பசி தீர்க்குமா மரபணு செம்மையாக்கல் நுட்பம்?
உணவுத்தேவைக்கு உதவும் மரபணு செம்மையாக்கல் நுட்பம்!
மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை விட மரபணு செம்மையாக்கல் தொழில்நுட்பம் எதிர்கால உணவுத்தேவையை தீர்க்கும் என உயிரியல் ஆய்வாளர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.
சீனா, இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, சுகாதாரமான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கான பிரச்னைகளும் பற்றாக்குறையும் தொடங்கிவிட்டது. இதற்கான தீர்வாக விவசாய நிலத்தை அதிகரிப்பது சாத்தியம் அல்ல.
பல்வேறு நாடுகளும் அறிவியல் முறையில் மரபணு மாற்ற பயிர்களை விளைவித்து உணவுத்தேவையைத் தீர்க்க முயன்று வருகின்றனர். இம்முறையில் கத்தரிக்காய், சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் மகசூல் குறைவு, செலவு ஆகியவற்றை முன்னிறுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழும்பி வருகின்றன.
இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, மரபணு செம்மையாக்கல் நுட்பம் உதவும் வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்ற பயிர்களை அறிவியல் துறையில் ட்ரான்ஸ்ஜெனிக் க்ராப்ஸ்(Transgenic Crops) என்று அழைக்கின்றனர். நோய்தடுப்புக்காக தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மரபணுக்களை எடுத்து பயிர்களின் மரபணுக்களில் பொருத்தி பயிர்களை விளைவிப்பதுதான் இதிலுள்ள அறிவியல்.
மரபணு செம்மையாக்கல் இதற்கு மாற்றாக இருக்க முடியும். எப்படி? நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள பயிரின் மரபணுக்களில் உள்ள டிஎன்ஏவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாற்றினால் போதும். டிஎன்ஏவை புத்தகம் என்று கருதினால், மரபணுக்கள் அதிலுள்ள எழுத்துக்கள் போல. ஆசிரியர் நூலிலுள்ள கட்டுரைகளை செம்மையாக்கம் செய்து வாசகர்களை படிக்கும்படி செய்கிறாரே அதேபோலத்தான்.
மரபணு மாற்றம் என்பது மருத்துவ துறையில் புகழ்பெற்றதாக இருந்தாலும் விவசாயத்துறையில் இன்னும் பிரபலம் பெறவில்லை. மரபணுமாற்றத்தை இன்று செய்தாலும் அதில் நாம் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்க பல்லாண்டுகள் தேவை. பாரம்பரியமாக பயிர்கள் நிலப்பரப்பு,சூழல் ஆகியவற்றை ஏற்று இம்முறையில்தான் அதன் மரபணுக்கள் உருவாகி வந்திருக்கின்றன.
கிரிஸ்பிஆர் (CRISPR (Clustered Regularly Inter Spaced Palindromic Repeats) எனும் மரபணு செம்மையாக்கல் இதற்கு மாற்றாக நம்பிக்கையளிக்கும் நுட்பமாக வளர்ந்துள்ளது. பயிர்களின் மரபணுக்களைத் தேவைக்கேற்ப நேரடியாக மாற்றி அமைக்கலாம். பிற உயிரிகளின் மரபணுக்களை இதற்காக தேட வேண்டியதில்லை.
வெப்பமயமாதலின் விளைவாக விவசாயம் சரிவைக் கண்டுள்ளது என்பது உண்மையே. நீரை குறைவாக பயன்படுத்தும், மகசூல் அதிகமான, பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் தாக்காத பயிர்களை வளர்க்க மரபணு செம்மையாக்கல் தொழில்நுட்பத்தை நாம் நாடுவது எதிர்காலத் தேவை.
தகவல்:Educationtimes
வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்
படம் பின்டிரெஸ்ட்