ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!
/cdn.vox-cdn.com/uploads/chorus_image/image/64789073/VRG_ILLO_3512_001.0.jpg)
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?
நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது.
இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன.
இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோசியேஷனைச் சேர்ந்த நூறு உறுப்பினர்கள், இந்த கரன்சியைக் கட்டுப்படுத்தி விதிமுறைகளை வகுக்கின்றனர். காலிப்ரா எனும் இணைய வாலட்டில் லிப்ரா கரன்சி தொடர்பான பரிமாற்றங்களைச் செய்ய முடியும். இக்கரன்சியை ஃபேஸ்புக்கின் நிறுவனங்களான வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆகியவையும் பயன்படுத்தலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளின்படி லிப்ராவை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. ஆனால் விசா, மாஸ்டர் கார்டு உள்ளிட்ட நிறுவனங்களின் பணப்பரிமாற்றக் கட்டணங்கள் அதிகரிக்கும்போது, லிப்ராவின் சேவையை அரசு நாடலாம். பிற வடிவங்களை விட கிரிப்டோகரன்சி வழியான பணப்பரிமாற்றச் சேவைக்கட்டணம் மிக குறைவு.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக் தன் பயனர்களின் தகவல்களை வருமான நோக்கில் பிறருக்கு அளித்ததாக ஃபெடரல் டிரேட் கமிஷன்(FTC) குற்றம்சாட்டியது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படவிருக்கிறது. தன்மீதான குற்றக்கறைகளைத் தவிர்த்துவிட்டு பணப்பரிமாற்ற சேவையை லிப்ரா மூலம் ஃபேஸ்புக் தொடர்வது கடும் சவால்தான். ஃபேஸ்புக் நிறுவனத்தின் நம்பிக்கை என்பதைத் தாண்டி மேம்பாடு அடையும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே வணிகத்தில் வெல்வதற்கான வழி.
தகவல்:DC
படம் - தி வெர்ஜ்