எந்த வயதில் உடல் உறுப்புகள் செயல்திறனை இழக்கின்றன?




tired the office GIF
giphy





இன்று இளைஞர்கள் முதியர்களைப் பார்த்து, 40 பிளஸ் ஆட்களை தீவிரமாக வெறுக்கிறார்கள். கிண்டலாக பேசுவதும், நேரில் பார்த்தால் சூப்பர் சார் என பாராட்டுவதாக இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சம வயது நட்பு என்பது வேறுதானே? நம் உடல் பாகங்கள் குறிப்பிட்ட வயதில் செல்களை இழந்து முதுமை பெறத் தொடங்குகின்றன. இதை தலைமுடிக்கு இண்டிகா டை அடித்தாலும் தடுக்க முடியது. கற்பகாம்பாள் மெஸ்சில் சுகாதார உணவு வாங்கி சாப்பிட்டாலும் வேலைக்கு ஆகாது. இருந்தாலும் உடற்பயிற்சி உடல் கட்டு விடாமல் பார்த்துக்கொள்ளும். இப்போது அந்த தகவல்களைப் பார்ப்போம்.


கண்கள்

நம் உடலில் உள்ள எம்.பி குறிப்பிட முடியாத கேமரா. நாற்பது வயதில் தன் செயல்திறனை இழக்கத் தொடங்குகிறது. இதனால் முதலில் கண்புரை போன்ற பிரச்னைகள் தொடங்கும். பின் பார்வை தெளிவின்மை ஏற்படும். புகைப்பிடித்தல் இந்த விஷயங்களை இன்னும் வேகமாக்குகிறது. முடிந்தளவு வெயிலில், வெளியில் செல்கிறீர்கள் என்றால் குளிர்கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பவர் கிளாஸ் அணிந்திருந்தால், சென்னகேசவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு விதி அவ்வளவுதான்.


நுரையீரல்


நுரையீரல் என்பது அரசு ஊழியர்களைப் போல. காலையில் வேலைக்கு வந்து பத்துமணிக்கு ஏசியைப் போட்டு சேரில் உட்காரும்போதே மாலை நான்கு மணிக்கு வரும் அசதி , அவர்களின் முகத்தில் தெரியும். நுரையீரல் கூட அப்படித்தான். உங்களுக்கு 30 வயது ஆகும்போதே, என்னை விட்ருப்பா என தன் செயல்திறனில் ஒரு சதவீதத்தை தனியார்மயமாக்கிவிடும். அதாவது, செயல்பாடு குறையும். நீங்களே பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். என்ன செய்யலாம்? ஒரே வழி உடற்பயிற்சிதான்.


தசைகள்

இருபது வயதில் அர்னால்டு எப்படி இருந்திருப்பார் என்பதை போஸ்டர்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதே அர்னால்டு அரசியலில் ஈடுபட்டு, அவமானப்பட்டு, பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைத்து அறுபது வயதில் சட்டையைக் கழற்றி இருக்கும் புகைப்படத்தையும் பார்த்து இருப்பீர்கள். தொந்தியும் தொப்பையுமாக இருப்பார். ஆம். நாற்பது வயதில் உங்களின் பல்வாளத்தேவன் உடம்பும் பளபளப்பை இழக்கும். தசைகள் தொங்கத் தொடங்கும். இதற்கும் ஒரு வழி, உடற்பயிற்சி செய்வதுதான்.


இதயம்

சாதாரணமாக 65 வயதில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் இதயம், இப்போதெல்லாம் தினகரன் நாளிதழ் படித்தாலே செயல்திறனை இழக்கத் தொடங்கிறது நாளும். காரணம், பதற்றம் கூட்டும் அறிவிப்புகளின் பாதிப்பு. ஏரோபிக் பயிற்சிகளை செய்து வந்தால் லெஜண்ட் சரவணா அதிபர் போல ஜம்மென வாழலாம்.


