சாலையில் சில கதாபாத்திரங்கள்- இதுதாங்க சென்னை
சாலையில் சில கதாபாத்திரங்கள்...
தினசரி சாலையில் நீங்கள் பயணிக்கும்போது, பல்வேறு மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் சில குறிப்பிட்ட மனிதர்களை மறக்கவே முடியாது. காரணம், அவர்கள் சாலையில் நடந்து கொள்ளும் விதம்தான். வெரைட்டி கதாபாத்திரங்கள் இதோ!
ஹெலிகாப்டர் ஆட்டோ!
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு தனி அடையாளம் உண்டு. அது என்ன? ஹெலிகாப்டர் போல எந்த இடத்திலும் லேண்ட் ஆகும் வசதிதான் அது. பின்னே வருபவர்கள் இதனைக் கவனிக்காவிட்டால் புத்தூர் கட்டு நிச்சயம். இடதுபக்கம் இன்டிகேட்டர் போட்டு வலது பக்கம் கைகாட்டி நேரே செல்லும் பாணியை உருவாக்கியது நம்ம ஆட்டோஜிக்கள்தான். இன்று இவர்களையும் லெஃப்டில் ஓவர்டேக் செய்து பறக்கிறது உணவு டெலிவரிப் படை.
ஸ்கூட்டி ராணி!
ஸ்கூட்டர் கம்பெனியே, காம்போ பிரேக் வைத்து தந்தாலும், நம்பிக்கையின்றி கால்களை ஊன்றலாமா என்ற கேள்வியுடன் பயணிப்பவர்கள்தான் இவர்கள். இடதா, வலதா என அவர்களுக்குமே புரியாமல் சாலையில் உத்தேசமாக ஒரு திசையில் நிற்பார்கள்.
ஸ்கூட்டி பெண்கள், பச்சை விழுந்ததும் எஃப் 1 வேகத்தில் பறப்பதைப் பார்த்து இளம் பைக்கர்களுக்கே புரையேறுகிறது. சாலைச் சந்திப்புகளில் கூட ஆக்சிலேட்டரை முறுக்கி டெரர் காட்டி முன்னேறுவது ஸ்கூட்டி ராணிகளின் தனி ஸ்டைல்.
சைக்கிள் நேசர்!
அனைத்து வாகனக் கும்பல்களில் ஒரு சைக்கிள் நேயரேனும் கண்டிப்பாக இருப்பார்கள். நடுரோட்டில் நிதானமாக போய் திட்டுவாங்குவது, பாயும் வண்டிகளால் அடிபடுவது சைக்கிள் நேசர்களுக்கு தினசரி நிகழ்ச்சி. புயல்வேக வண்டிகளுக்கிடையேயும் மரணக்கிணற்றில் வண்டி ஓட்டுவதுபோல நிதானம் கடைப்பிடிப்பது சைக்கிள் நேசர்களின் சிறப்பு. அதிலும் நடந்து செல்பவர்களை பெல் அடித்து மிரட்டுவது இவர்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
இன்னோவா மிரட்டல்!
ஆட்டோ, உணவு டெலிவரிப்படை ஆகியோருக்கு அடுத்தபடியாக பாதசாரிகள், பயந்து நடுங்குவது இன்னோவாக் காரர்களுக்குத்தான். வி.ஐ.பிக்களின் வாகனமாக பார்த்து பழகியதால் கொண்டை விளக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் இக்காரைப் பார்த்து சாலையைக் கடக்க நடுங்குகின்றனர். எந்த சிக்னல்களுக்கும் கட்டுப்படாமல் புலியெனப் பாய்வது இன்னோவாவின் அடையாளம்.
இது என் சாலை!
இந்த நினைப்புடன் வண்டி ஓட்டுபவர்களில் பைக்குகளும், கார்களும் உண்டு. பெரும்பாலும் கார்வாசிகள்தான் சாலையில் மிக நிதானமாக சென்று பாராவின் தலைப்பை நமக்கு நினைவூட்டுகின்றனர்.
இரண்டு பைக்குகளில் மெதுவாக பேசியபடியே சென்று பீக் அவரில் நட்பு வளர்ப்பது நியாயமாரே! ஒரு லிட்டருக்கு 5 கி.மீ. என்பதை போக்குவரத்துறையை விட கறாராக கடைபிடிப்பது கார்வாசிகள்தான். கட்டை ரோட்டில் நிதானமாக வண்டி ஓட்டி, பின்னே வருபவர்களுக்கு வெறுப்பு வெந்நீர் ஊற்றுவார்கள்.
ஹார்ன் அடி, ரூட்டைப் பிடி!
தை பிறந்தால்தானே வழி என இழுக்காதீர்கள். சென்னையில் ஹார்ன் அடித்தால்தான் வழி என்பதை எல்ஐசி காப்பீட்டை விடவும் மக்கள் ஸ்ட்ராங்காக நம்புகின்றனர்.
ஹாரன் ஒலி, மூலாதாரத்தில் கிளம்பி சகஸ்ரஹாரம் வரை சூடு கிளம்பி உங்களை அதிர வைத்தால், சந்தேகமில்லை; நீங்கள் மவுண்ட்ரோடு சிக்னலில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். இடமிருக்கிறதோ இல்லையோ ஹார்ன் அடி, வழி கிடைக்கும் என்பது சென்னை மக்களின் கான்க்ரீட் நம்பிக்கை.
அலட்டல் ஆன்ட்டிகள்
வாலிப வயதைக் கடந்த ஆன்ட்டிகள்தான் இந்த அநீதியை நமக்கு நிகழ்த்துவது. சிக்னலில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தை அடைத்து கார் நிற்கும். உள்ளே பார்த்தால், சென்னை லைவ் ரேடியோவை கேட்டபடி விரல்களில் பூசிய லிப்ஸ்டிக் நேர்த்தியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். இவ்வகை லேடிகளை கடந்து சாலையைக் கிராஸ் செய்து வலதுபக்கம் திரும்புபவர்கள் படும்பாடு சொன்னால் புரியாது.
நட்பே துணை
சாலையில் ஆறுபேர் ஒன்றாக தோள் பற்றி நடந்து நட்பை போற்றுவது இக்கூட்டத்தினரின் ஸ்டைல். ஹார்ன் அடிக்கிறார்களா? போக்குவரத்து நெரிசலா? எதைப்பற்றியும் கவலைப்படாமல் நட்பே துணை என்று கேலி பேசி நடந்து பிரமிக்க வைப்பார்கள். இதில் பள்ளி மாணவர்கள், தாய்மார்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு முக்கிய இடமுண்டு.
மூலம் - இந்தியன் எக்ஸ்பிரஸ்
படம் - பின்டிரெஸ்ட்