சூப்பர் கான்செப்ட் ஆனால் படம் தேறலையே - புர்ர கதா படம் எப்படி?
புர்ர கதா - தெலுங்கு
டைமண்ட் ரத்னபாபு
இசை சாய் கார்த்திக்
ஒளிப்பதிவு சி ராம் பிரசாத்
ஆஹா!
படத்தின் கான்செப்ட் மட்டும்தான். இரண்டு மூளைகள் கொண்ட ஒருவர். படத்தின் தலைப்பு கூட ஆந்திரம், தெலுங்கானாவில் நடைபெறும் இரண்டுபேர் நடத்தும் கூத்தைக் கூறுகிறதுதான். சாய் கார்த்திக்கின் இசை, பாடல்கள் எப்போது வந்தாலும் கேட்க வைக்கிறது. ஆதி சாய்குமாரின் தோழி, காயத்ரி குப்தா கதாபாத்திரம் புதிது. காரணம், ஒரு ஆணோடு எப்போது நான்கு நண்பர்கள் இருப்பார்கள். இங்கு ஆதியோடு நான்கு பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் காமெடி வரவேயில்லை. என்ன செய்வது? பிரியதர்ஷி அல்லது ராகுல் ராமகிருஷ்ணனை வைத்திருந்தாலாவது காமெடியில் பிழைத்திருக்கலாம்.
படத்தில் ஒரே ஆறுதல், ராஜேந்திர பிரசாத்தின் நடிப்பு. இரு மகன்களின் வேறுபட்ட குணாதிசயங்களோடு போராடி முடிந்தவரை காமெடி செய்கிறார்.
மற்றபடி பிற விஷயங்கள் எதுவே வேலைக்காகவில்லை.
ஐய்யோடா!
வில்லன் கதாபாத்திரம் அபிமன்யூ சிங். விகாரி என்ற கேரக்டரில் வருகிறார். படத்தில் அடிக்கடி உள்ளேன் ஐயா சொல்லும் வாய்ப்புத்தான் இவருக்கு கிடைத்திருக்கிறது.
இருமூளைகள் கான்செப்ட் பேப்பரிலிருந்து திரைக்கு மாறவில்லையே ரத்னபாபுகாரு. எப்படி ரசிப்பது? ஒலி அதிகமாகும்போது அவரின் இன்னொரு மூளை வேலை செய்கிறது என்றால் அதனை விளக்கிச்சொல்லும் ஒரு சீன் கூட இல்லையென்றால் எப்படி?
ஹேப்பி எனும் லூசுப்பெண் கதாபாத்திரத்திற்கு பனிரெண்டாவது படிக்கும் பிள்ளையை அப்படியே தூக்கி வந்தது போல் இருக்கிறது. மிஷ்டி சக்கரவர்த்தி அழகாக இருக்கிறார். அதற்காக பச்சை மண்ணுக்கு கிளாமர் செய்வது குழந்தை தொழிலாளர் சட்டப்படி குற்றம் இல்லையா?
மொத்தமாக படத்தை பார்த்தால் வருத்தமும், கோபமும்தான் வருகிறது. பல கிளிஷே காட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு படம் என்றுதான் தோன்றுகிறது. ஆதி சாய்குமார், இந்த குப்பைகளிலிருந்து வெளியே வருவது அவரது எதிர்காலத்திற்கு நல்லது.
கோமாளிமேடை டீம்