உளவியல் மருத்துவர் செய்த தவறால் பலியாகும் உயிர்கள், குற்றவுணர்வால் தவிக்கும் மருத்துவர்! - தி கிரேட் ஹிப்னாட்டிஸ்ட்

 

 

தி கிரேட் ஹிப்னாட்டிஸ்ட் 2014

 



தி கிரேட் ஹிப்னாட்டிஸ்ட் 2014


Director:Leste Chen
Produced by:Tina Shi, James Li, Xu Zheng
Writer(s):Endrix Ren, Leste Chen


 

சீனப்படம். முழுக்க உளவியல் சார்ந்த சமாச்சாரங்களை வைத்து எடுத்திருக்கிறார்கள். எனவே, படத்தை ஒரு பிரேம் தவற விட்டால் கூட அன்டார்டிகாவில் பனி பொழிவில் சிக்கியது போல ஒன்றுமே புரியாது. எதுவுமே விளங்காது.

அந்த வட்டாரத்திலேயே சிறந்த உளவியல் ஆசிரியர். இரக்கமேயில்லாத உளவியல் முறைகளால் ஒருவரின் மனதில் புகுந்து அவரின் முக்காலத்தையும் பார்த்து தேவையில்லாததை மனதிலிருந்து அழிக்கிறார் இதனால் பெரும் புகழ் பெறுகிறார். அவருக்கு வாழ்க்கையே உளவியல் தெரபிகள் பற்றி பேசுவதும், தான் தனியாக நடத்தும் உளவியல் மருத்துவமனையும்தான்.

இந்த நிலையில் அவருக்கு புதிய நோயாளி ஒருவரை பரிந்துரைக்கிறார்கள். அவர் வித்தியாசமானவராக இருக்கிறார் என்று சொல்லி அவரது முன்னாள் ஆசிரியர் அனுப்பி வைக்கிறார்.  அவர் பேசப்பேச எது உண்மை, எது பொய் என்றே உளவியல் மருத்துவருக்கு புரிவதில்லை. அந்தளவு சம்பவங்கள் உண்மையும், பொய்யும் காக்டெயிலாக கலந்த சம்பவங்கள் அவை. உண்மையில் அந்த பெண் யார் இந்த மருத்துவரிடம் வந்தது எதற்காக? உண்மையில் நோயாளி யார், மருத்துவர் யார் ? என்ற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தால் படம் முடிந்துவிட்டது என்று அர்த்தம

உளவியல் ரீதியான படம். எனவே படத்தில் வேகமாக அதிரடி ட்விஸ்டுகள் ஏதும் கிடையாது. படத்தில் இறுதியில்தான் ஏராளமான ட்விஸ்டுகள். நெகிழ்ச்சியான உரையாடல்கள் நடைபெறுகின்றன.

இயக்குநர், எப்படி இந்த தீமை எடுத்து நடிகர்களுக்கு புரிய வைத்து நடிக்க வைத்தாரோ, சாதனைதான். படத்தின் ஒன்லைனைக் கூட எளிதாக சொல்ல முடியாத படம் இது. படத்தை நிதானமாக பார்த்தால் மட்டுமே புரியும். எந்தக்காட்சியையும் விட்டுவிடாமல் பாருங்கள். படத்தின் இறுதியில் அனைத்து காட்சிகளும் முத்தாரமாக மாறும்.

அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார் ஒருவர். பாதிக்கப்பட்டவர் மன்னிக்க மறுக்கிறார். இதனால் குற்றவுணர்வு பெருகி அவர் தன்னைத்தானே கொல்ல நினைக்கிறார் என்பதுதான் முக்கியமான பகுதி.

உண்மையில் யார் உலகில் பெரிய ஹிப்னாட்டிஸ்ட் என்று படம் பார்த்த பிறகு முடிவுக்கு வாருங்கள்.

வித்தகன்.

கோமாளிமேடை டீம்  


கருத்துகள்