தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்


யா





ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர்.

அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி.

ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள்.


2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டதால், அமெரிக்க விசா கூட கொடுக்கப்படாமல் சிரமப்பட்டார் மோடி. அப்போது அவர் எளிதாக சென்று வந்த நாடு ஜப்பான். பின்னர் வைப்ரன்ட் குஜராத் ஸ்லோகனை சொல்லச் சொல்ல தொழில் தொடங்க பல்வேறு நாடுகளும் இங்கு பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன. இன்று மோடி பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்து விட்டார். அடுத்து மோகன் பகவத்தும் கூட ஜெர்மனிக்கு செல்லலாம்.

ஒரு நாட்டின் தூதர், ஆளும் கட்சியை மட்டுமல்ல, எதிர்கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளைச் ச்ந்திக்கலாம். ஆனால் தீவிரவாத அமைப்புகளை சந்திப்பதை என்னவென்று சொல்ல? அனைவரும் மதிக்கும் தேசத் தந்தையாக மதிக்கப்பட்ட காந்தியை கொன்ற அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பது மாறாத களங்கம். இன்றும் தங்களின் செயல்பாடுகளை கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் திருப்பியிருந்தாலும் கைகளில் குச்சி ஏந்தி பயிற்சி செய்வது, முஸ்லீம் தெருக்களின் வழியே பயணிப்பது நமக்கு என்ன உணர்த்துகிறது?

சிறுபான்மையினரை யூதர்களாக கருதும் அமைப்பு, தொடங்கி நூறாண்டு ஆனால் அது என்ன நாட்டிற்கு பெருமையா? இந்த அமைப்பை அதன் கல்வி, சேவைக்கு பெருமையாக கருதினால் ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கூட இதே போல கருதலாம் அல்லவா? வன்முறையைக் கையில் எடுத்தாலும் ஹிஸ்புல்லா இயக்கம் ஆர்எஸ்எஸ்ஸை விட மேன்மையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த சந்திப்பை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிரும் ஜெர்மனி தூதர் வால்ட்னர், ஏன் சீக்கிய, முஸ்லீம் அமைப்புகளைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

ஜெர்மன் இந்திய உறவுகளை புதுப்பிக்கும் விதமாக வால்ட்னர், இந்த சந்திப்பைக் கருதினால் நிச்சயம் அது ஜெர்மனிக்கும், இந்தியாவுக்கும் பேராபத்தாக மாறும்.

நன்றி: தி வயர்