பாசிசத்தை தூண்டும் ஃபேஸ்புக்- முகநூலின் மறுபக்கம்!


Image result for real face of facebook in india


ரியல் ஃபேஸ் ஆஃப் ஃபேஸ்புக் இன் இந்தியா

பரன்ஜோய் - சிரில் சாம்

இந்தியாவில் 2004 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளத்தினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைவரையும் இணைக்கிறோம் என்று ஃபேஸ்புக் சொன்னாலும், உண்மையில் மக்கள் இன்று தம்மைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. அப்படியொரு பயத்தை ஃபேஸ்புக்கும் அதன் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப்பும் உருவாக்கியுள்ளன. இப்படி கூறிய சிரில் சாம், பரன்ஜோய் ஆகிய இருவரும் அதற்கான தகவல்களை அடுக்குகின்றனர்.

இவர்கள் கூறும் எதனையும் மறுக்க முடியவில்லை என்பது முக்கியமானது. எப்படி பாஜக, காசு கொடுத்து ஃபேஸ்புக் மூலம் திட்டமிட்ட பொய் செய்திகளை, போலி வீடியோக்களை உருவாக்கி மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகின்றன என்பதை விளக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் கிஷோர் என்ற டெக் நபரின் பங்கும் முக்கியமானது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி நினைவிருக்கிறதா...... பிளான் பெத்த பிளான்தான். ஆனால் கொஞ்சமேனும் நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்து வைப்பதில் அன்புமணி தடுமாறிவிட்டார். வீழ்ந்துவிட்டார். இதனால் முதல் கையெழுத்தை இன்னும் அவர் செக் புக்கில் மட்டும் போட்டுக்கொண்டிருக்கிறார்.

மோடி, குஜராத்தில் பதவிக்கு வந்தபிறகு தன்னை பிரதமராக மாற்றத் தேவையான விஷயங்களை டெக் குழு மூலம் செய்து வந்த உண்மையை நூல் உடைத்துப் பேசுகிறது. பகிரங்கமாகவே அமித் ஷா, வாட்ஸ்அப் மூலம் தேர்தலில் வெல்வோம், உண்மை, பொய் என்பதையெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை என தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஏறத்தாழ அவரது தொண்டர்கள் அதனை சரியாக புரிந்துகொண்டனர். இதற்கு புல்வாமா தாக்குதல், கத்துவா குழந்தை கற்பழிப்பு ஆகிய சம்பவங்கள் உதாரணம். உணர்ச்சிக்கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோக்கள், பதிவுகள் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் அனுப்ப ப்பட்டன.

அறமற்ற வழியில் இதன்மூலம் லாபம் சம்பாதித்த ஃபேஸ்புக் இன்றும் தாங்கள், விதிகளின்படி செயற்படுவதாக கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவுக்கு எதிரான செயல்பாட்டாளர்களின், பத்திரிகைகளின் ஃபேஸ்புக் கணக்குகளை 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது திட்டமிட்டு முடக்கிய செய்திகள் சந்தேகத்தீயை உருவாக்குகின்றன. இனியும் சமூக வலைத்தளங்கள் ஆட்சி செலுத்துபவையாகவே இருக்கும். காரணம், அதில் மக்கள் புழங்குகின்றனர். அதில் ஆதிக்கம் செய்யும் கட்சிகளே வெல்ல முடியும். அதைத்தான் இந்த நூல் அழுத்தமாக சொல்கிறது. கூடுதலாக பல்வேறு நாடுகளில் அதாவது, இந்தியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பாசிச கொள்கை கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு சர்வாதிகார
நிலையை உருவாக்க ஃபேஸ்புக் பாடுபட்டு வருகிறது. எனவே நாம் எப்படி கவனமாக இருக்கவேண்டும் என்பதையும் இந்நூலை வாசிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.


நன்றி - கே.என். சிவராமன், குங்குமம் முதன்மை ஆசிரியர்.