பீட்டில்ஸ் குழுவிற்கு மரியாதையான அஞ்சலி! - யெஸ்டர்டே படம்!
யெஸ்டர் டே
இயக்கம் - டேனி பாயல்
கதை - திரைக்கதை ரிச்சர்டு கர்டிஸ்
ஒளிப்பதிவு - கிரிஸ்டோபர் ரோஸ்
இசை டேனியல் பெம்பர்டன்
அமெரிக்காவில் வசிக்கும் இசைக்கலைஞன் ஜேக் மாலிக், புகழும் பணமும் பெற போராடுகிறான். அவனுக்கு ஒரே ஆதரவு, அவனது பள்ளி ஆசிரியையான தோழி எல்லி மட்டுமே. அப்போது இரவில் நடக்கும் ஒரு விபத்து அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் பின்னர் அவர் எழுதும் பாடல்கள், எழுதும் நோட்ஸ் அனைத்தும் மக்களால் ரசிக்கப்பட பெரும் புகழ் பெறுகிறார். ஆனால் அதன் விளைவுகளால் காதலியின் அன்பை இழக்கிறார். தனக்கென கூட நேரம் ஒதுக்க முடியாமல் போகிறது. நேற்றுவரை இருந்த வாழ்க்கை எப்படி இன்று மாறியது என தடுமாறுகிறார். எப்படி இந்த உண்மையை அவர் புரிந்துகொண்டு, தன் வாழ்க்கையை மீட்கிறார் என்பதுதான் கதை.
இதில் பல்வேறு கதைகள் இருப்பதை படம் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள். பீட்டில்ஸ் இசைக்குழுவினரை மீண்டும் நினைவுபடுத்துவது போல பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளன. அக்குழுவிலுள்ள ஜான் என்பவரையும் நாயகன் ஜேக் சந்திக்கிறான். வாழ்க்கையில் சந்தோஷன் என்பதை கண்டுகொண்ட பிறகு அவன் எடுக்கும் முடிவுதான் அவன் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது.
படத்தில் இசைக்கலைஞன் ஜேக்காக நடித்துள்ள ஹிமேஷ் படேல் பிரமாதமாக நடித்துள்ளார். இசைத்தும் பாடியதும் இவரது பாடல் வரிகள்தான் என்பது சிறப்பு. இதனால் சராசரியான அவரது பாடல்களும், இசையும் மிக பொருத்தமாக பொருந்துகிறது.
காதல் இல்லையேல் படம் நகராது. அந்தளவு காதலாலும் சிரிப்பாலும் நம்மை கொள்ளையடிப்பது பேபி டிரைவர் படத்தில் வந்த லில்லி ஜேம்ஸ்தான். படம் முழுக்க வந்து காதலை ஜேக் புரிந்துகொள்ள மாட்டேன்கிறானே என விரக்தியாகி இறுதியில் தன் காதலை மீட்டெடுக்கிறார்.
விடுதியில் அவர் ஜேக்குடன் ஒன்நைட் ஸ்டேண்ட் பேசும் வசனத்திற்கு செம கிளாப்ஸ். தைரியமாக அந்த இடத்திலும் காதலை வேண்டும் என சொல்வது பெரிய விஷயம்தானே.
ஆடியோ கம்பெனி மேனேஜராக வரும் டெப்ரா(கேட் மெக்கின்னன்), வருமானப் பசியை கண்முன்னே கொண்டு வருகிறார். படத்தின் நடிகர்கள் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றொரு விஷயமாக இசை, நுணுக்கமாக சூழலுக்கேற்ப இசைக்கப்படுகிறது. இதனால் எந்த இடத்திலும் கதைக்கு உறுத்தலாக இசை இல்லை.
பீட்டில்ஸ் இசை ரசிகர்களுக்கு இந்தப்படம் மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும்.
ச.அன்பரசு