துரியோதனின் கதை! - கௌரவன் சொல்லும் தர்மத்தின் கதை!





Image result for கௌரவன்



கௌரவன்

ஆனந்த் நீலகண்டன்



எதிர்நாயகர்களைப் பற்றி கதைவரிசையில் ராவணனை அடுத்து கௌரவர்களில் ஒருவரான துரியோதனின் கதை. முதல்பாகத்தில் துரியோதனின் இளமைப் பருவம், பெற்றோரின் அன்பு கிடைக்காத வாழ்க்கையில் நண்பர்களே ஆதரவாக அமைகிறார்கள். ஏழைமக்கள் பற்றி கவலைப்படுபவனுக்கு பலராமனின் கதாயுதம் மூலம் கிடைக்கும் பலம், பீமனைப் பற்றிய பயத்தை நொறுக்குகிறது.

இதன் விளைவாக பலம் பெறுபவன் சாதிமுறைக்கு எதிர்ப்பாக கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரன் என நண்பர்களை சேர்த்து அஸ்தினாபுரத்தில் வாழ்கிறான். ஆனால் காந்தார இளவரசன் சகுனியில் மனதில் தன் பெற்றோரை பீஷ்மர் கொன்ற வன்மம் குறையாமல் உள்ளது. இதற்காக சிறு கொள்ளையனான துர்ஜயன் மற்றும் கட்டிடக் கலைஞனான ஊழல் மனிதர் புரோச்சனன் ஆகியோரைப் பயன்படுத்துகிறான்.

பரதகண்டம், தென்னக மன்னர்கள் கூட்டமைப்பு என சாதிமுறைகளால் பிளவுபட்டு கிடக்கிறது. இதற்கு பரசுராமன் காரணமாக இருக்கிறார். அவருடன் செய்யும் உடன்பாட்டை நினைத்து பீஷ்மர் மருகுகிறார். அதேசமயம் இவர் தன் இளம் வயதை துரியோதனுடன் ஒப்பிட்டு ஒன்றுபோலவே இருக்கிறது என ஆறுதல் கொள்கிறார்.

பட்டத்து இளவரசராக துரியோதனன் கவனமாக செயல்பட வேண்டும் என கூறுகிறார். துரியோதன் மீது கொலைப்பழி விழுந்து செய்யாத கொலைக்காக அவன் தூண்டப்படவேண்டுமென சகுனி செய்யும் முயற்சியும் வீணாகிறது. இன்னொரு வாய்ப்புக்கு அவன் காத்திருக்காமல் இயல்பாக வே அந்த வாய்ப்பு அமைகிறது. பகடைகள் உருட்ட இந்திரப்பிரஸ்தம் சரிகிறது. அதோடு முதல் பாகம் நிறைவு பெறுகிறது.


எந்த மாயமந்திரங்களும் இல்லாத கதை. இதில் பழங்குடி இனத்தவராக வரும் ஜரன், பார்வையற்ற நாய் அனைத்து முக்கிய காட்சிகளின் பின்னணியிலும் உள்ளனர். இவர்கள்தான் அந்த சம்பவங்களின் அவலத்தை நமக்கு உணர்த்துகின்றனர். தர்மம் என்பது என்ன என்பதைப் பற்றிய கேள்வியை எழுப்பும் முக்கிய கதாபாத்திரம் இது. இக்கதாபாத்திரம் அப்படியே ராவணன் கதையில் வரும் பத்ரன் போலவே உள்ளது.

மற்றபடி கதையில் வரும் அர்ஜூனன், ஏகலைவன், வேடுவப்பெண், குழந்தைகளுக்காக வருத்தப்படும் பகுதிகள் பொருந்தவில்லை.

கர்ணன், பலராமன் உரையாடும் பகுதிகள் நன்றாக எழுதப்பட்டுள்ளன.


புராணங்களை மறு உருவாக்கம் செய்து எழுதுவது நல்லவழிதான். புதிய புதிய கதாபாத்திர கோணங்களை இதன் மூலம் நாம் பார்க்க முடிகிறது.

- கோமாளிமேடை டீம்