கூலிக்கு வேலை செய்யும் அறவீரன் டியுராங்கோ! - வன்முறை பூமியின் ரணகளம்!
டியுராங்கோ அதிரடிக்கும்
சத்தமின்றி யுத்தம் செய்
தீதும் நன்றும் பிறர் தர வாரா - 3 வது அத்தியாயம்
டியுராங்கோ, ஆலன் என்ற சுரங்க முதலாளிக்கு உதவி செய்ய வருகிறார். ஆனால் அங்கு ஆலன் முதலிலேயே டீல் என்ற போட்டி தொழிலதிபரால் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் டியுராங்கோ என நகரில் அறிவிக்கப்படுகிறது. இதனால் கொலைப்பழியுடன் அரசு கைதியாகும் பிரசனை சேர, அப்பழியைத் துடைத்து ஆலனின் மனைவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்படும் சதியை உடைக்கிறார் டியுராங்கோ என்பதுதான் இந்த பரபர காமிக்ஸ் கதை.
இதில் முழுக்க டீல் எனும் தொழிலதிபர், ஷெரீப் ஜென்கின்ஸ் ஆகியரோர் கதாபாத்திரம் வலுவாக இருக்கிறது. இதில் டியுராங்கோவின் கதாபாத்திரம் மிக வலுவாக இல்லை. முழுக்க தன்னை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்வதோடு, ஆலனின் மனைவியை நேக்காக எப்படி காப்பாற்றினார் என்பதோடு கதை முடிந்தது. அதேசமயம் டியுராங்கோவுக்கு உதவும் போட்டி நிறுவன ஆள் அவருக்கே துரோகம் செய்வது என மாறாத மனித குணங்கள், நீதி நெறிகளுகுக சவால்விடும் நகரங்கள், ஊழல் அரசியல்வாதிகள் என மனிதநேயத்தை தேடும் அவசியத்தை ஏற்படுத்தும் கதைக்களம் சற்று பயமாக இருக்கிறது.
ஆனாலும் டியுராங்கோவின் காயம்பட்டாலும் குறி தவறாத செயல்திறன் நமக்கு ஊக்கமூட்டுகிறது.
அடுத்த கதை.
ஜென்கின்ஸை மூக்கை உடைத்து டியுராங்கோ தப்பித்து அடுத்த நகருக்கு வருகிறார். அப்போது ஜென்கின்ஸ் தன் அதிகாரத்தை பயன்படுத்தி டியுராங்கோ குற்றவாளி என நோட்டீஸ் அடித்து ஒட்டுகிறார். 5 ஆயிரம் டாலர்கள் என்றால் சும்மாவா? உடனே மெக்சிகோ செல்லும் டியுராங்கோவை பிடிக்க வெகுமதி வேட்டையர்கள் கிளம்புகின்றனர். அப்படி ஒரு கிளப்பில் வாய்க்கு டக்கிலா ஊற்றிக்கொள்ள டியுராங்கோ வருகிறார். அங்கு ஆமோஸ் என்பவரை பிடிக்க வெகுமதி வேட்டையர்கள் வர, டியுராங்கோ 50 டாலர்கள் செலவில் வாங்கிய ஆட்டோமேடிக் பிஸ்டலை பயன்படுத்த வேட்டையர்களின் உடம்பில் நவதுவாரங்களுக்கு மேலாக நான்கு துளைகள் பிறக்கின்றன.
அத்தனை பேரையும் வைகுண்டத்திற்கு விசா இன்றி ட்யுராங்கோ அனுப்பிவைக்கிறார். ஆமோஸ் அவரின் பிஸ்டல் மற்றும் சுடும் வேகத்தைப் பார்த்து உடனே நட்பாகிறார். கம்பெனில சேர்ந்துரு என்று கூற, உடனே ட்யுராங்கா நான் மெக்சிகோ போகிறேன். உன் வழி வேறு என் வழி வேறு என்று கூறிவிடுகிறார். ஆனால் ஜென்கின்ஸ் சும்மா இல்லை, ட்யுராங்கோவை பிடித்து விடுகிறார். ஆனால் ஆமோஸ் உதவியால் உயிர் பிழைக்கிறார். இம்முறை ஜென்கின்ஸின் மூக்கை உடைக்காமல் நிர்வாணமாக்கிவிட்டு வந்துவிடுகின்றனர்.
அவமானப்பட்டு துக்கப்பட்டு துயரப்படும் ஜென்கின்ஸ் இம்முறை அவனை சித்திரவதை செய்து கொள்வேன் என்று சவால்விட்டு நிர்வாணமாகவே ட்யுராங்கோ தன் நண்பருடன் தங்கியுள்ள நகருக்கு வந்து ஷெரீப்பை சந்திக்கிறார். யெஸ் இம்மியளவு கூட டிரஸ் இல்லாமல்தான். பகபகவென சிரிப்பவர் உதவி செய்ய ஒப்புக்கொள்கிறார்.
இறுதிக் காட்சியில் ட்யுராங்கோவை நம்பி வரும் லாட்ஜ் ஒனரின் மனைவி, உதவியால் எதிரிகளை எப்படியோ சமாளிக்கிறார்கள். ஆனால் கையில் தோட்டா பொத்தல் விழுகிறது. பிஸ்டலும் கைக்கு எட்டாமல் போகிறது. இறுதியில் ஜென்கின்ஸ் கையில் மீண்டும் காயம். ட்யுராங்கோ கைதாகிறார். ஆமோஸ் தோள்பட்டை காயத்தோடு தப்பிவிடுகிறார். இத்தனைக்கும் காரணம் லாட்ஜ் ஓனரின் பேராசைதான். அவரின் பேராசையால்தான் போலீஸ் ஆமோஸை பின்தொடர்ந்து வருகிறது.
ஆமோஸ் காசு கொடுத்தாலும் கிடைக்காத நண்பர் ட்யுராங்கோவிற்காக காத்திருப்பதோடு காமிக்ஸ் முடிகிறது.
-டாம்கேட்
கோமாளிமேடை டீம்