மின்வாகனங்களை வரவேற்போம்!




Image result for electric bikes in india
முதல் மின் மோட்டார் சைக்கிள்



பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற வகையில் இதை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதை எதிர்கொள்ள மறுத்தாலும், பின்னாளில் நிலைமை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜி.எஸ்.டி. வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களை தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால், அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால், மின் வாகனங்களை வாங்கும் விலை, மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச் சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச் சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்.

இச்செயற்பாட்டையும் இந்தியா மின்வாகனச் சந்தையில் வலுவாகும்வரை செய்யலாம். ஏனெனில், பேட்டரிகள் சந்தையிலும், இருசக்கர வாகனங்களின் சந்தையிலும் சீனாவை வீழ்த்துவது கடினமாகவே இருக்கப் போகிறது. இன்று ஜெர்மனி, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படும் பேட்டரிகள் சிறந்தவையாக உள்ளன. இந்தியாவில் மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே, பேட்டரிகளின் தயாரிப்பும் தரமும் உயர வாய்ப்பு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மாசுகட்டுப்பாடு விதிகள் கடினமாகி வருகின்றன. ஆனால், இந்தியாவில் அந்த நெருக்கடிகள் இன்றி அரசின் மானியங்கள், சலுகைகள் மூலமாகவே நாம் மின் வாகனங்களுக்கு 2035க்குள் மாறிவிட முடியும்.

அரசு மானியங்களை அளித்தாலும், அதற்கான தொகையையும் மக்கள் வரியாகக் கட்டும் நிலை உள்ளது. எனவே, ஐ.நா. கூறியுள்ளபடி கரிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட வரி விதிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் நிதியைச் சேகரித்து மின் வாகனங்களை மேம்படுத்த, வாங்குவதற்கான மானியங்களை அளிக்கலாம்.

 பிறநாடுகளைவிட இந்தியாவில் 20 ஆண்டுகளில் மின் வாகனங்களை பரவலாக்கலாம். அரசின் கொள்கைகளோடு மக்களும் இணைந்து மனது வைத்தால் மாற்றம் சாத்தியம்தான். நிதி ஆயோக் பரிந்துரைப்படி 2035 க்குள் 150சிசிக்கும் குறைவான வாகனங்கள் மின்வாகனங்களாக மாறுவது அவசியம் என்று கூறியுள்ளது. அரசின் முனைப்புகள் அதேபாதையில்தான் செல்கின்றன. எனவே முடிந்தவரை இவாகனங்களை வாங்குவதற்கும், அதனைப் பராமரிக்கவும் கற்பது எதிர்கால பதற்றங்களைத் தணிக்கும்.

தகவல்: livemint, the Hindu




பிரபலமான இடுகைகள்