கல்விக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு எவ்வளவு?
கல்விக்கு கை கொடுக்கிறதா பட்ஜெட் 2019?
அண்மையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் 2019இல் கல்வித்துறைக்கு 94, 854 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளுக்கென தனி அமைப்பு உருவாக்க அறிவிப்பு, உயர்கல்விக்கான செயற்பாடுகள் என பல்வேறு திட்டங்கள் மாணவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளன.
பள்ளிக் கல்விக்கான 'சமக்ரா சிகா அபியான்' திட்டத்திற்கு 36,322 கோடி ரூபாயும், மதிய உணவுத் திட்டத்திற்காக 11,200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீடான 94, 853 கோடி ரூபாயில் 56,536.63 கோடி ரூபாய் பள்ளிக்கல்விக்கும், 38,317 கோடி ரூபாய் உயர்கல்விக்கும் செலவிடப்பட உள்ளது.
2018 ஆம் ஆண்டு ஆசிரியர்களின் பயிற்சிக்கென இந்திய அரசு ஒதுக்கிய நிதி 871 கோடி ரூபாய். இந்த நிதிநிலை அறிக்கையில் அத்தொகை குறைக்கப்பட்டு 125 கோடி ரூபாயாக சுருங்கியுள்ளது.
கல்விக் கடன்களுக்கான உத்தரவாத நிதி அரசு வழங்கி வந்த 1,250 கோடி ரூபாய், நடப்பு ஆண்டில் 1,900 கோடியாக வெட்டப்பட்டுள்ளது.
நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் கல்வி உதவித் தொகைக்கான நிதி ,கடந்த ஆண்டில் 75 கோடியாக இருந்து, தற்போது 50 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய அறிவிப்பாக தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் உருவாக்கத்தைக் கூறலாம்.
கடந்த ஆண்டு 350 கோடியாக இருந்த இந்த நிறுவனத்திற்கான நிதி, 609 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், கல்விக்கொள்கை வரைவிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
”தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன்(NRF), புதிய ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதோடு, அவற்றை ஊக்கப்படுத்தும் பணியையும் மேற்கொள்ளும். மேலும் அரசின் பல்வேறு அமைச்சகங்கள் வழங்கும் ஆராய்ச்சி உதவித்தொகைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யும் ” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களுக்கு 6,843 கோடு ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடி நிறுவனங்களுக்கு 6,410 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசின் மேலாண்மை நிறுவனத்திற்கு (IIM), 445.5 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 1,036 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
நன்றி: எகனாமிக் டைம்ஸ்
படம்: நியூஸ் 18
வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்