காலனி கால இந்தியாவில் ராஜாக்கள் யார்? -சேட்டன்பகத்




Image result for traffic cartoon
teluguone





மும்பையின் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் காரில் காத்திருந்தேன். நான் மட்டுமல்ல; என்னைச்சுற்றி பல்வேறு வேலைகளுக்குச் சொல்லும் நூற்றுக் கணக்கான ஆட்கள் இருந்தனர். எதற்கு சாலையில் இத்தனை பேர் ஒன்றாக நிற்கிறோம். நாம் வாக்களித்து நம் பிரதிநிதியாக மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தோம் அல்லவா? அந்த மக்கள் பிரதிநிதி நகர்வலம் செல்கிறார். அவருக்கான விஐபி நேரத்திற்காகத்தான் மக்களான நாங்கள் போக்குவரத்து துறை மூலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.

உண்மையில் எனக்கு காலனி கால இந்தியாவில் இருக்கிறோமா என்று தோன்றியது. அதில்தான் ராஜாக்களுக்கு இப்படியொரு மரியாதையை மக்கள் அளிப்பார்கள். அதாவது கட்டாயம் அளித்தாக வேண்டும். இன்றும் கேரளத்தில் பத்மநாபசுவாமி கோயிலில் குறிப்பிட்ட காலவேளையை ராஜா வணங்கும் நேரம் என்கிறார்கள். அந்தவேளையில் மக்கள் தரிசனத்திற்கு வரக்கூடாது.

அங்கு காத்திருந்தவர்களில் வேலைக்குச்செல்பவர்கள், முக்கியமான சந்திப்புக்காக ஆட்டோவில் காத்திருந்தவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் முகத்தில் என்னவென்றே தெரியாத தவிப்பும், எரிச்சலும் படர்ந்திருந்தன. ஆனால் அவர்களிடம் இனியும் என்ன நடந்துவிடும் என்ற விரக்தி தெரிந்தது. நிச்சயம் இவர்களிடம் தனியாகப் பேசினால் எம்பி, எம்எல்ஏ மீது எரிந்து விழுவார்கள். ஆனால், இறுதியாக இவர்கள் எதில் வந்து நிற்பார்கள் தெரியுமா? அதிகாரம் இருக்கிறது ஆட்டம் போடுகிறார்கள் என்பார்கள்.

எனக்கு ஆச்சரியம்,  மக்கள் அவர்கள் தம் ராஜாக்களாக ஏற்றுக் கொண்டார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. உண்மையில் இந்த மனநிலை ஆபத்தானது. காலனி காலத்தில் இந்தியர்களை கீழ்மைப்படுத்த ஆங்கிலேயர்கள் செய்த முக்கியமான செயல்பாடு, ஆளுநர்கள், அதிகாரிகள் வரும்போது பிறரை மரியாதை கொடுத்து நிற்கவைப்பது.  நீங்கள் எங்கள் அடிமைகள் என்று இதன் மூலம் மனதில் பதிய வைக்கும் முறை அது.  அதையே இந்தியர்களும் அப்படியே தலைமுறையாக பாரம்பரியாக செய்வது அவமானகரமானது.

அன்று நான் பத்து நிமிடங்களில் செல்லவேண்டிய விமானநிலையத்திற்கு அரைமணிநேரம் தாமதமாகச்சென்றேன். என்னைப் போலவே விமானமும் தாமதமானதால் விமானத்தைப் பிடித்துவிட்டேன். ஆனால் நிறையப்பேருக்கு அது சாத்தியமில்லை. மக்கள் பிரதிநிதியும் நிதானமாக செல்லலாமே?  ஐந்து ஆண்டுகள் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஐந்து நிமிடங்கள் மக்களோடு மக்களாக நிற்பதில் அவருக்கு என்ன கௌரவம் குறைந்துவிடப் போகிறது?

இதுபோன்ற அதிகார மீறல்களை நாம் விவாதித்தாக வேண்டும். சமூக வலைத்தளங்களில் இதனை விவாதித்து தாம் செய்யும் காரியங்களைப் பற்றி மக்கள் பிரதிநிதிகளின் மூளைக்கு உரத்துச் சொல்லியே ஆகவேண்டும். எத்தனை நாட்கள் இந்த மூடத்தனத்தை முட்டாள் தனமான செயலை அனுமதிப்பது?

அன்பு நண்பர்களே, தவறு என்று உங்கள் மனம் உணர்ந்தால் அதனை தைரியாக துணிச்சலாக சொல்லும் உரிமை நமக்குள்ளது. ஆம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்த தன்மை வரவேண்டும். ஜனநாய நாடு என்ற வார்த்தையில் இவை அனைத்தும் உண்டு. நம் நாடு,  அதன் மக்கள்  என்ற எண்ணம் வராமல் எந்த மாற்றங்களுமே சாத்தியம் ஆகாது.


சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது