காதல் மன்னன் கல்யாண மாலைக்கு ரெடியாவதுதான் இந்த ஹிப்பி!
ஹிப்பி - தெலுங்கு
டிஎன் கிருஷ்ணா
ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஆஹா
பொங்கி வழியும் இளமை, திகங்கனாவின் அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம். பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் பிரமாதம். நிவாஸின் இசை காதில் தென்றலாக ஒலிக்கிறது. நவீன காதலர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும், லிவ் இன் உறவையும் காட்டியிருக்கிறார்கள். நாயகிக்கு நிகராக சட்டையே வேண்டாம், என நாயகன் கார்த்திகேயா அடிக்கடை வெற்று மேலாக சுற்றுகிறார். சிக்ஸ்பேக் உடம்பு வைத்திருக்கிறார். அதற்காக சட்டையை கழற்றிப்போட்டுக்கொண்டே இருந்தால் எப்படி ப்ரோ? நாங்க ஹீரோயினைப் பார்ப்போமா இல்லை உங்களைப் பார்ப்போமா?
ஹிப்பியாக தெருவில் சண்டை போட்டு கிடைக்கும் காசை பெண்களுக்குச் செலவு செய்த மஜாவாக இருக்கும் தேவா, எப்படி அமுல்யதாவிடம் காதல் சொல்லி கைமா ஆகிறார் என்பதுதான் கதை. கதையிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்க முடியும் என்று. அதை மட்டுமே இயக்குநர் தர முயற்சி செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோரின் காமெடி கச்சிதமாக வேலை செய்கிறது.
படம் இளைஞர்களுக்கானது என்பதால், பத்தாவது படிக்கும் ஆன்டியிடம் செய்த சில்மிஷங்கள் வரை இருப்பதால், கவனம். உயிர் போய்விடும் என்பதை விட எரக்ஷன் கட்டாகிவிடும் என்பதால் ஆஸ்பிடலுக்கு ஓடும் காட்சிகளில் கார்த்திகேயா பின்னுகிறார்.
அய்யய்யோ!
காதலை கழற்றிவிட தேவா செய்யும் கோக்குமாக்கு வேலைகள், ஐய்யோடா சொல்ல வைக்கின்றன. ஜான் மில்டனின் கவிதை வரிகளை வேறு சொல்லி பிரமிக்க வைக்கிறார்கள். என்னவோ, மற்றபடி காதலோ, கல்யாணமோ அனைத்தையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்களின் வாழ்க்கை இது. அதனால் நெஞ்சு பொறுக்குதில்லையே என குமுறாமல் படம் பார்ப்பது நல்லது.
காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் என ஜாலியாக பார்க்கவேண்டிய படம் இது. பெரிதாக எதையும் நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹிப்பி அப்படி பார்க்கவேண்டிய படம்தான்.
- லாய்ட்டர் லூன்