கிட்னி

அரைசதம் அடித்தவுடனே செயல்பாடுகள் குறைந்துவிடும். எனவே, ராஜபோக அரசி சோற்றை கைவிட்டு ஓட்ஸ் கஞ்சியை குடிக்க நீங்கள் முயற்சிக்கலாம். உடலின் உப்பைப் பிரிக்கும் திறன் குறைந்துவிடுவதால், நீங்கள் கிலோ கணக்கில் தின்னும் லேஸ் சிப்ஸ் பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த சோடியம் கொண்ட உப்பைப் பயன்படுத்தி உணவு சமையுங்கள். இதெல்லாம் பட்ஜெட்டில் செய்யவேண்டும் என்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.


மூளை

இப்போதே நேற்று சாப்பிட்ட இரவு உணவில் என்ன ஐட்டங்கள் இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறார் நண்பர் பாரதி. அவர் மாதிரியான ஆகிருதிகளை நாம் சொல்லும் உண்மைகள் அசைக்க முடியாது. எழுபது வயதில் தன் செயல்திறனை மூளை இழக்கத்தொடங்கும். செல்போன் நம்பர் முதல் இன்சூரன்ஸ் நம்பர் வரை அனைத்தும் மாயை போலத் தோன்றும். புது ஹார்ட் டிஸ்கை வாங்கும் நேரமாச்சு என நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

தோல்

பெண்களைப் பார்த்தவுடன் சூப்பர் பிகர் என வழிவதற்கு காரணம், அவர்களின் கொழுப்பு நிறைந்த தோல்தான். பதினெட்டு வயது முதல் ஆண்டுக்கு ஒரு சதவீதம் என அரசு காப்பீட்டு திட்ட அளவு போல நெகிழ்ச்சி குறைந்து கொண்டே வரும். அதனால்தான் முதிர்ந்தவர்களின் தோல் சுரைக்காயின் வழுவழுப்பைப் பெற்றுவிடுகிறது.


காது

ராஜாவின் பாடல்களை தெறிக்க தெறிக்க கேட்பவர்களுக்கும் சரி, கட்டட வேலைகள் பார்ப்பவர்களுக்கும் சரி நடப்பது ஒரே விஷயம்தான். காது 65 வயதில் தன் திறன்களை இழக்கத் தொடங்கும். இதனால் பாட்டு கேட்பவர்களுக்கு கொஞ்சம் வேகமாக மேற்சொன்ன விஷயங்கள் நடக்கும். பாட்டு, இரைச்சல், காதில் வரும் நோய்கள் எல்லாமே இதில் அடங்கும்.

எலும்புகள்

கான்க்ரீட் அளவு வலிமை என்பார்கள். அப்படியெல்லாம் நினைத்து எங்காவது முட்டி எலும்பை பெயர்த்துக்கொள்ளாதீர்கள். உயர்வு நவிற்சி அணியில் அப்படி பெருமை பேசுவார்கள். எலும்புகள் 35 வயதுக்குப் பிறகு மெல்ல தேய்மானம் அடையத் தொடங்கும். பூஸ்ட், ஹார்லிக்ஸ் என கிலோகணக்கில் சர்க்கரை பானங்களை குடித்தாலும் வேலைக்கே ஆகாது. அவை நேராக சிறுநீராக இறங்கிவிடும். உணவுப்பொருட்களாக கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். பாதிப்பை குறைக்கலாம். தவிர்க்க முடியாது.


குடல்

குடலில் சத்துக்களை உறிஞ்சும் அமைப்புகள் 65 வயதுக்குப்பிறகு போதும்பா பென்ஷன் போடு என குறைந்த உணவுகளுக்கு கெஞ்சும். அப்போதும் வே புரோட்டீன், கோழி, மட்டன், மாட்டுக்கறி, வான்கோழி கறி என நீங்கள் பிசியாக இருந்தால் நோய்கள் உறுதி.

நன்றி - டைம்










பிரபலமான இடுகைகள்