். அவர் தேவையானால் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்வது வழக்கம். குங்குமத்திற்கென நான் வேலைக்கு எடுக்கப்படவில்லை. எனவே, அதில் கடிதங்களை மட்டும் எழுதிக் கொடுத்து வந்தேன்.
ஆனால் அங்கிருந்த குங்குமம் இதழில் சீனியர், ஜூனியர் மோதல்கள் சகஜமானது. பெரும்பாலான ஆட்கள் விகடனிலிருந்து வந்தவர்கள். ஈகோ மோதல்கள் இருக்காதா என்ன? முத்தாரம், சூரியன் பதிப்பகம், பொங்கல் மலர், கல்வி வேலை வழிகாட்டி, கல்விமலர் என வேலைகள் டைம்டேபிள் போட்டது போல இருக்கும். இந்த லட்சணத்தில் எனக்கு மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்க ஏது நேரம்?
நான் தனிச்சிறப்பானவன் என்ற எண்ணம் மனிதர்களுக்கு எப்படி ஏற்படுகிறது என்று எனக்கு புரிபடவில்லை. ஒருவன் பார்க்கும் வேலைதான் அவனது தகுதி என வரையறுக்கப்படுகிறது. இதன்படிதான் ஆபீஸ் பாய் முதற்கொண்டு மரியாதை கொடுப்பதும், கேலியாக புன்னகைப்பதும் நடைபெறுகிறது. நாம் ஒருவருக்கு நண்பராக மாறுவது சாதி சார்ந்தும், கருத்தியல் சார்ந்தும் அமைகிறது. ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர்களை தங்களின் நகல்களாக்கி அவர்களின் சுயத்தை நொறுக்குவதும் நடைபெற்று வருகிறது.
அனைத்துமே இங்கு அரசியல்தான்.
7
2018
6.11.2018
அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமோடு வாழ வாழ்த்துகிறேன். எங்கள் அலுவலகத்தில் விகடன் ஆட்கள் அதிகம். அதாவது, அங்கிருந்து பிரஷர் தாங்காமல் இங்கு ஓடி வந்து வந்து ஒட்டிக்கொண்டவர்கள். எவ்வளவு சம்பளம் கேட்டாலும் உடனே ஒப்புக்கொள்வது நிர்வாகத்தின் பலவீனம்.
வேலை செய்யும்போது பிறரைப் பற்றி விகடன் ஆட்கள் மனதில் என்ன நினைப்பார்களோ? அங்கிருந்து வருபவர்களை மட்டும் சிக்மண்ட் பிராய்டு பார்த்தால், உடனே தன் மனநல ஆராய்ச்சிக்கு அழைத்துச்சென்றிருப்பார். நான் எப்போதும் போல வேலை செய்துகொண்டிருந்தேன். விகடன் ஆள் ஒருவர், அந்தப்புறம் வந்தார். ஓப்பன் ஆபீஸ் முறை என்பதால் யாருக்கும் தனி கேபின் அமைப்பு கிடையாது. அப்படியே பிபிஓ மாதிரி உட்கார்ந்து பணி செய்ய வேண்டியதுதான். நீ இப்படி வேலை செய்தாலும் உனக்கு சிலை வைக்கமாட்டாங்க என்று கூறினார். நான் சிரித்து சமாளித்து விட்டேன்.
உண்மையில் நாற்பது வயதான ஆட்கள் மெல்ல வயிற்றெரிச்சல் காரர்களாக கனவு கலைந்தவர்களாக இருக்கிறார்கள். சரியான அங்கீகாரத்தைப் பெறமுடியவில்லை. அதனை தன் மேலுள்ளவர்கள் தடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ? அடுத்தவர்களைப் பற்றி ஏதாவது கூறிக்கொண்டே புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
சுனில் கிருஷ்ணன் கட்டுரை ஒன்றைப் படித்தேன். காந்தியை எப்படி செக்ஸ் சோதனை என்ற ஒற்றை வார்த்தையில் பரபரப்புக்காக பேசிவருகிறோம் என்று கூறியிருந்தார். கூடுதலாக அவரின் மரபு மருத்துவம், காந்தியப் பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றி பேச மாட்டேன்கிறார்கள் என்று வேதனைப் பட்டிருந்தார்.
என்ன செய்வது? மனிதர்களின் பரபரப்புக்கு ஏங்கும் நிலையை அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க விழையும் ஆசையை சட்டகமாக மாற்றிக் காட்டிவிட்டார்.
அனைத்து விஷயங்களுக்கும் காசைக் கணக்கு பார்த்தால் வேலைக்கு ஆகாது. பத்திரிகை வேலையும் அப்படியே. ஆபீஸ் வேலைகளைச் செய்துவிட்டு என் சொந்த வேலைகளையும் செய்து வருகிறேன். இதில் எனக்கொன்றும் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை.
தந்தைக்கு சிறுநீரக கல் பிரச்னை. ஊருக்கு வந்து செல்ல வற்புறுத்தினார். நான் அங்கு சென்று என்ன செய்ய முடியும்? கிளம்புகிறேன். நவீன இந்தியச் சிற்பிகளில் ராம்மோகன் ராய், ஈ.வெ.ரா பெரியார் ஆகியோரைப் பற்றிப் படித்தேன். வி. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பு மோசமில்லை.
நன்றி. சந்திப்போம். ச.அன்பரசு.