மாலனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? - அந்திமழை வெளியீடு



Image result for malan narayanan


எந்த இடத்தையும் அடைய அல்ல , சும்மா நடக்கவே விரும்புகிறேன்

மாலன்

அந்திமழை


மூத்த பத்திரிகையாளரான மாலனை, அந்திமழை இளங்கோவன் அடையாளம் கண்டு  நேர்காணல் செய்துள்ளார். அவரின் முன்னாள், இந்நாள் எதிர்கால திட்டங்களை இந்த நூலில் நாம் நிதானமாக வாசித்து அறிய முடிகிறது.

வங்கி அதிகாரியின் மகனாக பிறந்த மாலன், பின்னாளில் குங்குமம், தினமணி, இந்தியா டுடே, குமுதம், புதிய தலைமுறை, சன் டிவி என பல்வேறு ஊடகங்களில் சாதித்தவர். பல்வேறு புதிய முயற்சிகளை திறம்பட செய்தவர்.

இன்று மாலன் சமூக வலைத்தளங்களில் எழுதும் விஷயங்களின் சார்பு நிலை பற்றிய குறிப்பும் இந்த நூலில் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியா, தவறா  என்பது வாசிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். மாலனின் பாரதி பாசம், தினமணியில் செய்த மாற்றங்கள். அதன் கேப்ஷனை வடிவமைத்தது என நுணுக்கமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளன. குங்குமத்தில் சாவியின் நட்பு, திசைகளின் தொடக்கம், அதில் செய்த புதுமைகள், சுஜாதாவுடனான நட்பு,  திசைகளின் அட்டைப்பட மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

இந்தியா டுடே பத்திரிகையில் செய்திகளோடு சிறுகதைகளும் கொண்டு வந்த திறமை மிரள வைக்கிறது. அச்சூழலில்  அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும் சிறப்பு.

பேட்டியோடு கூடுதலாக மாலன் எழுதிய சிறுகதை ஒன்று. அவர் இதுவரை எழுதிய நூல்களின் பட்டியல் ஆகியவை நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை துறை சார்ந்தவர்கள் மட்டுமன்றி பிறரும் படிக்கும்படி நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள கலாப்ரியாவைக் கடந்துதான் நூலை வாசிக்கவேண்டும். அதிலேயே மாலனைப் பற்றி விளக்கமாக எழுதிவிட்டார். படிக்க பிரமாதமாக உள்ளது.


கோமாளிமேடை டீம்







பிரபலமான இடுகைகள்