சுயநல உலகில் நட்புக்கு என்ன அவசியம்?
மயிலாப்பூர் டைம்ஸ் - நட்புக்கு என்ன அவசியம்?
நீங்கள் கிராமத்தில் வசித்தாலும் சரி, நகரத்தில் வசித்தாலும் சரி உங்களுக்கென நட்புகள் உருவாகும். இதில் நீங்கள் மோசமாக நடந்துகொள்கிறவர் என்றால் உங்களுக்கு கிடைக்கும் நட்பும் அதுபோல அமைவது விதி. சரியாக நடந்துகொண்டால், இயல்பாகவே அந்த ரேஞ்சில், ஜென்டில் மேனாக லினன் ஷர்ட் போட்டு பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கினால் கூட கற்பகாம்பாள் கபாலியில் வெங்காய பக்கோடா வாங்கி கொடு என கேட்டுத் தின்னும் நட்புகளும் அமையலாம்.
எனக்கு இந்த வகையில் அமைந்த நட்புகள் எல்லாமே குறிப்பிட்ட லட்சியப்போக்கு கொண்டவர்கள்தான். அதேசமயம் அமைதியைப் பார்த்து என்ன சொன்னாலும் கேட்பான், வம்பு தும்பு இல்லாத ஆத்மா என கடைவிரித்து நட்பு பாராட்டிய ஆட்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம்.
அனைத்திலும் தொட்டும் தொடாத பிராணியாகவே இருந்து வந்திருக்கிறேன். காரணம், நான் எந்த நட்பையும் தேடிப்போய் அமைத்துக்கொள்வதில்லை. தானாகவே அமைந்தால் சரி. இல்லையென்றால் ரயில் பயண நட்பு போல அமைந்தாலும் சரி, காலகட்டத்திற்குள் கட்டுப்பட்டதுதானே அப்படியே இறங்கிப் போய்விடுவேன்.
பத்திரிகை வேலையில் இருக்கும்போது அந்நிறுவன காவலர் ஒருவர் அறிமுகமானார். மொத்தம் மூன்று காவலர்கள் செல்வ அதிபதி, வெளிச்சம் , ஜெயம் என பொருள் கொண்ட மூவர். இதில் வெளிச்சம் ஆன்மீக அதிபதி. சாமி என்று சொன்னாலே சொன்ன வாயில் திருநீறு அள்ளி வீசி கற்பூரத்தை பற்றி வைத்து ஆரத்தி எடுப்பார். தனபால், தூங்கும் போதும்,பத்திரிகை வாசிக்கும்போதும் காட்டும் தீவிரத்தை ஆசான் ஜெ, எழுதும்போது நீங்கள் பார்க்கலாம். மற்றபடி யார் வந்தாலும் உடனே அட்டேன்ஷன் என்று அவரது உள்ளே குரல் கேட்கும். உடனே எழுந்து நிற்பார்.
ஜெயம், லஞ்சம் வாங்கும் போலீஸ் போல. இவனுக்கெல்லாம் எந்திரிச்சு நின்னு யோசிப்பவர், சட்டையை டக் இன் செய்தால் உடனே எழுந்து வணக்கம் வைப்பார்.
இவர்தான் முதலில் அங்கு நண்பரானவர். பேசும்போது முதலில் சம்பளம், யாரு என்ன ரேங்க் என்று பேச்சுவாக்கில் கேட்டார். நான் எப்போதும் போல தண்ணீர் சல்லடையில் தங்காது என்பதை நிரூபிப்பது போல உளறிக் கொட்டினேன். அப்புறம் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு உதவி என்றார். பணம் தவிர்த்து எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றேன். உடனே பணம்தாங்க வேணும். சரிங்க வேற யாருகிட்டயாவது வாங்கிக்கிறேன் என்று முகத்தை சுருக்கிக்கொண்டார். அப்புறம்தான் அவரின் சகுனித்தனம் தொடங்கியது.
யாராவது காசு குறைவாக இருக்கிறது என்றால் உடனே காற்று வாங்க அங்கு உலாத்தும் என்னை காட்டி சாருகிட்ட வாங்கிக்கோ மாட்டேன்னே சொல்ல மாட்டாரு என்று பேச ஆரம்பித்தார். எனக்கு ஒரே சங்கடமாக போய்விட்டது. பணம் தருவது பிரச்னையில்லை அதை சரியான நேரத்தில் அழுத்தி கேட்டு வாங்கும் சாமர்த்தியம் எனக்கு கிடையாது. இதற்கு பள்ளி தொடங்கி கல்லூரி வரை எடுத்துக்காட்டுகள் ஏராளம். இறந்துபோன ஆத்தாவைக் கேட்டால் காதில் ரத்தம் வருமளவு என்னைப் பற்றி பேசுவாள். நான் மட்டுமல்ல எங்கள் குடும்பமே இதனால் பல ஆயிரங்களை இழந்திருக்கிற கதை அப்புறம்தான் தெரியும்.
இது பற்றி தந்திரங்களை நண்பர் பி மிக இலகுவாக கையாண்டு பிரமிக்க வைத்தார். நாங்கள் ரெகுலராக சென்று டீ குடிக்கும் சேட்டா கடை உண்டு. அங்கு டீ போடுபவர் எதார்த்தமாக பேசத் தொடங்கினார். தந்தியில் விளம்பரம் கூட போடமுடியாத சிறு படங்களில் நடித்தேன் என்று பேசத் தொடங்கினார். பி, முதலில் கவனமாக கேட்டவர், அவர் தினசரி டீக்கடையில் கிடைக்கும் பணம் என்ற பகுதிக்கு வந்ததும் சரிப்பா என்று பணத்தை குடுத்துடு என்று ஒரே வார்த்தையில் சொல்லிட்டு நகர்ந்து வந்துவிட்டார். ஏன் பேசிக்கிட்டிருக்கும் போது உடனே கட் பண்ணினா மாதிரி வந்திட்டீங்க என்றேன். டேய் அவன் இன்னும் ஒரு நிமிஷம் பேசுனா நிச்சயம் நம்மகிட்ட பணம் கேட்பான் என சொல்லிவிட்டு சிகரெட் பற்ற வைத்தார்.
தேவையில்லாமல் ஒருவரை ஒருவர் புகழ்ந்தாலே அதன் அர்த்தம் டப்பு எதிர்பார்த்து நம்மை அதற்கேற்ப தயாரிக்கிறார் என்றுதான். இதற்கும் அடுத்த எடுத்துக்காட்டை தெலுங்கு நண்பரிடமிருந்து நண்பர் பி பெற்றார்.
அவரவரின் மனம், கருத்திற்கேற்ப நட்பு அமைத்துக்கொள்வதே நல்லது. அனைவருக்கும் நட்பாக இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்று.
நட்பில் ஒவ்வொருக்குமான சுதந்திரம் உண்டு. நம்பிக்கை உண்டு. இதை அனுசரித்தால் மட்டுமே அந்த உறவு தொடரும். இதில் காலத்திற்கும் முக்கியப் பங்குண்டு.
படம் - பின்டிரெஸ்ட்