சேட்டன் பகத் - வரி கட்டுப்பாட்டை விட தொழில்வளர்ச்சி முக்கியம்
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் முந்தைய காலத்தில் செய்த ஊழல்கள் முக்கியக்காரணம். ஆட்சிக்கு வந்த அரசு, உருவாக்கிய முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. ஆனால் ஒரே வரியாக இல்லாமல் ஜிஎஸ்டி5 எனும் ஐந்து வரி முறையாக சுழன்றடித்ததில், வணிகப்பட்டப்படிப்பு படித்த எனக்கே தலை சுற்றி போய்விட்டது.
இத்தனைக்கும் வணிகப்படிப்பு படித்துவிட்டு வெளிநாடுகளில் முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றிவன். இந்திய அரசு அமல்படுத்திய 0,5,18,28 என சதவீத அளவுகளில் வரியை விதித்ததில் தொழில்துறைகளே பீதியடைந்து கிடக்கின்றன. அதிலும் சினிமா துறைக்கு 28 சதவீதம், டிடிஹெச் செட்டாப் பாக்ஸ்களுக்கு 18 சதவீத வரி என்பதில் என்ன நியாயம் உள்ளதோ?
இதில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கிப் பார்ப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும்?
அதிலும் மாதந்தோறும் மூன்றுமுறை ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் விண்ணப்பங்களைப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதுபற்றி ஏதும் அறியாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவில் தொழில்முயற்சிகள் தொடங்கப்படுவது அதிகரிக்கிறது என்றால் அதற்கு காரணம் அரசிடம் உள்ள எளிய முறைகள்தான். அனைத்தும் இணைய வழியில் எளிமையாக நிறைவேறுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி அரசு என்ன மறைத்தாலும் குறைந்துவருவது உண்மை. இதனை பாஜகவைச் சேர்ந்த தலைவர்களே பகிரங்கமாக பேசி வருகின்றனர். இதனை அரசு ஒப்புக்கொள்ளாவிட்டால், மார்க்கெட் புள்ளிவிவரங்கள் அதனை விரைவில் சொல்லத்தான் போகின்றன. அரசு தன் தவறுகளை புரிந்துகொண்டு தொழில்தொடங்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதோடு வரி பிடித்தங்களையும் குறைத்தால் தொழில்துறை வளரும்.
காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வேறுபாடே, பாஜக கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொன்னதில் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை அபாரமானது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால்தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் . மக்கள் காங்கிரஸ் தவிர்த்து பாஜகவிற்கு வாக்களித்தது தமக்கு பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தானே?
கருப்பு பணத்தை ஒழிக்க வரிவருமானத்தை ஒழுங்குபடுத்துவது எப்படி முக்கியமோ, அதேயளவு தொழில்கள் நிறைய தொடங்கப்படுவது அவசியம். இதுவே இந்தியாவை உலகரங்கில் உயரிய இடத்திற்கு உயர்த்தும். மோடி பிரதமராக வென்றதற்கு காரணம் இந்த நம்பிக்கையை அவர் வலுப்படுத்துவார் என்பதால்தான். அடுத்து கிடைத்திருக்கும் ஐந்தாண்டுகளிலும் அவர் இதனை சிரமேற்கொள்வார் என நம்புகிறேன்.