வீல்சேரில் ஆர்ட் - கலக்கும் ஐரிஷ் சகோதரிகள்!
வீல்சேரில் ஆர்ட்!
அய்ல்பே கீன், தன்னுடைய மாற்றுத்திறனாளி தங்கையின் வீல்சேரையே கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார். ஸ்பினை பைஃபிடா எனும் குறைபாட்டால் கீனின் சகோதரி பாதிக்கப்பட்டார். இதன்விளைவாக சக்கர நாற்காலியை நம்பியுள்ளார்.
இவரது சக்கர நாற்காலியை வண்ணமாக்கியுள்ளார் கீன். இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். டப்ளினைச் சேர்ந்த இஸ்ஸி வீல்ஸ் எனும் அமைப்பை இச்சகோதரிகள் தொடங்கியுள்ளனர். இவர்கள் சக்கர நாற்காலியில் பயன்படுத்தும் வண்ணச் சக்கரங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனை விற்க இவர் விளம்பரம் ஏதும் செய்வதில்லை. இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டும் விளம்பரத்தின் பணியை செவ்வனே செய்கின்றன.
2016 ஆம் ஆண்டு இஸ்ஸி வீல்ஸ் என்ற திட்டத்தை கல்லூரி புராஜெக்டாக தொடங்கினார் கீன். இவர் ஓராண்டாக தன் சகோதரியின் சக்கர நாற்காலியை எப்படி மேம்படுத்துவது என யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
கீன் மற்றும் இசபெல் இருவரும் இந்த அமைப்பு மூலம் வரும் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதியை அயர்லாந்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புக்கு வழங்கி வருகின்றனர். 35 நாடுகளில் 40 டிசைனர்கள் சக்கர நாற்காலிகளுக்கான வடிவமைப்புச் செய்து வழங்குகின்றனர்.
சக்கர நாற்காலிகள் வண்ணத்தை மாற்றினால் அவர்களின் வாழ்க்கை எப்படி மாறும்? பொதுவாக மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்களை பொது இடங்களில் கழிவிரக்கமான கண்களுடன் பார்ப்பார்கள். அறைக்குள் வந்தால் யானையைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். ஆனால் இதுபோல சக்கர நாற்காலிகளை வண்ணமயமாக்கினால் இதுபோன்ற பிரச்னைகள் குறையும் என்கிறார் இசபெல். அயர்லாந்தில் 13 சதவீத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
கீன் மற்றும் இசபெல் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உடை உட்பட பல்வேறு விஷயங்களை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ஃபேஷன் பிராண்ட் உருவானாலும் ஆச்சரியம் இல்லை.
நன்றி: Ozy - fiona zublin