பாத யாத்திரை - தலைவர்கள் மீண்டும் கையில் எடுக்கும் ஆயுதம்!
மோகன்தாஸ் காந்தி, 272 கி.மீ தூரம் தண்டி யாத்திரை சென்ற செய்தி இந்தியர்களை விடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபடுத்தியது. அவரையும் பிரபலப்படுத்தியது. போராட்டம் , அகிம்சை என்பதோடு தன் மீதான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் இடையறாது பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அதனால்தான் இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் ஏராளமாக எழுத முடிந்தது. பத்திரிகைகளை நடத்தி வர முடிந்தது. அந்த உழைப்பு அசாதாரணமானது. இன்று சமூகத்தோடு இணைய அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் நம்புகின்றனர். இதேகாலத்தில் ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, நாடு முழுவதும் பயணித்து மக்களைச் சந்தித்து ஆட்சியையும் பிடித்திருக்கிறார். இதேநேரத்தில் வெளியான யாத்ரா என்ற அவரது தந்தை குறித்து படமும் குறிப்பிட்ட அளவு அவருக்கு உதவியிருக்கிறது.
இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், அக்டோபர் 2 - 31 வரை பாஜக எம்பிகள், தங்கள் தொகுதிக்குள் 150 கி.மீ தூரம் பயணித்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்த ஆண்டு காந்திக்கு 150 ஆம் ஆண்டு பிறந்த தினம். கூடவே சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமும் வருகிறது. இரண்டுக்கும் மரியாதை செய்வது போல பயணத்தை மோடி பரிந்துரைக்கிறார்.
இந்தியா கிராமத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. காரணம், அவர்களுக்கான விளைபொருளின் விலை சரியாக கிடைப்பதில்லை. இதற்கான காரணத்தை எம்பிகள் இப்பயணத்தில் தெரிந்து தீர்க்க பயன்படுத்த வேண்டும் என்கிறார் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி.
பிரதமர் மோடியைக் கூறியதன் பொருள், அவர் இதனை தீவிரமாக அமல்படுத்த கூறியதன் பொருட்டுதான். அவர் மட்டுமல்ல மேலே சொன்ன ஆந்திரத்தின் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இதனை செய்திருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது நமக்கு நாமே என்ற திட்டப்படி பாத யாத்திரையை ஸ்டாலின் செய்தார். மதிமுக தலைவர் வைகோ, முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் ஆகியோர் இதில் முன்னரே ஈடுபட்டவர்கள்தான்.
மதிமுக தலைவர் கோவளத்திலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செய்துள்ளார். மக்களுடன் பேசியுள்ளார். குறைகளைக் கேட்டுள்ளார். டாஸ்மாக்கை மூடுவதற்கான பாதயாத்திரை, சமூகத்திற்கு எதிரான திட்டங்கள் மூடப்படுவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தின என்கிறார் மதிமுகவைச் சேர்ந்த நன்மாறன்.
இனிவரும் காலங்களில் மக்கள் ஒன்று திரண்டு சங்கிலியாக நிற்பது, பேரணியாக செல்வது என்பது நடக்க வாய்ப்பு இல்லை. பாத யாத்திரை மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை மக்களைச் சந்திப்பதற்கான முக்கியமான கருவியாக உள்ளது என்கிறார் அரசியல் வல்லுநர் காசிநாதன்.
வினோபா பாவே
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு வினோபா பாவே, 1951 ஆம் ஆண்டு பாதயாத்திரை மேற்கொண்டார். பதிமூன்று ஆண்டுகளில் 58 ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்தார் இந்த அரிய அரசியல் தலைவர்.
சந்திர சேகர்
ஜனதா கட்சியைச் சேர்ந்த சந்திர சேகர், 1983 ஆம் ஆண்டு நான்கு மாத பாதயாத்திரையைச் செய்தார். இதன்மூலம் 4260 கி.மீ தூரத்தை கடந்தார்.
ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி
2003 ஆம் ஆண்டு பாதயாத்திரை செய்த ராஜசேகர ரெட்டி ஆயிரம் கி.மீ. பயணித்தார். 64 நாட்கள் நடந்த இவர், காங்கிரசுக்காக இதனைச் செய்தார். இதன் விளைவாக அடுத்த ஆண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நன்றி: டைம்ஸ் - கோவர்தன்.