ஃபேன்டசியாக கொலை! - ஹார்வி கிளாட்மன்
அசுரகுலம்
ஹார்வி கிளாட்மன்
அமெரிக்காவிலுள்ள பிராங்ஸில் பிறந்த ஹார்வி அபார புத்திசாலி. அதற்கேற்ற பிரச்னைகளும் அவரது மூளையில் இருந்தன. அவரின் செயல்பாடுகளை கவனித்த அவரது அம்மாவுக்கு அவரிடம் ஏதோ ஒரு தவறு இருப்பதாக பட்டது. தன்னைத்தானே துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் தன்மையை எதேச்சையாகத்தான் அவர் கண்டுபிடித்தார்.
உடனே மருத்துவர்களிடம் அழைத்து சென்னார். ஆனால் அவர்கள் அவரின் மனநலன் நன்றாக இருக்கிறது. வளர்ந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும் என சினிமாவில் வருவது போலவே பேசினார்கள். வளர வளர ஹார்வியின் செயல்பாடுகள் பயமுறுத்துவது போலவே இருந்தது. பொதுவாக ஒல்லியாக பலவீனமாக இருப்பவர்களின் கனவு என்னவாக இருக்கும்? பலசாலியின் சில்லி மூக்கை உடைப்பதுதானே? இந்த விஷயத்தில் ஐக்யூ 130 புள்ளிகள் கொண்ட ஹார்வி வேறு மாதிரி யோசித்தார். பள்ளியில் சோனிப்பையனாக இருந்ததால் கிண்டல், கேலி, அடி, உதைகளை வாங்கினார். மெல்ல பெண்கள் என்றால் என்ன காரணத்தாலோ பயப்படத் தொடங்கினார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மனதளவில் மட்டுமே.
அக்காலகட்டத்தில் பெண்கள் தனியாக வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு வந்தார். அடையாளத்தை மனதில் வைத்துக்கொண்டு இரவு அங்கு சென்று பொருட்களை திருடுவது அவரது பொழுதுபோக்கு. அவ்வளவு சிரமப்பட்டு வந்து பொருட்களை திருடுகிறோம். கொஞ்சம் பொழுதுபோக்கு தேவை என அப்பெண்களை கட்டிப்போட்டு, மிரட்டி, வல்லுறவு செய்வார். இந்தப்போக்கு அவரின் பெற்றோருக்கு தெரிய வந்த போது மிரண்டு போனார்கள். உடனே அவரை கிளம்பு என்று சொல்லி மனநல மருத்துவமனைக்கு அட்மிஷன் போட்டு அனுப்பி வைத்தார்கள். எந்த பிரயோஜனமும் இல்லை. 1945 ஆம் ஆண்டு மே 18 அன்று ஓர் பெண்ணின் வீட்டை திருட முயற்சித்து மாட்டிக்கொண்டார். முதல் தர திருட்டு வழக்கு ஹார்வியின் பெயரில் பதிவானது. அவர் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் பெற்றோர் மான, மரியாதைக்கு பயந்து பிணை கேட்டார்கள். கிடைத்தது. சில மாதங்களுக்கு பிறகு மற்றொரு பெண்ணை வழிமறைத்து கசமுசாவுக்கு ட்ரைலர் கட் செய்தார். ஆனால் அப்பெண் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் போய் இன்னின்ன மாதிரி சமாச்சாரங்களை ஹார்வி செய்தார் என எழுத்து பூர்வமாக எழுத ஹார்விக்கு மீண்டும் சிறைவாசம் உறுதியானது. விரக்தியில் அவரது பெற்றோர் பிணை பெற வரவில்லை.
சிறை மருத்துவர்கள் செய்த சோதனையில் ஆளுமை பிறழ்வு, முரண்பாட்டு மனநோய் ஆகியவை ஹார்விக்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓர் நன்னாளில் தன் வல்லுறவு ஆட்டத்தைத் தொடங்கினார். பிங்க் பந்துகளில் வங்கதேச வீரர்கள் தடுமாறியது போல பெண்கள் தடுமாறினர். ஆனால் அவர் தாக்கிய இருபெண்கள் அவரின் வல்லுறவு தாக்குதலுக்கு இணங்காமல் தப்பியதோடு போலீசிலும் வலுவாக புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளினர். ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை. முன்மாதிரி கைதியாக புகழ்பெற்ற ஹார்வி 1951ஆம் ஆண்டு விடுதலை ஆனார்.
பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். டிவி பழுது பார்ப்பவராக இருந்தார். அதோடு புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டு அந்த வேலையையும் செய்து வந்தார். பெண்களை கைகளை கால்களை கட்டி வைத்து புகைப்படம் எடுப்பதை இவர் ஸ்பெஷலாக செய்தார். ஆபாச தளங்களில் பாண்டேஜ் என்று டைப் செய்தால் அது என்ன முறை என்று நீங்கள் கண்ணார பார்க்க முடியும்.
இதில் சுகம் கண்டவருக்கு முதல் பலி ஜூடித் டல் என்ற பெண்மணி. இவரின் கணவர் குழந்தையைக் கொடுத்துவிட்டு விலகிச்சென்றுவிட்டார். விவாகரத்தில் சிறு குழந்தையை தன்னோடு வைத்து வளர்க்க நினைத்தார். காசு வேண்டுமே? அப்போதுதான் ஹார்வியின் விளம்பரத்தைக் கேள்விப்பட்டார். போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் காசு. உடனே ஹார்வியின் ஸ்டூடியோவுக்கு சென்றார். ஐந்து நிமிடங்களில் கழற்றிவிடக்கூடிய ஸ்கர்டைக் கொடுத்து போடச்சொன்னார். மிரண்டு போனார் ஜூடில். காசு என ஆசை காட்டியவர், பின்னர் 32 காலிபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஜூடித்தை வல்லுறவு செய்தார். நிறைய புகைப்படங்கள் எடுத்தார். போதும் என தோன்றியபோது, ஜூடித்தை சுட்டுக்கொன்றார். உடலை பாலைவனத்தில் எறிந்தார்.
1958ஆம் ஆண்டு ஷிர்லி பிரிட்ஜ்வுட் என்ற பெண்ணை கிளப்பில் சந்தித்தார். பேசியதால் ஷிர்லி விழுந்துவிட்டார். அப்பெண்ணை துப்பாக்கி மூலம் மிரட்டி உடைகளை கழற்ற வைத்து வல்லுறவு செய்து பின் கொன்றார். இதுபோல இரண்டு பேரைக் கொன்றார். ஆனால் மாடல் அழகி லோரைன் விஜில் என்ற பெண்ணை மிரட்டும் போது அப்பெண் போலீசிடம் புகார் கொடுக்க ஹார்வி மாட்டிக்கொண்டார். அவர் எடுத்த புகைப்படங்களே அவருக்கு விரோதியாயின. பெண்களைபுதைத்த இடங்களையும் எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆராக சொல்லி விட்டார்.
சயனைட்டு விஷத்தை சுவாசித்து சாகும்படி தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் பெற்றோர் மனநல நோயாளி என்றாலும் நீதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 31 வயதில் மூன்று கொலைகளைச் செய்து மரணதண்டனை பெற்றுவிட்டார் ஹார்வி.
வின்சென்ட் காபோ
கிரிமினல்மைண்ட்ஸ் வலைத்தளம்.