முகமறியும் சோதனை - இந்திய அரசின் புதிய முயற்சி!
முகமறியும் சோதனையை ஆதரிக்கலாமா?
இந்தியாவில் முகமறியும் சோதனை ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் நகரில் அறிமுகமாகி உள்ளது. விமானநிலைய பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜூலை 1 முதல் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் முகமறியும் சோதனை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தன்னார்வமாக 250 பேர் இணைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா விமானநிலையம், போர்ச்சுகீசிய நிறுவனமான விஷன் பாக்ஸூடன் முகமறியும் சோதனை தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய அரசின் டிஜி யாத்ரா கொள்கைக்கேற்ப இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு உருவான இச்சட்டப்படி, இவ்வசதியைப் பயன்படுத்த பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பயோமெட்ரிக் வசதிகளைக் கொண்ட ஆதார் இருந்தால் கூட போதும்.
காவல்துறை, தேசிய குற்றப்பதிவு ஆணையம் முகமறியும் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், மக்களின் பாதுகாப்புக்காக முகமறியும் சோதனைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வேலை செய்யும் விதம்!
பயணிகள் தம் விமான நிலையத்தில் ஆதாரங்களை முன்னமே சமர்ப்பிக்க வேண்டும். விமான நிலைய வாசலுக்கு முன்பாகவே முகமறியும் சோதனைக்காக தனி இயந்திரம் அமைக்கப்பட்டிருக்கும். இக்கருவி, பயணிகளின் முகத்தைப் படம்பிடித்து, ஆதாரிலுள்ள படத்துடன் ஒப்பிட்டு நமது முகம், கண்கள் ஆகியவற்றைச் சோதிக்கும்.
ஆதார் இல்லாத வேறு ஆதாரங்களைக் கொடுத்தால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு குறுஞ்செய்தி வரும். அதிலுள்ள எண்ணைக் குறிப்பிட்டால் போதும். இதோடு மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் மற்றொரு முகமறியும் சோதனை இயந்திரமும் இதில் உண்டு. இதில் சேகரிக்கப்படும் பயணிகளின் தகவல்களை தனியார் நபர்கள் சேகரிக்கின்றனர். மேலும் இத்தகவல்கள் பயணிகளின் அனுமதியோடு, பிற விடுதி, வாகன நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம்.
இழப்பீடு!
ஆதார் அட்டை பயோமெட்ரிக் தகவல்களே கசிகின்றன என்று புகார்கள் கிளம்பி வருகின்றன. எனவே முகமறியும் சோதனை பற்றியும் பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் உருவாவது இயற்கையானதே. இதற்கு அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம்(43 ஏ) 2008 உதவுகிறது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், அவரின் ஒப்புதலின்றி பிறருக்குப் பகிரப்பட்டால், குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது அவர் இச்சட்டப்படி ரூ.5 கோடி வரையில் இழப்பீடு கோரமுடியும். இந்த விவகாரத்தில் மக்களின் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அரசின் கைகளில்தான் உள்ளது.
தகவல்:Scroll.in
வெளியீட்டு அனுசரணை- தினமலர் பட்டம்
படம் - கன்ஸ்யூமர் ரிப்போர்ட்