ஆசிரியர் கே.என்.சிவராமன் தந்த சுதந்திரம்! - மனமறிய ஆவல்!




Image result for கே.என்.சிவராமன்
ஆசிரியர் கே.என்.சிவராமன்






முத்தாரம் அறிவியல் இதழ் என்பதால் முடிந்தவரை அரசியல் குறுக்கீடுகள் இருக்கவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த சுதந்திரம் இல்லையென்றால் அதில் உருப்படியான எந்த விஷயங்களும் வந்திருக்காது. நான் அங்கு பணிசெய்யும்போது, காலை எட்டு மணியென்றால் இருவரும் வந்து உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். காலையில் நேரத்திலேயே வந்து பணிசெய்வதை விரும்புபவர், காலை 8.30 க்குள் அன்றைக்கான ஃபார்மை எழுதி முடித்துவிடுவார். லே அவுட் ஆட்கள் வந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுவிடுவார்.

அப்புறம் என்ன பரபரவேலைகள்தான். மேட்டர் சொல்லிவிட்டு சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்க முடியாது. நான் அப்படித்தான் என்பார் கே.என்.எஸ். மாலனிடம் பத்திரிகைத் தொழில் கற்றவர். ஜனரஞ்சகம் முதல் தீவிர இலக்கிய இதழ்கள் வரை படிக்கும் வித்தியாசமான அறிவுஜீவி அவர். நிறைய நூல்களைப் பார்த்தால் போதும். உடனே படிங்க என்று வைத்துக்கொள்ளவே கொடுத்திருக்கிறார். அவரும் லக்கி - யுவகிருஷ்ணா சாரும் கொடுத்த நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன்.


11

27.11.2018

அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். அடுத்த மாதத்தோடு தினகரனில் பணியாற்றும் காலம் முடிவடைகிறது. பணிவிலக உள்ளேன். வேறுபணிக்கும் செல்லும் திட்டம் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. முத்தாரம் இதழில் எழுதியவை  அனைத்தும் பிரதிலிபி தளத்தில் கிடைக்கும்.

இனி காகித தாளில் படிப்பது என்பது மிக சிரமம். எனவே நான் எழுதியவற்றை இணையத்தில் ஏற்றி வைப்பது லாபம்தான். முத்தாரம் இதழில் எழுதிய பேராச்சி கண்ணன், சக்திவேல் ஆகியோர் பங்காற்றினர். அவர்களின் எழுத்துக்களையும் இணையத்தில் பதிவேற்ற உள்ளேன்.

இங்கு நான் தங்கியுள்ள ஹாஸ்டலில் 2.0 படம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாடல்களின் முன்னோட்டம் பார்த்தால், பரிதாபமாக தெரிகிறார் ரஜினி. ரைட் எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம். இதே காலகட்டத்தில் பிற நாயகர்கள் மாறினாலும் ரஜினி மாறவில்லை.

முத்தாரம் இதழில் ஆங்கில இதழ்களைப் பார்த்து சிலவற்றை எழுத நினைத்தேன். அது எந்தளவு வெற்றி பெற்றது என்று தெரியவில்லை. காரணம், நிர்வாகத்திடமிருந்து எந்த ஊக்கமும் வரவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த ஊக்கம்தான் எந்த பிரச்னையுமின்றி இங்கு பணியாற்ற உதவியது. சூழல், இயற்கை சார்ந்த ஆளுமைகளை அறிமுகப்படுத்த முயற்சித்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி.

அறையில் பெண்களைப் பற்றிய விஷயம் என்று கூறியபோது, நான் எதிர்பார்க்காதபடி எதிர்க்குரல் எழுந்தது. பெண்கள் எல்லாம் வேசிகள் என்றார் பக்கத்து படுக்கைக்காரர். மிகவும் கடினமான சொல்லாக தோன்றவே, அத்தோடு அவரோடு பெண்கள் பற்றிய பேச்சை எடுப்பதை கைவிட்டுவிட்டேன். அவருக்கு என்ன பிரச்னையோ?

சிக்ஸ்த் சென்ஸ் படம் பார்த்தேன். உளவியல் சார்ந்த படம் என்பதால் கவனமாக பார்க்க வேண்டியிருக்கிறது. கதையைப் பற்றி இன்னும் இணையத்தில் தேடிப்பார்க்க வேண்டும்.
நன்றி! சந்திப்போம்.
ச.அன்பரசு

12

9.12.2018

அன்புள்ள தோழருக்கு, வணக்கம்.

காலச்சுவடு படித்துக்கொண்டு இருக்கிறேன். இலக்கிய இதழ் இந்தாண்டு கடுமையாக எரிச்சல் தருகிறது. விநியோக முறை அப்படி இருக்கிறது. முகவரி மாறியதை சரியானபடி சுட்டிக்காட்டியும் இதழ் கைக்கு கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களாக இதழ் எனக்கு அனுப்பப்படவில்லை.  மின்னஞ்சலில் புகார் அனுப்ப வேண்டும்.

தீராநதியில் வைதீஸ்வரன் எழுதிய கட்டுரை, நேர்காணல் பிரமாதமாக இருக்கிறது. வேலையை விட்டுச் செல்லும்முன்பே  எழுதிய எழுத்துகளை இணையத்தில் பதிப்பித்துவிடுவேன் என்று நம்புகிறேன். நண்பரின் அறையில் இங்க்லீஸ் பேஷண்ட் என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன்.  1930 கால போர் பின்னணியில் நடைபெறும் கதை. அகழாய்வாளர் ஒருவருக்கு ஏற்படும் காதல் எப்படி அவர் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாதபடி மாற்றுகிறது என்பதுதான் கதை. ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் இது.

நூலகத்தில் உயிர் எழுத்து இதழ் படித்தேன். உடல் பிரவீன் ரூபன் என்ற கதை சொல்லும் விதத்தில் மாறுபட்டிருந்தது. நிர்வாணங்களை தரிசிக்கும் புகைப்படக் கலைஞருக்கு புணர்ச்சி எண்ணமே வரமாட்டேன்கிறது. இதன் விளைவாக அவருக்கு குடும்ப வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத துயர அனுபவம் நடக்கிறது. இதன் விளைவாக அவரின் மனநிலையில் ஏற்படும் பாதிப்பு பற்றிய கதை. பிரமாதமான சொற்களை அடுக்கி எழுதியுள்ளார். நல்ல முயற்சி. எழுத்தாளர் முயற்சித்தால் சிறந்த கதை சொல்லியாக வருவார்.







பிரபலமான இடுகைகள்