நாட்டின் கௌரவத்தை காப்பாற்றும் நாயகன்! - கொரிய சினிமா
கான்ஃபிடன்ஷியல் அசைன்மென்ட் 2017
கொரியா
இயக்கம் கிம் சுங் ஹூன்
எழுதியவர் யூன் ஹூன் ஹோ
ஒளிப்பதிவு லீ சங் ஜே
இசை வாங் சங் ஜூன்
கதை, சேசிங், பைட்டிங் என அனைத்தும் செய்வதற்கான கதை. யெஸ் இதுவும் ஒரு கௌதம் வாசுதேவ் மேனன் ரக பிழியும் சென்டிமெண்டுகள் கொண்ட படம்தான்.
வடகொரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர், சியோல் ரியுங்(ஹியூன் பின்) கம்யூனிஸ்ட் ஊழல் வாத தேசத்திலும் நேர்மையாக வேலை பார்க்கிறார்.
ஆனால் என்ன செய்வது, அவரின் மேலதிகாரி ஊழல் பெருச்சாளி. வடகொரியா அரசு, சத்தமின்றி செய்யும் டாலர் நோட்டுகளை கள்ள நோட்டுக்களாக்கும் வேலைக்கான பிளேட்டுகளை ஆட்டையப் போட்டு காசாக்கி செட்டிலாகப் பார்க்கிறார். அதற்கு குறுக்கே வரும் வரும் ரியுங்கின் மனைவி உட்பட போட்டுத்தள்ளுகிறார்.
ரியுங்கையும் படுகாயப்படுத்துகிறார். இதனால், ஆறாத கோபத்திற்குள்ளாகும் ரியுங்கை விஷயமே புரியாமல் வடகொரிய ராணுவம் கட்டிப்போட்டு குளுக்கோஸ் கொடுக்காமல் அடிக்கிறது.
அவரால் காப்பாற்ற முடியாத டாலர் பிளேட்டை திரும்பக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் டாஸ்க். இதற்கு தென் கொரியா போகிறார். விஷயத்தை மோப்பம் பிடித்த தென்கொரியா, ரியுங்கைக் கட்டுப்படுத்த தனி போலீஸ்கார ரை(யூ ஹே ஜின்) நியமிக்கிறது. பின்னே ஒருத்தர் சீரியஸ் என்றால் இன்னொருவர் காமெடியாக இருப்பது தானே நம்ம வழக்கம்.
சூப்பர்ஹீரோ போல இல்லாமல் அடிவாங்கி சுருண்டு திருப்பி அடித்து கண்ணீர்வீட்டு அழும் ஹியூன் பின், படத்தின் ஹாட் ஷாட் நாயகன். அடிக்கடி அவரது நினைவில் வரும் பார்பி டாலை படத்தில் அதிகம் காண முடியவில்லை. ஹே ஜின்னின் வீட்டில் வரும் சுட்டிப் பெண்ணும் கிடைத்த கேப்பில் அசத்துகிறார்.
சேசிங், பைட் என அசத்தி கொரியா இரண்டும் இணையும் மெசேஜ் சொல்லி இயக்குநர் அசத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் எப்போதெல்லாம் படத்தில் ஆக்சன் காட்சிகள் வருகிறதோ அப்போதெல்லாம் உற்சாகமாகி வாத்தியங்களை வாசியோ வாசி என வாசித்திருக்கிறார். நமக்கும் உற்சாகமாக இருக்கிறது.
சோளப்பொரி இரண்டு பொட்டலம் வாங்கி சிதறச்சிதற பார்க்க வேண்டிய படம் அன்பர்களே.
- கோமாளிமேடை டீம்