இந்திய அரசின் இ சந்தை! - வெளிப்படையான அரசு சந்தை!
அரசின் இ சந்தை - GeM
இந்திய அரசு, அரசுத்துறைகளுக்கான பொருட்களை அனைவரும் அறியும்படி எளிய முறையில் வாங்குவதற்கான சந்தையை தொடங்கியுள்ளது. இதற்குப் பெயர் GeM ஆகும். பல்வேறு கட்டங்களாக இ சந்தை வலைத்தளத்தை அரசு மேம்படுத்தி வருகிறது. சிறு,குறு தொழில்களை செய்து வருபவர்கள், இத்தளத்தில் வியாபாரியாக பதிவு செய்துகொண்டு பொருட்களை அரசு துறைகளுக்கு விற்று பயன் பெறலாம்.
நோக்கம்!
அரசின் இ சந்தை வலைத்தளத்திற்கான திட்டவரைவு 2016- 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று, இ சந்தைக்கான திட்ட வரைவை வெளியிட்டார்.
வெளிப்படையான முறையில் சரியான விலையில் பொருட்களை அரசுத்துறைக்கு கொள்முதல் செய்யும் சிந்தனையில் அரசின் இ சந்தை உருவாகியுள்ளது. இதன் இயக்குநராக பொதுத்துறையில் 32 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு. தலீன் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், கோல்கட்டாவின் வருவாய்துறையில் நிதியை உயர்த்த பாடுபட்டுள்ளார். இந்திய மாநிலங்களிலுள்ள பொருளாதார மையங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
செயல்பாடு!
இதில் இணைந்துள்ள வியாபாரிகள், நிறுவனங்கள், வர்த்தக மதிப்பு பற்றி பார்ப்போம். 40,183 வியாபார நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன. 2,97,560 விற்பனை நிறுவனங்கள், சேவை அமைப்புகள் இதில் உள்ளன. 14,59,339 பொருட்கள் இங்கு விற்பனைக்கு உள்ளன. 37,417 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் இங்கு நடைபெற்றுள்ளது.
என்ன பயன்?
அமேசான், ஃபிளிப்கார்டில் பொருட்களை வாங்கியிருப்பீர்கள். அங்கு நமக்கு விழாகாலங்களைப் பொறுத்து நிறைய தள்ளுபடி கிடைக்கும். அதேபோல, அரசு நேரடியாக வலைத்தளத்தின் மூலம் பொருட்களை பதிவு செய்த வியாபாரிகளிடம் வாங்குவதால் ஊழல் தவிர்க்கப்படுகிறது. சரியான, தரமான பொருட்கள் அரசு துறைகளுக்கு கிடைக்கும். காகிதமற்ற, பணமற்ற நேர்மையான வணிகம் அரசின் இ சந்தைக்கு பலம். இதில் நடைபெறும் வர்த்தகங்கள் கண்காணிப்பதும் அரசுக்கு சுலபம் என பல சாதகமான அம்சங்கள் உண்டு. மேலும் சிறு,குறு தொழிலகங்கள் இதன் மூலம் நேர்மையான போட்டியிட்டு தம் பொருட்களை அரசுக்கு விற்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
நன்றி:
தினமலர் பட்டம்