துப்பாக்கி விதிகள் மாற்றவேண்டுமா? - கலிஃபோர்னியாவில் புதிய பிரச்னை!
வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள கில்ராய் எனுமிடத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் வெள்ளை இனவெறியர் துப்பாக்கியில் சுட்டதில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஏழாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது.
டெக்சாஸ் மாநிலம் இவ்வகையில் நான்கு துப்பாக்கிச்சூடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச்சூட்டை செய்தவருக்கு வயது 19 தான். சான்டினோ வில்லியம் லீகன் என்பவர் போலீசாரால் உணவுத்திருவிழா இடத்திலேயே கொல்லப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் துப்பாக்கிச்சூட்டிற்கு சில மணிநேரம் முன்பு மைட் ஈஸ் ரைட் எனும் ராக்னர் ரெட்பியர்டு 1890 ஆண்டு எழுதிய நூலை பகிர்ந்துள்ளார். இது வெள்ளையர்களின் இனமேன்மையை தூக்கி பிடிக்கும் நூல்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறும் சமயம் மட்டும் பேசப்படும் சமாச்சாரமாக மாறிவிட்டது. தேசிய ரைபிள் அசோசியேஷனின் பணம் பெற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் நிச்சயம் துப்பாக்கிகளை இளைஞர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. வெள்ளை இனவாதம் என்பதை போலியாக உருவாக்கி தேர்தலில் வெல்லவே அவர் முயலுவார்.
1500களில் கிரேக்கம், ரோமில் அரசு படைகளில் படகுகளில் துடுப்பு வலிக்க வெள்ளை அடிமைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர்தான் ஆப்பிரிக்காவிலிருந்து, அடிமைகள் ஆடித்தள்ளுபடி ஆபர் போல பலரும் ஐரோப்பாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதனை கடத்திச்செல்லப்பட்டும் வந்தனர். இவர்களை அடிமைகள், கடன் கூலிகள் என்றும் பிரித்தனர். இதில் கடன் கூலிகளில் வெள்ளையர்களும் உண்டு. இவர்களுக்கிடையே உறவு ஏற்பட்டது. அதாவது மண உறவும் இருந்தது. இவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டது இதைத் தடுக்க வர்ஜீனியாவில் தனிச்சட்டத்தையே இயற்றினார்கள் (உலக மக்களின் வரலாறு, கிறிஸ் ஹார்மன்). எனவே இனவாதம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டதே ஒழிய அதில் உண்மையல்ல.
துப்பாக்கிச்சூட்டில் மையமான வில்லியம் நியூசிலாந்தில் கிறிஸ்துவ சர்ச்சுகளை தாக்கிய நபருடன் தொடர்புகொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் குறைந்த அளவு துப்பாக்கிச்சூடு கொண்ட மாநிலம் கலிஃபோர்னியா மட்டுமே. இங்கு துப்பாக்கி வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 முதல் 21 என விதி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 16 சதவீத துப்பாக்கிச்சூடுகள் இங்கு நடைபெற்றுள்ளன.
நன்றி: OZY