குற்றவாளிகள் ஆக்கப்படும் சிறுவர்கள்!
குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் ஈராக் காவல்துறை!
தீவிரவாதம் என்ற பெயர் வந்தாலே மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்தியும் தவறாமல் வந்துவிடும். காரணம், தீவிரவாதம் மக்களைச் சாராமல் தனியாக உருவாவதில்லை. இதற்கு என்ன காரணம்? அரசின் திட்டங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாததும், குறிப்பிட இனவெறுப்புடன் மக்கள் நடத்தப்படுவதும்தான்.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஈராக் அரசு கைது செய்து சிறையில் சித்திரவதை செய்துவருவதை மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
“குழந்தைகள் மீதான அரசின் இந்த நடவடிக்கையின் தாக்கம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடரும் அபாயம் உள்ளது” என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் குழந்தைகள் உரிமை இயக்குநரான ஜோ பெக்கர்.
குழந்தைகளை கைகளைக் கட்டி கேபிள், பிரம்புகள் மூலம் அடித்து ஐஎஸ் தொடர்பை வலுக்கட்டாயமாக ஏற்கச்செய்கின்றனர். நீதிபதி முன் நிற்கவைக்கும் முன்னரே, குற்றத்தை ஏற்கவில்லையென்றால் மீண்டும் சித்திரவதைகளைத் தொடங்குவோம் என போலீஸ் சிறுவர்களை எச்சரிக்கிறது. அப்புறம் உண்மை எப்படி வெளியே வரும்?
நம் ஊரைப்போலவேதான். ஒருமுறை தீவிரவாத தொடர்பு என்று பெயர் லெட்ஜரில் ஏறிவிட்டால், பின்னர் இந்த கறையிலிருந்து மீண்டு குடும்ப வாழ்க்கைக்கு செல்வது கடினமான பணி. இதனை குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறுவர்கள் அறியவில்லை. அரசும் இதுகுறித்து கவலைப்படாததுதான் அச்சமூட்டுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் தீவிரவாத குற்றச்சாட்டில் 1500 குழந்தைகளை ஈராக் அரசு கைது செய்துள்ளது. இதில் 150 வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு தீவிரவாத குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. இதனால் அக்குழந்தைகளுக்கு சிறைதண்டனை உறுதி என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நன்றி: மனித உரிமை கண்காணிப்பகம்.
வீடியோவைக் காண: https://www.hrw.org/news/2019/03/06/iraq-isis-child-suspects-arbitrarily-arrested-tortured